2022-ம் ஆண்டில் தங்கள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் யார் என்ற பட்டியலை கூகுள் இணையதளம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நபராக நுபுர் சர்மா இருக்கிறார். பாஜகவைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியான இவர், தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் முகமது நபிகளைப் பற்றி தெரிவித்த கருத்துகள் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இவர் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் இந்தியாவில் பலர் இவரைப் பற்றி தேடியிருப்பதாக கூகுள் இணையதளம் தெரிவித்துள்ளது.
நுபுர் சர்மாவுக்கு அடுத்தபடியாக இந்திய ஜனாதிபதியாக இந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவை அதிகம் பேர் தேடியுள்ளனர். இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்ட இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரான ரிஷி சுனாக் இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறார்.
இந்த பட்டியலில் இவர்களுக்கு அடுத்தபடியாக லலித் மோடி (தொழிலதிபர்), சுஷ்மிதா சென் (நடிகை), அஞ்சலி அரோரா (கச்சா பதாம் பாடலுக்கு நடனம் ஆடியவர்), அப்து ரோசில் (இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்), ஏக்நாத் ஷிண்டே (மகாரஷ்டிர முதல்வர்), பிரவீன் தம்பே (கிரிக்கெட் வீரர்), ஆம்பர் ஹெர்ட் (ஜானி டெப்பின் முன்னாள் மனைவி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Pele to Neymar – ஒரு கால்பந்து கடிதம்
குரோஷிய அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் தோற்றதால் உறைந்து போயிருக்கிறது பிரேசில். இந்த தோல்வியின் மூலம் 2002-ம் ஆண்டுக்குப் பின் உலகக் கோப்பையை வெல்லும் பிரேசிலின் கனவு தகர்ந்து போயிருக்கிறது. பிரேசில் அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை இந்த போட்டியின்போது பீலேவிடம் இருந்து தட்டிப் பறித்தார் நெய்மர். ஆனாலும் பிரேசிலின் தோல்வியால் அந்த சாதனையைக் கொண்டாடும் மனநிலையில் அவர் இல்லை.
நெய்மரும் பிரேசிலும் இப்படி தகர்ந்து போயிருக்கும் நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பீலே, நெய்மருக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். “சிறுவயதில் இருந்து உன் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். பிரேசில் அணிக்காக அதிக கோல்களை அடித்தவன் என்ற என் சாதனையை நீ முறியடித்ததில் மகிழ்ச்சி. 50 ஆண்டுகளுக்கு முன் நான் படைத்த சாதனையை இதுவரை யாரும் நெருங்கியதுகூட இல்லை. இப்போது நீ அதை முறியடித்திருக்கிறாய்.
மற்றவர்களுக்கு உற்சாகமளித்து அவர்கள் மேலும் முன்னேற தூண்டுகோலாக இருப்பதே எப்போதும் நம் கடமையாகும். துரதிருஷ்டவசமாக இந்த நாள் நமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. இருந்தாலும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உந்துசக்தியாக நீ இருப்பாய் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று அந்த செய்தியில் பீலே குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனி தோற்றது ஏன்?
இந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியிருக்கிறது ஜெர்மனி. ஜெர்மனி அணி வீரர்களின் மனைவிகளும், காதலிகளும்தான் இந்த தோல்விக்கு காரணம் என்று புதிதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ‘பில்ட்’ என்ற ஜெர்மன் பத்திரிகைதான் இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.