குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின் 2-வது கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை நிறைவடைந்தது. இத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.
குஜராத் சட்டமன்றத்திற்கு இரண்டாவது கட்டமாக இன்று 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் அமைக்கப்பட்ட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி இன்று காலை வாக்களித்தார். பிரதமர் மோடி வாக்களிக்க வருகை தந்ததால் அங்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பிரதமரைக் காண அங்கு பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். வாக்குச்சாவடிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
இன்று மாலையுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.
குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு
குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக நீலகிரி குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த ஊழியர்கள் பாதையில் சரிந்து கிடந்த மண் மற்றும் பாறைக்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மிகப்பெரிய பாறைகள் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழா- திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகா தீப விழா நடக்கிறது. சுமார் 30 லட்சம் பக்தர்கள் கார்த்திகை தீபத்தை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை, புதுச்சேரி, வேலூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து இன்று முதல் 8-ந்தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் 7-ந் தேதி வரை 3 நாட்கள் 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தென் மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
சீனாவில் இருந்து வெளியேற ஆப்பிள் நிறுவனம் திட்டம்
கொரோனா கட்டுப்பாடு மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை சீனாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன்கள் உற்பத்தி குறைந்து விட்டதாகவும், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் 5 சதவீதத்தை சீனாவுக்கு வெளியே உற்பத்தி செய்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் மொத்த ஆப்பிள் தயாரிப்புகளில் 25 சதவீதத்தை சீனாவுக்கு வெளியே பிற ஆசிய நாடுகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து பல ஒப்பந்த உற்பத்தியாளர்களை சீனாவில் இருந்து வேறு இடத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்தியா மற்றும் வியட்நாமில் தனது வணிகத்தை அமைப்பது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.