No menu items!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த அவை மற்றும் நாட்டின் சார்பாக சபாநாயகர் ஜக்தீப் தங்கருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கிறேன். நாடு 75-வது சுதந்திர தினம் கொண்டாடும்போதும், ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்கும்போதும் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. நமது ஜனாதிபதி திரவுபதி முர்மு பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கு முன், நமது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமூகத்தில் நலிவடைந்த பிரிவை சேர்ந்தவர். தற்போது நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன். நமது துணை ஜனாதிபதிக்கு சட்டத்துறையிலும் நல்ல அறிவு உள்ளது’ என்றார்.

கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாவட்ட செயலாளராக கோவை செல்வராஜ், கடந்த 3-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகினார். இந்த நிலையில், முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், “நான்கரை ஆண்டு ஈபிஎஸ் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது. அதிமுக கட்சி தற்போது கம்பெனியாகி விட்டது. அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 14 வயதில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்ட நான் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்துள்ளேன்.

தமிழக மக்கள் நலன் கருதி திமுகவில் இணைந்துள்ளேன். இலவச மின்சாரம் மூலம் விவசாயிகள் வாழ்வில் முதல்வர் ஒளியேற்றி வைத்துள்ளார். சமூக நீதி பாதுகாவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செயல்பட வந்துள்ளேன்” என்றார்.

நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்

வேளாண் துறை சார்பில் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலத்தில் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நடமாடும் காய்கனி அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது சென்னையில் இருந்து தென் கிழக்கில் 830 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து நகர்ந்து இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக 8-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

9 -ம் தேதி தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும். வட தமிழக பகுதிகளில் அதீத கனமழை பெய்யும். 10-ம் தேதி தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும். 11-ம் தேதி வட உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும். மொத்தத்தில் தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...