புஷ்பா தம்பி
மொபைல் சிணுங்கியது. ஒரு வாரத்திற்குப் பின்பு அவன் நம்பர்! ‘எடுக்கலாமா… வேண்டாமா? மறுபடியும் திட்டப்போகிறானோ? ஒரு முறை கோபம் வந்தால் அப்போதே பொங்கி அடங்குவது ஒரு வகை. வந்த கோபத்தை நினைத்து நினைத்து ‘இன்ஸ்டால் மெண்டில்’ திட்டித் தீர்ப்பது இவன் வகை.’ மறுமுனையில் மூச்சு காற்று மட்டும் கேட்டது. அவளுக்கு பேச இன்னமும் துணிவு வரவில்லை.
“மது பேசமாட்டியா..?” ரொம்ப மென்மையாக கேட்டான். அவளுக்கு மனசு கேட்கவில்லை. சனியன் பிடித்த காதல்…!
“ம்… ம்… சொல்லு… எதுக்கு கூப்பிட்ட?”
“பேசணும் உன்கிட்ட. இன்னிக்கு சாயந்திரம் மெரினாவில் மீட் பண்ணலாமா?
“அதுக்கு எதுக்கு பீச்? போன்லயே பேசிடு… ஸாரி… திட்டிவிடு.” அவள் பிகு பண்ணிக்கொண்டாள்.
“இல்ல… நேரில் மனசுவிட்டு பேசணும். சத்தியமா திட்டமாட்டேன் கண்ணா.”
“சரி, வர்றேன். அதுக்காக இந்த கண்ணா, மன்னாவெல்லாம் இனிமே வேணாம். எதுவும் பிடிக்கலை…!” அவள் சொல்லும் போதே சிரித்தான் விமல்.
மாலை சூரியன் கடலுக்குள் மறையும் முன்பே ‘யமாஹா’வை மெரினா தள்ளுவண்டிகள் கூட்டத்தின் ஓரமாக நிறுத்திவிட்டான். வருவாளா…. பொய் காரணம் சொல்லி கடைசி நிமிடத்தில் டபாய்த்து விடுவாளா என்ற யோசனையுடன் எம்.ஜி.ஆர். சமாதியின் பின்புறமாக சற்று தொலைவில் அமர்ந்த போது, சன்னமான இருட்டும் குளிரும் கடற்கரையை மேலும் ரம்மியமாக்கியது.
‘ஆடியில சேதி சொல்லி, ஆவணியில் தேதி வச்ச, சேதி சொன்ன மன்னவருதான்’ – எங்கிருந்தோ எப்.எம்மில் வந்த தேவாவின் தேன் மெலடி அந்த குளிரில் நெஞ்சுக்கு இதமாக இருந்தது.
‘இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன்.’ மொபைல் லைட் போட்டு அவள் வருகை தகவலை உணர்த்தியது. அவன் மனசு படபடத்தது. என்ன பேசுவது? ஜாஸ்தி தான் பேசிட்டோமோ… சரி சமாளிக்கலாம்.
‘மாமாவே நீ வேணும்… ஏழு ஏழு ஜென்மம்தான்.’ அந்தப் பாட்டில் கேப்டனை ரேவதி கட்டிக்கொண்டது போல நம்மை மன்னித்து, கட்டிப்பாளா?
“ஹாய்…” உற்சாகமாக கூவிக்கொண்டு அருகே அமர்ந்தாள்.
“இன்னும் கிட்ட உட்காரேன்.” அவள் இடுப்பை லேசாக அவன் இழுத்த போது வெட்கப்பட்டாளேயொழிய எதிர்க்கவில்லை. ‘அப்பாடா சரிபண்ணிடலாம்’ என்ற நம்பிக்கை அவனுக்கு மெதுவாக வந்தது.
தயங்கியவாறு அவள் விரலை மடக்கியபடி “ஸாரி மது… ஏதோ பேசிட்டேன். மறந்துடு. நாம இரண்டுபேரும் பழையபடி..”
“என்ன பழையபடி…? மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறவா?”
“இல்ல… இல்ல… அதை விட்டுடேன்.” – அவன்.
“எப்படி விடறது? அன்னிக்கு நீ கொஞ்ச நஞ்சமா பேசினே? அப்படி என்ன கோபம்? அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன். என் சூழ்நிலை. உன்னுட்ட சொல்லிக்காம பாதி ராத்ரியில் ஊருக்கு கிளம்பிட்டேன். தகவல் சொல்லாம்னா போனைவேற தொலைச்சுட்டேன். அப்பா, அம்மா போனை வாங்கி உன்னுட்ட பேச முடியுமா? அவங்க என்னைவிட்டு ஒரு நாள் புரா நகரவேயில்லை. அந்த கிராமத்தில் யாருட்ட போன் கேட்கறது? அதுக்காக என்னென்ன பேசிட்ட?
காதலிக்கிறவன் யாரும் இவ்வளவு கயவாளித் தனமா பேசமாட்டான். மூன்று வருஷமா நமக்குள்ள பட்டும் படாத இந்த உறவுக்கே இவ்வளவு தூரம் வெறுப்பு வந்துடுத்து. முழுசும் அனுபவிச்சவுடன் உடனே திகட்டிப் போயுடும். அப்புறம் என்ன பேச்சு பேசுவ? அது என்ன காதலிக்கிறவரை மயிலிறகு, மண்ணாங்கட்டின்னு பெண்களை மென்மையா பார்ப்பது போல டிராமா போடறீங்க. அப்புறம் உங்க வில்லத்தனத்தை காட்டறீங்க. நாங்க எதையும் காட்டாம மறைச்சு மறைச்சு வச்சாதான் உங்களிடம் காலம் புரா தாக்கு பிடிக்க முடியுமா?
அழகான உறவு எப்படிடா திகட்டும்? அப்போ காதல்ங்கிற பேரில் பாதிபேர் ‘வெப்பத்தில்’ அலையறீங்க தானே! என்ன சொன்ன என்ன சொன்ன? உன்னுடையத அறுத்து மெரினாவில் தூக்கி எறிஞ்சுடுவேன். என்ன வார்த்தை இது? அதோட நின்னயா? அப்புறம் அது இல்லாமாதான், நீ சுத்தனும்? என்ன வக்ர வெறி…?” அதற்கு மேல் அவளது சூறாவளி அலையை அவனால் எதிர் கொள்ள முடியவில்லை.
“தப்பு… தப்பு… மன்னிச்சுடு. இனி நான் புது காதலன். வக்ரம் நீங்கிய புது காதலன். புது விமல். உன் வாழ்க்கையில் எவ்வளவோ சோதனையான கட்டத்தில் எல்லாம். உன் கூட நின்னிருக்கேன். அதையெல்லாம் நினைச்சுப் பார்த்து, அதுக்கு ‘அலவன்ஸா’ இந்த கோபத்தை மறந்துடு மது..!” கண்கலங்கியபடி அவளை திடீரென இறுக அனைத்தபோது, அவளால் பதில் சொல்லமுடியவில்லை.
அவன் வாயில் முத்தமிட்டாள்!
பி. குறிப்பு: பி.ஜே.பி.பிரமுகர்கள் சூர்ய சிவா, டெய்சி சரண் விவகாரத்திற்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமில்லை.