சின்னத்திரை நடிகை மகாலட்சுமி – திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர் பப்லு – ஷீத்தல் திருமணங்களைத் தொடர்ந்து ‘ஏஜ் கேப் ரிலேசன்ஷிப்’ சமூக வலைதளங்களில் டிரண்டிங் ஆனது. 24 வயதாகும் ஷீத்தலை திருமணம் செய்துகொண்டதைக் குறித்து, 54 வயதாகும் பப்லு, “காதலுக்கு வயதில்லை” என்றதுடன், ‘தினம் எனக்கு பெண் சுகம் தேவைப்படுகிறது’ என்கிறார். காதலுக்கு வயதில்லை தெரியும், காமத்துக்கும் வயதில்லையா?
விளக்கமளிக்கிறார் பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் நாராயணரெட்டி.
“ஒரு ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாக காதலில் ஈடுபடும்போது அங்கே வயதுக்கு சம்பந்தம் கிடையாது. இங்கே நமது உணர்ச்சிகள்தான் பிரதான பங்கு வகிக்கின்றன. அதுபோல் காமத்திலும் உணர்வுகள்தான் பங்கு வகிக்கின்றன. அதன் வேர் நமது மூளையில் இருக்கிறது. காம உணர்வுகளுக்கு காலாவதி தேதி கிடையாது. ஒரு ஆணோ பெண்ணோ தன் கடைசி மூச்சு வரைக்கும் ஆரோக்கியமாக இருந்தால், பாலுறவு பற்றிய எண்ணங்கள் வரும், உடலுறவிலும் ஈடுபட முடியும்.
அதேநேரம், அந்த உணர்வுகளால் தூண்டப்பட்டு உடலுறவில் ஈடுபட முயற்சிப்பவர்களுக்கு அதற்கு ஏற்ப உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நமக்கு வயதாக வயதாக உடல் இளமையில் இருந்த தெம்புடன் வேலை செய்யாது. 20 வயதில் ஒரு மனிதன் மாடிப்படி ஏறும் வேகத்துக்கும், அதே மனிதன் 40 வயதில் ஏறும் வேகத்துக்கும் வித்தியாசம் உள்ளது. 60 வயதில் மிக சிரமப்பட்டுதான் மாடிப்படிகள் ஏற முடியும். ஆம், வயதாக வயதாக உடல் திறன் குறைந்துகொண்டே வரும். இது உடலுறவுக்கும் பொருந்தும்.
18 வயதில் இருக்கும் ஒரு ஆணுக்கு காம உணர்வை தூண்டுவதற்கு ஒரு பெண்ணின் புகைப்படமே போதுமாக இருக்கும். 30 – 35 வயதில் ஒரு பெண்ணே தேவையாக இருக்கும். 60 வயதில் இந்த தூண்டுதல் மிக தீவிரமாக தேவைப்படும். அந்த தூண்டுதல் இருந்தால்தான் விறைப்பு தன்மை வரும். என்றும் பதினாறிலேயே நாம் இருக்க முடியாது. ஆனால், உடற்பயிற்சிகள் செய்து நமது உடலை கச்சிதமாக வைத்துக்கொண்டால், 60இலும் உடலுறவில் ஈடுபடுவதற்கான தெம்பு இருக்கும். அந்தவகையில் பப்லுவை பாராட்டத்தான் வேண்டும்.
DHEA (Dehydroepiandrosterone) என்ற ஹார்மோன் நமது உடலில் உள்ளது. அட்ரீனல் சுரப்பியில் உற்பத்தி செய்யப்படும் இந்த ஹார்மோன் தான் எல்லா ஹார்மோன்களுக்கும் தாய். இது பாலியல் உணர்வுகளை தூண்டிவிடக்கூடியது. இது உடற்பயிற்சிகளின் போது அதிகமாக சுரக்கும். எனவே, அந்த நேரம் காம உணர்வுகள் மேலே வரும். ஆனால், அதிக நேரம் இருக்காது, குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் இருக்கும். அது பப்லுவுக்கு உதவியிருக்கலாம்.
54 வயதானாலும் நான் 20 வயது பையனுக்கு சவால்விடும் அளவு உடலை கச்சிதமாக வைத்துள்ளேன் என்ற பப்லுவின் தன்னம்பிக்கையும், வயதுக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் கிடையாது; தன்னைவிட 30 வயது குறைந்த 24 வயது பெண்ணை தன்னால் திருப்திபடுத்த முடியும் என்ற அவரது நம்பிக்கையும் பாராட்டப்பட வேண்டியது.
சரி, மனைவிக்கு வயது அதிகமாக இருந்தால்…
பொதுவாக நமது ஊரில் அதிக வயது பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்டால் அது ஆணின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவும் தவறானது.
கணவனுக்கு வயது குறைவாகவும் மனைவிக்கு வயது அதிகமாகவும் இருப்பதை மே – டிசம்பர் ரிலேஷன்ஷிப் என்போம். கணவனுக்கு வயது அதிகமாகவும், மனைவிக்கு வயது குறைவாகவும் இருக்கையில், எப்படி மனைவிக்கு எந்தப் பிரச்னையும் வராதோ, அதேபோல மனைவிக்கு வயது அதிகமாக இருந்தாலும் கணவனுக்கு மருத்துவரீதியாக எந்தப் பிரச்னையும் வராது என்பதே உண்மை.
பெண்ணை பொறுத்தவரைக்கும் வயது குறைவான கணவன் அமைந்தால், அவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கை கூடுதல் இனிமையாக இருக்கும்.
பப்லு – ஷீத்தல் போல் ஒருவேளை வயது இடைவெளி சற்று கூடுதலாக இருந்தால், பெண்ணுக்கு வயதாக வயதாக ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறையும்போது, அவருடைய பிறப்புறுப்பில் வழுவழுப்புத்தன்மையும் குறையும். இதைச் சரிசெய்வதற்கு, உறவின்போது கணவன், மனைவிக்குக் கூடுதலாகத் தூண்டுதல் கொடுக்க வேண்டும். லூப்ரிகேஷன் க்ரீம்களையும் பயன்படுத்தலாம்.
கணவன் – மனைவி இடையே எத்தனை எத்தனையோ உணர்வுரீதியான பகிர்தல்கள் இருக்கும். அவையெல்லாம் சரியாக இருந்தால், உடலுறவில் வயது வித்தியாசம் ஒரு விஷயமே கிடையாது.
பொதுவாக, வயதான ஆணுக்கும் சரி, வயதான பெண்ணுக்கும் சரி காம உணர்வுகள் இருக்காது; வயதானால் உடலுறவு தேவையில்லை என்று ஒரு தவறான கண்ணோட்டம் நம் சமுதாயத்தில் உள்ளது. அதன் வெளிப்பாடுதான் பப்லு வயதில் இருக்கும் ஒருவர் திருமணம் செய்யும்போது, இந்த வயதில் உடலுறவு தேவையா என்ற கேள்வியாக எழுகிறது. காம உணர்வு என்பது மனிதனின் கடைசி மூச்சு வரை இருக்கும் என்ற புரிதல் இருந்தால் இந்த கேள்வி வராது.
நான் 2005 முதல் 2015 வரையான 10 வருடங்களில் 50 வயது முதல் 91 வயது வரையான வயதுகளில் இருப்பவர்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டேன். இதற்காக 15 ஆயிரம் பேரிடமாவது பேசியிருப்பேன்.
என் ஆய்வின் முடிவில், 50 முதல் 59 வயது வரை இருப்பவர்கள் மாதத்துக்கு 10 முறையாவது உறவு வைத்துக்கொள்கிறார்கள் என்று தெரியவந்தது. 50 வயதாகிவிட்டாலே, அவர்கள் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிற கருத்தில் உண்மையில்லை என்பதையே இது காட்டுகிறது. மேலும், இது ஏதோ ஒரு மேலை நாட்டில் நடக்கவில்லை, நம்மூரிலேதான் நடந்துகொண்டிருக்கிறது.
ஆனால், நாம் என்ன செய்கிறோம் வயதான அம்மா – அப்பாவுக்கும் தாத்தா – பாட்டிக்கும் உடலுறவு தேவையில்லை என்று அதை தடை செய்கிறோம். உண்மையில் இதுதான் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட காரணமாகிவிடுகிறது. வயதானவர்களின் திருமணம் தாண்டிய உறவுக்கும், குழந்தைகளிடம் வயதானவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதற்கும்கூட இது ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. ஆம், காம உணர்வுகளுக்கு வடிகால் வேண்டும். அந்த உணர்வு இயல்பாக எழுவது. எந்த வயதாக இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தக்கூடாது.
‘பாலியல் எண்ணங்களை அடக்கிவைத்தால் தவறான பாதைக்கு வழிவகுக்கும்’ என்று 4-வது நூற்றாண்டில் வாழ்ந்த வாத்ஸ்யாயனர் கூறியுள்ளார். அதையேதான் நவீன கால மனோதத்துவத்தின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட், ‘செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால், அது மனதை பாதிக்கலாம் அல்லது உடலை பாதிக்கலாம் அல்லது இரண்டையும் பாதிக்கலாம்!’ என்று கூறுகிறார்.
பசி, தூக்கம் போலவே பாலுறவும் ஓர் உயிரின் அடிப்படை உணர்வு. அது எல்லா வயதினருக்கும் இருக்கும்’ என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.