No menu items!

தாவல் திலகம் குஷ்பு – மிஸ் ரகசியா!

தாவல் திலகம் குஷ்பு – மிஸ் ரகசியா!

ஆபீசில் ரிப்பேராகிக் கிடந்த நாற்காலி ஒன்றை சரி செய்துகொண்டிருந்தோம்.

 “என்ன நாற்காலி உடைந்து விட்டதா? காங்கிரஸ் கட்சிக்காரர்கள் யாராவது வந்தார்களா?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் ரகசியா.

 “சத்யமூர்த்தி பவனில் நடந்த சண்டைக் காட்சிகளைப் பற்றித்தான் முதலில் சொல்லப்போகிறாய் என்பது உன் கேள்வியில் இருந்தே தெரிகிறது. கேட்க நானும் தயாராகத்தான் இருக்கிறேன். சொல்.”

 “காங்கிரஸ் கட்சியை கோஷ்டி சண்டைகள் இல்லாமல் கே.எஸ்.அழகிரி நடத்துகிறார் என்று போன மாதம்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன்  சொன்னார். யார் கண் பட்டதோ, அப்படி அவர் சொன்ன கொஞ்ச நாட்களிலேயே கட்சிக்குள் மோதல் வெடித்துவிட்டது. சத்யமூர்த்தி பவனில் அடிதடி, கலாட்டா, காயம், போலீஸ் குவிப்பு என்று இரண்டு நாட்களாக தலைப்பு செய்திகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன்தான் என்கிறார்கள் கதர்ச்சட்டைக்காரர்கள்  ஆரம்பத்தில் அவர் அழகிரி ஆதரவாளராகத்தான் இருந்தார். சட்டமன்ற தேர்தலில் ரூபி மனோகரனுக்கு வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமே அழகிரிதான் என்கிறார்கள். இந்த சூழலில் ரூபி மனோகரனைக் கேட்காமல் அவரது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட தலைவரை நியமித்ததுதான் பிரச்சினைக்கு காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இதனால் கோபமடைந்த ரூபி மனோகரன், ‘என்னிடம் ஆலோசிக்காமல்  எப்படி மாவட்டத் தலைவரை நியமிக்கலாம்’ என்று ஆதரவாளர்கள் மூலம் மோதலில் ஈடுபட்டுள்ளார்  இப்போது ஒட்டுமொத்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும் கூடி ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். கட்சித் தலைமையும் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. ஆனால் ரூபி மனோகரனோ தான் அப்பாவி என்று சொல்லி வருகிறார். இந்த நிலையில் அவர் பாஜக பக்கம் சாயப் போவதாகவும் சில தகவல்கள் வருகின்றன.”

 “பாஜக என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் சொல்லி இருக்கிறாரே?”

 “இது துரைமுருகனின் கருத்தல்ல. முதல்வரின் கருத்து என்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளையே ஒதுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். குறைந்த தொகுதிகளை ஏற்க தயங்கும் கூட்டணி கட்சிகளிடம், ‘நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் பாஜக வந்துவிடும்’ என்று கூறிப் பணியவைப்பது முதல்வரின் திட்டம். அதற்கு முன்னோட்டமாகத்தான் அமைச்சர் துரைமுருகன் இப்போது பாஜக வளர்ச்சியைப் பற்றி பேசியிருக்கிறார்’ என்கிறார்கள்.”

 “இதே கூட்டத்தில் அரசு அதிகாரிகளைப் பற்றியும்கூட துரைமுருகன் பேசியிருக்கிறாரே?”

  “இதற்கு அதிகாரிகள் தரும் பதில் வேறு மாதிரி இருக்கிறது. இப்போதெல்லாம் ஊழல் புகாரில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கருணாநிதிக்கு வேண்டிய இரண்டு அதிகாரிகள் ஜாபர் சேட்,  ராஜமாணிக்கம். அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கிறது. அவர்களை காப்பாற்ற இந்த அரசு என்ன செய்தது என்று கேட்கிறார்கள்”

 “எடப்பாடியின் குரல் இப்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறதே?”

 “தனிப்பட்ட முறையில் தமிழகத்துக்கு வரும் அமித் ஷாவை நான் ஏன் சந்திக்கவேண்டும் என்று சொன்னதைப் பற்றி கேட்கிறீர்களா? இது பாஜகவுக்கும் கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.   அமித் ஷா தரப்பில் இருந்து அண்ணாமலை மூலம் எடப்பாடியாருக்கு மிரட்டல் பாணியில் பதில் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ’அதிமுக ஒரே அணியாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது’ என்று அண்ணாமலை மூலம் சொல்லி இருக்கிறார் அமித் ஷா. அந்த மிரட்டலுக்குப் பதில்தான் எடப்பாடியின் கோபமா?”

“அமித்ஷாவை எதிர்க்கிற அளவு எடப்பாடி வளர்ந்திட்டாரா?”

“பாஜக தலைவர்களை வளரவிடுவது தங்களுக்குதான் ஆபத்தைக் கொடுக்கும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு நாடாளுமன்றத் தேர்தல்தான். பாஜக மற்றும் அண்ணாமலையின் திட்டங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்திருக்கிறார். என்னதான், தமிழ்நாடு முழுதும் சுற்றி வந்தாலும் அதிமுகவின் பலம் இல்லாமல் பாஜகவால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்று எடப்பாடி தனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார். அதனால் எப்படியும் அவர்கள் நம்மிடம்தான் வந்தாக வேண்டும் அதுவரை சற்று தள்ளியே நிற்போம் என்று கூறினாராம். அதன்பிறகுதான் அமித்ஷா குறித்த பேச்சு”

”பாஜக தரப்புல என்ன நினைக்கிறாங்க?”

“எடப்பாடி இப்படி பேசுவார்னு அவங்க நினைக்கல. தமிழ்நாட்டுல மெகா கூட்டணி அமைப்போம்னு வேற எடப்பாடி சொன்னார். தமிழ் நாட்டுல ரெண்டு மெகா கூட்டணி அமைந்து பாஜக தனியா நின்னா என்னாகும்னு பாஜகவுக்கும் தெரியும். தன் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்ததான் எடப்பாடி பேசுவார். தேர்தல் நேரத்துல வழிக்கு வந்துடுவார் அல்லது வரவச்சுடலாம்னு டெல்லிலருந்து அண்ணாமலைக்கு உறுதி கொடுக்கப்பட்டிருக்கு”

 “தமிழ்நாட்டில் இருந்து 20 முதல் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை பாஜக அனுப்பும் என்று அண்ணாமலை  பேசியிருக்கிறாரே?”

 “தற்சமயம் இதில் 10 தொகுதிகளை பாஜக அடையாளம் தேர்ந்தெடுத்து வச்சிருக்காங்க. இதில் தென் சென்னை தொகுதியும் அடக்கம்.  இந்த பத்து தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை பூத் கமிட்டி என்று தாமரைக் கட்சி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்கு 25 கோடி வரை செலவு செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்களாம்.”

 “பூத் கமிட்டி அமைக்கும் அளவுக்கு பாஜக வளர்ந்துவிட்டதா? சபாஷ்.”

 “ஆமாம். அந்த பூத் கமிட்டியில் பெரும்பாலும் ஆர்எஸ்எஸ்காரர்களும், முன்னாள் போலீஸ்காரர்களும்தான் இருக்கிறார்களாம்.  இவர்களுக்கு மாத ஊதியம்கூட தரப்படுகிறது. ஆபீஸ் வைத்து இந்த பூத் கமிட்டிகளை முறையாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.”

 “பதிலுக்கு திமுகவும் பூத் கமிட்டிகளை அமைப்பதாக வேள்விப்பட்டேனே.”

 “இருந்தாலும் பாஜக அளவுக்கு செலவு செய்வதில்லை என்று தொண்டர்கள் புலம்புகிறார்கள். இரு கட்சிகளின் தலைமையும் செய்யும் செலவுகளை திமுகவினர் ‘கம்பேர்’ செய்து புலம்புகிறாரக்ள்.”

 “திமுக தொண்டர்கள் பாவம்தான்”

 “நாங்களும்தான் பாவம் என்கிறார்கள் அமைச்சர்கள். திமுக அமைச்சர்கள் யாரும் கிரீன்வேஸ் சாலை இல்லங்களில் இருப்பதே இல்லை. யாரையும் சந்திக்க விரும்புவதில்லை என்கிறார்கள். அப்படியே சந்தித்தாலும் அவர்களுக்கு உதவி செய்யவோ, சுயேச்சையாக முடிவுகளை எடுக்கவோ முடிவதில்லை. எல்லாவற்றுக்கும் கமிட்டி போடப்பட்டுள்ளது. வெறும் சொத்தையாக எதற்கு தொண்டர்களைச் சந்திக்க வேண்டும் என்று முணுமுணுக்கிறார்களாம். அவர்கள் கோட்டைக்கும் வருவதில்லை என்பதால் வாரத்தில் 4 நாட்கள் கட்டாயம் கோட்டைக்கு வரவேண்டும் என்று தலைமை உத்தரவிட்டுள்ளது.”

”தலைமைக்கு இந்தப் புலம்பல்கள் பற்றி தெரியுமா?”

“அமைச்சர்கள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று தலைமை விரும்புகிறது. அமைச்சர்களால் ஆட்சிக்கு கெட்டப் பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் இத்தனை கட்டுப்பாடுகள். இவை தவிர தலைமைக்கும் சில வருத்தங்கள் இருக்கின்றன”

“என்ன வருத்தம்?”

“ஏழுவர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு போடப் போகிறது என்ற தகவலே டெல்லியிலிருந்து திமுக தலைமைக்கு கிடைக்கவில்லையாம். டெல்லியில் இத்தனை எம்.பி.க்கள் இருந்தாலும் அவர்களால் தகவல்களை திரட்ட முடியவில்லை என்று முதல்வர் வருத்தப்பட்டிருக்கிறார்”

 “மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பில் இருந்து இல.கணேசன் மாற்றப்பட்டுள்ளாரே?”

 “கூடுதலாகதானே மேற்கு வங்க ஆளுநரா இருந்தார். அதனால் அவருக்கு அது பிரச்சினையில்லை. ஆனால், தன்னைச் சந்தித்த நிருபர்களிடம், சென்னையிலும் இப்படி நடக்கலாம் என்று சொல்லி இருக்கிறாராம்.”

“தமிழகத்தில் நடக்கும் பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் குஷ்புவைப் புறக்கணிப்பதாக செய்திகள் வருகிறதே?”

 “மாநிலத் தலைமை அவரைப் புறக்கணித்தாலும் மத்திய தலைமை அவரை கைவிடவில்லை என்கிறார்கள் குஷ்பு தரப்பினர். சமீபத்தில்கூட குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் குஷ்பு கலந்துகொண்டுள்ளார். அவருக்கு குஜராத்தி மொழி தெரியுமாம். அதை வைத்து அவரை பாஜக தங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளது.”

”குஷ்புவைப் பற்றி முரசொலியில் முழுப்பக்க விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்களே?”

“ஆமாம் தாவல் திலகம் என்று பட்டமும் கொடுத்திருக்கிறார்கள். குஷ்பு என்ற வார்த்தையே முரசொலியில் இடம் பெறாமல் இருந்தது. உதயநிதி ஸ்டாலினுடன் குஷ்புவின் கணவர் சுந்தர் சி கடந்த சில மாதங்களாக இணக்கமாக இருக்கிறார். திரைப்பட வியாபர ரீதியாக இணைந்து செயல்படுகிறார்கள். அதனால் திமுகவை விமர்சிப்பதை குஷ்பு குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்திய கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார் குஷ்பு. அதன் விளைவுதான் தாவல் திலகம் என்ற கட்டுரை. குஷ்புவைக் குறித்து பாஜகவின் எச்.ராஜா ஆபாசமாக பேசியதையெல்லாம் எடுத்து சொல்லியிருக்கிறார்கள்”

“இனி குஷ்பு, சுந்தர் சி படங்களை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவாரா?”

“சந்தேகம்தான் என்கிறார்கள் கோடம்பாக்க செய்தியாளர்கள். ஆனால் அரசியலிலும் பிசினசிலும் எதுவும் நடக்கலாம்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...