No menu items!

மிஸ்டர் கழுகு – இந்திய ராணுவத்தின் புதிய உளவாளி

மிஸ்டர் கழுகு – இந்திய ராணுவத்தின் புதிய உளவாளி

ராணுவத்தில் குதிரைகள், நாய்கள், ஒட்டகங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இப்போது புதிதாக கழுகுகளையும் தங்கள் படையில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய ராணுவம். இதற்காக குறிப்பிட்ட சில கழுகுகளை தேர்ந்தெடுத்து கடந்த 2020-ம் ஆண்டுமுதல் பயிற்சி அளித்து வருகிறது. இந்த குழுகுப் படைக்கு, ‘கருடா ஸ்குவாட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அவுளி என்ற இடத்தில் சமீபத்தில் நடந்த ராணுவப் ஒத்திகையில் இந்த கழுகுப் படையும் தங்கள் ஆற்றலை வெளியுலகுக்கு காட்டியுள்ளது.

தேசத்தை பாதுகாக்கக் கூடிய ராணுவப் பணியில் கழுகுகளால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இதற்கு பதிலாக, ‘எதிரி நாடுகளின் ட்ரோன்களை தேடி அழிக்க இந்த கழுகுப் படையை பயன்படுத்துவதாக இந்திய ராணுவம் தெரிவிக்கிறது. கழுகுகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு குணம் உள்ளது. தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள குறிப்பிட்ட வான் எல்லையை தங்களுடையதாக கருதும் கழுகுகள், அந்த எல்லையை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கும். கழுகுகளின் இந்த குணத்தை இந்திய ராணுவத்துக்காக பயன்படுத்துகின்றனர் பாதுகாப்பு படையினர்.

கடந்த 2020-ம் ஆண்டுமுதல் இந்திய ராணுவ வீரர்களுடன் பல மாதங்கள் பயிற்சி பெற்றுள்ள இந்த கழுகுகள், இரும்பு கிளவுஸ்களை அணிந்துள்ள வீரர்களின் கையில் வீட்டு விலங்கைப் போல் சமர்த்தாய் உட்காருகிறது. அவர்கள் கட்டளையிட்டதும் வானில் பறக்கிறது. பின்னர் சிறு பறவைகளை வேட்டையாடுவதைப் போல் வானில் பறக்கும் மாதிரி உளவு ட்ரோன்களை தங்கள் கைகளால் பற்றி வீரர்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறது.

எதிரி நாடுகளின் ட்ரோன்களை கைப்பற்றுவதுடன் இந்த கழுகுகளின் பணி முடிந்துவிடுகிறதா என்றால் இல்லை. எதிரிகளின் எல்லைக்குப் போய் இவை உளவறிந்தும் வருகின்றன. அப்படி உளவறிந்து வருவதற்காக அந்த கழுகுகளின் கழுத்தில் மினி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எதிரிகளின் எல்லையின் மீது கழுகுகள் பறக்க, ராணுவ வீரர்கள் கீழே இருந்து அந்த கேமராக்களை இயக்கி எதிரிகளைப் பற்றிய ரகசியங்களை தெரிந்துகொள்கிறார்கள். இவ்வாறு எதிரி நாடுகளின் எல்லைகளை உளவு பார்ப்பதுடன், நமது எல்லைப்பகுதிகளில் எதிரிகள் நுழையாமல் கண்காணிக்கவும் இந்த கழுகுப் படை இந்திய ராணுவத்துக்கு உதவுகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்த ராணுவ ஒத்திகையில் இதை விளக்கிக் கூறிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், “இந்த கழுகுகள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாதிரி உளவு ட்ரோன்களை கைப்பற்றி தரைக்கு கொண்டுவந்துள்ளன. இந்தியாவின் பாதுகாப்பில் இந்த கழுகுப் படை எதிர்காலத்தில் முக்கிய பணிகளை ஆற்றும்” என்று கூறியுள்ளார்.

பல்வேறு இடங்களில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட கழுகுகள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவதாக ராணுவத்தினர் கூறுகின்றனர். காவல்துறையில் ஒவ்வொரு நாய்க்கும் ஒரு பயிற்சியாளர் நியமிக்கப்படுவதைப்போல் ஒவ்வொரு கழுகுக்கும் பயிற்சி அளிக்க ஒரு ராணுவ வீரர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பயிற்சிகள் முழுமையாக முடிந்ததும் அவை ராணுவ பணியில் சேர்க்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தில் கழுகுகளைப் பயன்படுத்த முடியும் என்பதை உலகுக்கு முதலில் உணர்த்தியது நெதர்லந்த்து நாடுதான். அந்நாடு 2016-ம் ஆண்டுமுதல் எல்லைகளைக் கண்காணிக்க கழுகுகளை பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நெதர்லாந்தைப் பின்பற்றி இந்தியாவும் ராணுவத்தில் கழுகுகளை பயன்படுத்த உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...