வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலி: தூத்துக்குடியில் உள்வாங்கிய கடல்
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 3-வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் படகுகள் அனைத்தும் துறைமுகத்திலும், கடற்கரை பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று அதிகாலை முதலே கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார் 3 அடி உயரத்துக்கு அலைகள் சீறி எழுந்தன. தொடர்ந்து தூத்துக்குடி கடற்கரை சாலையில் ரோச் பூங்கா பகுதியில் திடீரென கடல் உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 30 அடி நீளத்திற்கு கடல் உள்வாங்கியதால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதனால் கடற்கரை பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள், “இதுபோன்று அவ்வப்போது கடல் உள்வாங்குவது சாதாரணமானது தான்” என்று கூறியுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ் கூடுதல் மனு தாக்கல்
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ” நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுத்து வருகிறார். தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலயே, அதன் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை விதித்து வருகிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
நாப்கின்களில் நச்சு ரசாயனங்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டெல்லியைச் சேர்ந்த ‘டாக்ஸிக்ஸ் லிங்க்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியாவில் விற்கப்படும் சானிட்டரி நாப்கின்களில் தாலேட்ஸ் (phthalates), விஓசி (VOC) போன்ற ஆபத்தான ரசாயனங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் இந்தியாவில் பிரபலமாக விற்கப்படும் 10 நாப்கின்கள் சோதிக்கப்பட்டது. 10 வகையான நாப்கின்களிலும் வெவ்வேறு விதமான அளவில் தாலேட்ஸ், விஓசி இரண்டும் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘தாலேட்ஸ் என்பது ஒருவித பிளாஸ்டிக்; இது நாப்கின்களுக்கு அதிக வளைவுத் தன்மையை வழங்கவும் நீடித்து வருவதற்காகவும் சேர்க்கப்படுகிறது. ஆனால், தாலேட்ஸால் இதயத்தில் பாதிப்பு, நீரிழிவு, இனப்பெருக்க அமைப்பில் தாக்கம், சில வகையான புற்றுநோய்கள் போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.
விஓசி (வோலடைல் ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ்) என்பதன் கீழ் பல ரசாயனங்கள் வரும். அந்த ரசாயனங்கள் பல்வேறு தீங்குகளை உருவாக்கக் கூடியவை. விஓசி ரசாயனங்களால் மூளை குறைபாடு, ஆஸ்துமா, சில வகையான புற்றுநோய், குழந்தை பெறுவதில் சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன’ எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இரவில் இரு முறை: உறவுக்கு மறுத்த மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர்
உத்தரபிரதேச மாநிலம் அம்ரொஹா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் (வயது 34), இவரது மனைவி ருக்ஷர் (வயது 30). 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அன்வர் தனது மனைவி ருக்ஷருடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். உறவுக்கு பின்னர் ருக்ஷர் உறங்கியுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் உறவுக்கு வருமாறு ருக்ஷரை அன்வர் அழைத்துள்ளார். அதற்கு ருக்ஷர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அன்வர் தனது மனைவி ருக்ஷரை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், உடலை பிளாஸ்டிக் கவரில் கட்டிய அன்வர் அதை அதிகாலை தனது கிராமத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலையில் உள்ள ரதுபுரா என்ற கிராமத்தில் சென்று வீசியுள்ளார். பின்னர், காலை தனது மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், போலீசார் விசாரணையில் அன்வரே மனைவியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உண்மையை ஒப்புக்கொண்ட அன்வர், ஒரே இரவில் இரு முறை உறவுக்கு வர மறுத்ததால் மனைவி ருக்ஷரை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அன்வர் ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு அன்வரின் சகோதரன் டேனிஷ் என்பவரும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மனைவியை கொலை செய்த அன்வர் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் டேனிஷை கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.