No menu items!

தமிழ்நாட்டுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நவம்பர் 21ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 22ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடு மீது மோதி சென்னை – மைசூர் வந்தே பாரத் ரெயில் சேதம்

சென்னை – மைசூர் வரை இயங்கும் 5ஆவது வந்தே பாரத் ரெயிலை நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், நேற்று இரவு மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் விரைவு ரெயில் அரக்கோணம் சந்திப்பு அருகே கன்றுக்குட்டி மீது மோதியதில் ரெயிலின் முன்பக்கம் லேசாக சேதமானது. ரெயிலில் அடிப்பட்டு கிடந்த கன்றுக்குட்டியை ஊழியர்கள் அகற்றினர். சிறிது நேரம் நிறுத்தப்பட்ட ரெயில், மீண்டும் சென்னை நோக்கி இயக்கப்பட்டது.

இதுவரை நான்குமுறை மாடு மீது மோதி வந்தே பாரத் ரயில்கள் சேதமடைந்துள்ளன. முதற்கட்டமாக கடந்த அக்டோபர் 6ஆம் தேதி குஜராத் – மராட்டிய இடையே இயக்கப்பட்ட ரெயிலில் எருமை மாடுகள் மோதியதில் 4 மாடுகள் உயிரிழந்தன. ரெயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி அதே ரெயிலில் பசுமாடு ஒன்று மோதியதில் ரெயிலின் முன்பகுதி சேதமடைந்தது. பசுமாடு மோதி ரெயில் சேதமடைந்ததால் பசுமாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 8ஆம் தேதி காலை 6 மணிக்கு டெல்லியிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரெயிலின் சக்கரம் திடீரென ‘ஜாம்’ ஆனது. இதனால் பயணிகள் 5மணி நேரம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்தனர். கடந்த மாதம் 29ஆம்தேதி மும்பை – காந்திநகர் (குஜராத்) வரை இயக்கப்படும் வந்தே பாரத் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் நட்புறவாக இருந்தது மறுக்க முடியாத உண்மை: துஷார் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை தற்போது மராட்டிய மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் இருந்து இன்று காலையில் தொடங்கிய பாரத் ஜோடோ ஷேகன் நகரை அடைந்தது.

இந்நிலையில், ஷோகன் நகரில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி யாத்திரையில் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்தார். மேலும், நடைபயணங்கள் கலாசாரத்தின் ஒரு அங்கம், பல புரட்சிகளுக்கு வழி வகுத்துள்ளன என்று இந்திய ஒற்றுமை பயணம் குறித்து துஷார் காந்தி தெரிவித்தார். இதேபோன்று, சாவார்க்கர் ஆங்கிலேயர்களுடன் நட்புறவாக இருந்தது, சிறையில் இருந்த வெளியே வர மன்னிப்பு கடிதம் எழுதியது எல்லாம் மறுக்க முடியாத உண்மை. இதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன என்றும் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது: அமித் ஷா

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் 3ஆவது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் எந்தக் குழுவுடனும் தொடர்புபடுத்தக் கூடாது. பயங்கரவாதிகள் நாச வேலைகளைச் செய்ய பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்கின்றனர். தங்களுக்கு தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்க டார்க் நெட் எனப்படும் இணைய வழியை பயன்படுத்துகின்றனர். இதன் வாயிலாக தங்கள் அடையாளத்தை மறுத்து வன்முறையை விதைக்கின்றனர். பயங்கரவாதத்துக்கு நிதியுதவி என்பது பயங்கரவாதத்தைவிடவும் அபாயகரமானது. பயங்கரவாதத்துக்கான வழியும் முறைகளும் இங்கிருந்துதான் வகுக்கப்படுகிறது” என்றார்.

விண்வெளித்துறையில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்: மத்திய அமைச்சர் தகவல்

ஐதராபாத்தை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள செயற்கைக் கோள்கள் இன்று விக்ரம்-எஸ் ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், “இந்திய விண்வெளி திட்டத்தில் இது புதிய தொடக்கம். ஆராய்ச்சி, மேம்பாடு, கல்வி மற்றும் தொழில்துறையின் ஒருங்கிணைப்பு காரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சி ஏற்பட்டுள்ளது. தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இஸ்ரோவின் திறன்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்றும் விண்வெளித் துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...