திருச்சி சூர்யா சிவா – டெய்சி சரண் ஆபாச ஆடியோ பேச்சு தமிழ்நாட்டு பாஜகவில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
ஆபாச ஆடியோவுக்குப் பிறகு இருவரும் ஒன்றாய் அமர்ந்து நாங்கள் அக்கா தம்பி போல் பேசிக் கொண்டோம் என்று சொன்ன பிறகும் பிரச்சினை முடியவில்லை.
நேற்று சூர்யா சிவா கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தார். அந்த ட்விட்டர் பதிவில் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துவிட்டு, கட்சியின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட்டால்தான் பாஜக வளரும் என்று குறிப்பிட்டிருந்தார்.
நேற்று மாலையே இன்னொரு ட்விட்டர் பதிவையும் வெளியிட்டார் சூர்யா சிவா. அண்ணாமலைக்கு எழுத்தப்பட்ட அந்தக் கடிதத்தில் எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகத்தை விமர்சித்திருந்தார். நீங்கள் இருவரும் தலையீடு செய்யாமல் இருந்தால் அண்ணாமலை கட்சியை சிறப்பாக வழிநடத்துவார் என்று குறிப்பிட்டிருந்தார். தலைவர் அண்ணாமலை வழியில் குறுக்கிடாதீர்கள், காயத்ரி, டெய்சி போன்றவர்களை வைத்து ஆட்டம் காட்டாதீர்கள் என்றும் எழுதியிருந்தார். காயத்திரி பெயரை குறிப்பிடும்போது அடைப்புக் குறியில் L.M என்றும் டெய்சி பெயரைக் குறிப்பிடும்போது KV என்றும் அடைப்புக் குறியில் கூறியிருந்தார்.
LM என்றால் எல்.முருகன், KV என்றால் கேசவ விநாயகம் என்றும் புரிந்துக் கொள்ளலாம்.
இந்தக் கடிதம் தமிழ்நாட்டு பாஜகவில் மேலும் பிரச்சினைகளை எழுப்பியிருக்கிறது.
திருச்சி சூர்யா சிவா கடந்த மே மாதம்தான் பாஜகவில் இணைந்தார். திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனான சூர்யா பாஜகவில் இணைந்தது பெரிய விஷயமாக அப்போது பேசப்பட்டது. கட்சியில் அண்ணாமலை பக்தராகவே கட்சியில் வலம் வந்தார். அண்ணாமலையின் முழு ஆதரவு அவருக்கு இருந்தது. அவரது ஆதரவு முழுமையாக இருக்கிறது என்பதற்கு காயத்ரி ரகுராம் சம்பவமே ஒரு உதாரணம்.
ஆபாசமாய் பேசிய சூர்யா சிவா கட்சிப் பொறுப்புகளிலிருந்து மட்டும் 6 மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் பொதுவெளியில் கருத்துகளை தெரிவித்தார் என்று காயத்ரி ரகுராமை 6 மாதங்கள் கட்சியிலிருந்தே இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தப் பிரச்சினைகளின் மையப் புள்ளியாக அண்ணாமலை மட்டுமல்ல கேசவ விநாயகமும் இருக்கிறார்.
திருச்சி சூர்யாவின் ஆபாச வீடியோவிலும் கேசவ விநாயகத்தை கொச்சையாக குறிப்பிடுகிறார். அவரது ட்விட்டர் பதிவுகளிலும் கட்சியின் பிரச்சினைகளுக்கு கேசவவிநாயகத்தை சுட்டிக் காட்டுகிறார்.
சூர்யா சொல்வது போல் கேசவ விநாயகம் அத்தனை கெட்டவரா? என்ற கேள்விக்கு ஆபாச ஆடியோ டெய்சி சரண் ஒரு பேட்டியில் பதிலளித்திருக்கிறார்.
அவர் அளித்த பதில் இதுதான். கேசவ விநாயகம் முன் ஒரு பெண் அவிழ்த்துப் போட்டு நின்றால்கூட திரும்பிப் பார்க்க மாட்டார்.
நாயகன் படத்தில் ஒரு வசனம் வரும். நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்று. அதுபோல் இப்போது பாஜக கேசவ விநாயகத்தை நோக்கி கேள்விகள் எழுந்திருக்கிறது.
கேசவ விநாயகத்தை பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் பாஜகவின் நடைமுறை அமைப்பு குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும்,
பாஜகவில் தலைவர்கள் இருந்தாலும் அந்தக் கட்சியை கட்டுப்படுத்தி வழிநடத்துவது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்தவர்களே. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு தலைவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு சமமாக அல்லது அவர்களைவிட அதிகாரமிக்கவர்களாக அந்த மாநிலத்துக்கு பாஜகவின் அமைப்பு செயலாளர்கள் இருப்பார்கள். இந்த அமைப்பு செயலாளர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். கட்சியின் அன்றாட நிகழ்வுகளை கவனிப்பது, கட்சியின் செயல்பாடுகளைக் குறித்து தலைமைக்கு குறிப்புகள் அனுப்புவது போன்ற காரியங்களை செய்வது அமைப்பு செயலாளர்தான். பாஜகவின் மாநிலத் தலைவர்கள் இந்த அமைப்புச் செயலாளரை அனுசரித்துதான் நடந்துக் கொள்ள வேண்டும். வெளியில் தெரியாத அதிகாரமிக்க பதவி இந்த அமைப்புச் செயலாளர் பதவி.
அந்தப் பதவியில்தான் இங்கு கேசவ விநாயகம் இருக்கிறார்.
இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இயங்கி வருகிறார். கன்னியாகுமரிக்காரர். சாதாரண நிலையிலிருந்து இன்று அமைப்புச் செயலராக உயர்ந்திருக்கிறார்.
அவரைக் குறித்து பாஜகவினரிடம் விசாரித்தோம். இரு வேறு கருத்துக்கள் வருகின்றன.
அவர் மிகவும் நல்லவர். ஊழல் அற்றவர். கட்சியின் கொள்கைகளுக்கு மட்டுமே மதிப்பு கொடுப்பவர். பெண்களிடம் மரியாதையாக நடந்துக் கொள்பவர். தனி மனித துதிகளை விரும்பாதவர். வளர வேண்டியது கட்சிதான், தனி மனிதர் அல்ல என்று அடிப்படையில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர்.
அண்ணாமலை கட்சியை முன்னிலைப்படுத்தாமல், மூத்தவர்களுக்கு உரிய இடம் கொடுக்காமல் தன்னை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொள்வது கேசவ விநாயகத்துக்குப் பிடிக்கவில்லை. அது மட்டுமில்லாமல் கட்சியில் புதியவர்களை இணைக்கும்போது கவனமாய் இணைக்க வேண்டும், கொள்கை பிடிப்புடன் இருப்பவர்களை மட்டும் இணைத்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பவர். இதனாலேயே அண்ணாமலைக்கும் அவருக்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன, கட்சியின் மூத்த தலைவர்கள் கேசவவிநாயகத்தை முன்னிறுத்தி அண்ணாமலையின் வளர்ச்சிக்கு தடை போடுகிறார்கள். என்று கூறுகிறார்கள்.
கேசவ விநாயகத்துக்கு எதிராக கருத்துக்கள் கூறுபவர்களும் இருக்கிறார்கள். அமைதியானவர்தான் ஆனால், பின்னால் குழி பறித்துவிடுவார். பெண்கள் விஷயத்தில் மோசம், வேலூரிலும் திருச்சியிலும் அவர் மீது புகார்கள் வந்தன. பழைய பாணியிலேயே கட்சியை நடத்துவார். அண்ணாமலையின் அதிரடி அரசியல் அவருக்குப் பிடிக்கவில்லை என்றெல்லாம் கூறுகிறார்கள்.
தற்போது தமிழக பாஜகவின் தலைவராக இருக்கும் அண்ணாமலை, 2020 ஆகஸ்ட் மாதம்தான் கட்சியில் இணைந்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜூலை மாதம் தமிழ்நாடு பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியில் இணைந்து ஒரு வருடம் ஆவதற்கு முன்பே கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் அவருக்கு முழுமையான் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் டெல்லி மேலிடத்தின் ஆதரவு இருந்ததால் அண்ணாமலையால் வேகமாய் செயல்பட முடிந்தது.
பொதுவாய் பாரதிய ஜனதா கட்சியை பி்ராமணர்களின் கட்சி என்று தமிழ்நாட்டில் முத்திரை குத்துவார்கள். அந்த முத்திரையை அகற்ற தமிழிசை சவுந்தரராஜன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பிறகு தலித் சமூகத்தை சார்ந்த எல்.முருகன் தலைவரானார். அவருக்குப் பிறகு அண்ணாமலை தலைவராக வந்தார். பிரமாணர் அல்லாத தலைவர் இத்தனை வேகமாக செயல்படுவது கட்சியில் இருக்கும் பிரமாணத் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு கே,டி.ராகவன் ஆபாச வீடியோ, திருச்சி சூர்யா, டெய்சி சரண் ஆபாச ஆடியோ, கேசவ விநாயகம் ஆபாச குற்றச்சாட்டு என தமிழ்நாட்டு பாஜக சர்ச்சைகளுடனே பயணித்துக் கொண்டிருக்கிறது.