சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளும் மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது.
பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை வாங்குமாறு மக்களிடம் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக சுவிட்சர்லாந்து அரசு மின்சார வாகனங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன்மூலம் மின்சார வாகனங்களுக்கு தடை விதித்துள்ள முதல் நாடாக சுவிட்சர்லாந்து உருவடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்து அரசின் இந்த தடைக்கு காரணம் மின்சார பற்றாக்குறை. தங்கள் நாட்டின் மின் தேவைகளை சமாளிக்க ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளையே சுவிட்சர்லாந்து சார்ந்துள்ளது. அந்த நாடுகளில் இருந்து பெறும் மின்சாரத்தை வைத்தே தங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்த இரு நாடுகளிலும் இப்போது இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கே மின்சாரம் குறைவாக இருப்பதால் சுவிட்சர்லாந்துக்கு மின்சாரத்தை சப்ளை செய்வதில் அந்நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதித்துள்ளது சுவிட்சர்லாந்து.
ஐரோப்பாவின் குடிகார நாடு
உலகிலேயே குடிகாரர்கள் அதிகம் இருக்கும் கண்டமாக ஐரோப்பா உள்ளது. இதில் ஐரோப்பாவில் அதிக குடிகாரர்களைக் கொண்ட நாடு எது என்பது பற்றிய ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. Organisation for Economic Co-operation and Development என்ற அமைப்பு நடத்திய இந்த ஆய்வில், ஐரோப்பிய கண்டத்திலேயே அதிக குடிகாரர்களைக் கொண்ட நாடு லாத்வியா என்று தெரியவந்துள்ளது.
லாத்வியா நாட்டு குடிமக்கள் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 12.1 லிட்டர் மதுவைக் குடிப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. லாத்வியாவுக்கு அடுத்த இடத்தில் செக் குடியரசு உள்ளது. இந்நாட்டைச் சேர்ந்த மக்கள் சராசரியாக 11.6 லிட்டர் மதுவைக் குடிக்கிறார்கள். 11.4 லிட்டர் மதுவை சராசரியாக குடிக்கும் மக்களைக் கொண்ட லித்வேனியா இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
தலைமுடியை மறைக்காததால் வீடு இடிப்பு!
ஹிஜாப் தடைக்கு எதிராக ஈரானில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த தடைக்கு எதிராக உலகக் கோப்பை கால்பந்தில் ஆடிய ஈரான் வீரர்கள் தேசிய கீதம் பாடாமல் இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த கால்பந்து வீரர்களைப் போலவே, சமீபத்தில் தென் கொரியாவில் நடந்த சர்வதேச விளையாட்டு போட்டியில் தலைமுடியை மறைக்கும் உடையை அணியாமல் பங்கேற்றுள்ளார் ஈரானின் விளையாட்டு வீராங்கனையான எல்நாஸ் ரெகாபி.
ரெகாபியின் இந்த நடவடிக்கையை பாராட்டும் விதமாக போட்டி முடிந்து நாடுதிரும்பிய அவருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பை ஈரானிய மக்கள் அளித்தனர். இதனால் கோபமடைந்த ஈரான் அரசு, அவரது குடும்ப வீட்டை இடித்துள்ளது. இதற்கு எதிராக மக்கள் குரல்கொடுக்க, உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாலேயே ரெகாபியின் வீட்டை இடித்ததாக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதேநேரத்தில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதையொட்டி, 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதைக் கண்காணிக்கும் சிறப்புக் காவல் படையை ஈரான் அரசு தற்போது கலைத்துள்ளது.