ஸ்டெபானி ஃபிராபர்ட்தான் அந்த பெண் நடுவர்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிகா அணிகளுக்கு இடையே இன்று நடக்கவுள்ள போட்டி சரித்திர முக்கியத்துவத்தை பெறப் போகிறது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் நடுவர் இந்த போட்டியில் நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானி ஃபிராபர்ட்தான் அந்த பெண் நடுவர்.
கடந்த 2009-ம் ஆண்டுமுதல் சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ள ஸ்டெபானியின் வயது 38. இதற்கு முன் கடந்த 2020-ம் ஆண்டில் யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நடுவராக பணியாற்றியுள்ள ஸ்டெபானி, இப்போட்டித் தொடரில் நடுவராக பணியாற்றிய முதல் பெண் என்ற சாதனையை ஏற்கெனவே படைத்துள்ளார். கால்பந்து போட்டியின்போது வீரர்களின் வேகத்துக்கு இணையாக 90 நிமிடங்களில் சுமார் 12 மைல் தூரம் ஓடவேண்டும் என்பது உள்ளிட்ட பல சவால்களைக் கடந்து இந்த உலகக் கோப்பை போட்டியின் முதல் பெண் நடுவராகி இருக்கிறார் ஸ்டெபானி.
பாதியில் நீக்கப்பட்ட கோல்கீப்பர்
முதல் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் தங்கள் கோல்கீப்பரான ஆந்திரே ஒனானாவை தற்காலிகமாக நீக்கியுள்ளது காமரூன் அணி. அணியின் பயிற்சியாளரான ரிகோபர்ட் சாங்குடன் மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக செர்பியாவுக்கு எதிராக கடந்த திங்கள்கிழமை நடந்த போட்டியின்போது வியூகம் வகுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் பயிற்சியாளருடன் ஆந்திரே ஒனானா மோதலில் ஈடுபட்டிருந்தார்.
அணியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒனானா, “பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க நான் முயற்சி செய்தேன். ஆனால் எதிர்தரப்பில் இருப்பவர்கள் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. என்னை அணியில் இருந்து நீக்குவதிலேயே அவர்கள் முழு கவனம் செலுத்தினார்கள்” என்று கூறியுள்ளார்.
ரொனால்டோ காட்டில் பணமழை
மான்செஸ்டர் யுனைடட் கிளப்பில் இருந்து விலகிய பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ காட்டில் பணமழை பொழிகிறது. மான்செஸ்டர் யுனைடட்டில் இருந்து விலகிய ரொனால்டோவை தங்கள் கிளப்புக்காக ஆடவைக்க பல கிளப்கள் போட்டி போட்டு வருகின்றன. இதில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்-நசர் என்ற கிளப் வசம் ரொனால்டோ செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று செய்திகள் வருகின்றன.
வளைகுடா நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற இந்த கிளப், தங்கள் அணிக்காக ஆட ரொனால்டோவுக்கு ஒரு சீசனுக்கு 200 மில்லியன் யூரோக்களை சம்பளமாக கொடுக்க முன்வந்துள்ளது. ரொனால்டோவும் இந்த அழைப்பை ஏற்று அடுத்த 2 சீசன்களுக்கு அந்த கிளப்புக்காக ஆடுவதைப் பற்றி யோசித்து வருகிறாராம்.
அதே நேரத்தில் புகழ்பெற்ற செல்சியா கிளப்பும் ரொனால்டோவை தங்கள் அணிக்காக ஆடவைக்க பலகோடி ரூபாய்களைக் கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்படி பல கிளப்கள் ரொனால்டோவை தங்கள் கிளப்களுக்காக ஆடவைக்க பெட்டி பெட்டியாய் பணத்துடன் அலைகின்றன.