இந்த நொடியில் தமிழ் சினிமாவின் பரபரப்பான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
லவ் டூடே படத்தின் சூப்பர் வெற்றி காரணமாக அவரை கோடம்பாக்கத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவரது திடீர் புகழை ஏற்றுக் கொள்ள முடியாத சிலர் அவருக்கு எதிராக வேலை செய்துக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் பிரதீப் ரங்கநாதன் போட்ட சில பதிவுகள் இப்போது பூதங்களாக அவரைச் சுற்றி கொண்டிருக்கின்றன.
பொதுவாய் கட்சி மாறும் அரசியல் தலைவர்களுக்குதான் இந்தப் பிரச்சினை வரும்.
உதாரணமாய் நடிகை குஷ்பூ காங்கிரஸின் இருந்த போது பிரதமர் மோடியையும் பாஜகவை கடுமையாக விமர்சித்த்து ட்விட்டரில் பதிவுகள் போட்டிருக்கிறார். சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
குஷ்பு பாஜகவில் இணைந்தப் பிறகு அவரது பழைய பதிவுகளை தேடி எடுத்துப் போட்டு இன்று வரை அவரை கிண்டல் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது குஷ்பூ நிலையில் பிரதீப் ரங்கநாதன் இருக்கிறார்.
பிரதீப்பின் முதல் பிரச்சினை விஜய்யிடம் தொடங்கியது.
லவ்டூடே என்ற பெயரே விஜய் பட டைட்டில்தான். அதற்காக படத்தில் விஜய்க்கும் நன்றியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த காலங்களில் விஜய்யை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
விஜய்யின் சுறா படத்தைப் பற்றிய நெகட்டிவ்வான கமெண்டுகளை அப்போது பதிவு செய்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் விஜய்யின் கத்தி படத்துக்கு முதல்நாளே ஈசியா டிக்கெட் கிடைத்தது என்றும் அந்தக் காலத்தில் பதிவுகள் எழுதியிருக்கிறார்.
இதைப் பார்த்ததும் விஜய் ரசிகர்கள் பொங்கிவிட்டார்கள். சமூக ஊடகங்களில் பிரதீப்பை கடுமையாக திட்டி பதிவுகள் போட்டார்கள்.
பிரதீப், விஜய்யை மட்டுமா அல்லது மற்றவர்களையும் திட்டியிருக்கிறாரா என்று அவரது பழைய பதிவுகளைத் தேடத் தொடங்கினார்கள்.
அவை பூதங்களாக வெளிவரத் தொடங்கின.
கிரிக்கெட் கடவுள் என்று புகழப்படும் சச்சினை கெட்ட வார்த்தைகளில் திட்டியிருக்கிறார்.
தோனியை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இவையெல்லாம் வெளியில் வர பிரதீப்புக்கு தர்மசங்கடம்.
இப்போது லேட்டஸ்ட்டாக இசையமைப்பாளர் யுவனை கிண்டலடித்து அவர் போட்ட பதிவுகள் வெளிவந்திருக்கின்றன.
யுவன் வேஸ்ட்..ஃப்ராட் என்றெல்லாம் அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார் என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவியிருக்கிறது.
இதில் என்ன வேடிக்கை என்றால் பிரதீப்பின் லவ் டூடே படத்துக்கு யுவன் தான் மியூசிக் டைரக்டர். அவரைப் புகழ்ந்து பல இடங்களில் பேசியிருக்கிறார்.
இந்தப் பழைய பூதங்களைப் பார்த்து அரண்டு போன பிரதீப் ஒரு விளக்கம் அளித்திருக்கிறார்.
அந்த விளக்கத்தில், ‘என் பெயரில் பரவி வரும் பதிவுகள் ஃபோட்டஷாப் செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினாலும் நிறைய விஷயங்களை மாற்றிவிடும். அதனால் என் ஃபேஸ்புக் அக்கவுண்டை மூடிவிட்டேன். இப்படி செய்பவர்கள் மீது எனக்கு கோபமில்லை, என்னுடைய ஆதரவாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.
ஆனால், சில பதிவுகள் உண்மைதான். அதில் இருக்கும் கெட்ட வார்த்தைகள் போலியானவை. நான் தவறுகள் செய்திருக்கிறேன். வயது கூடும்போது நிறைய கற்கிறோம், அதன் மூலம் திருத்திக் கொள்கிறோம். சிறந்த மனிதனாக மாற ஓவ்வொரு நாளும் முயற்சிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதீப்புக்கு ஆதரவாகவும் பல கருத்துக்கள் வந்திருக்கின்றன. கடந்த காலங்களில் அவர் பதிவிட்டதை இப்போது ஒப்பிடக் கூடாது. எல்லோருக்குமே ஒரு கடந்த கால வாழ்க்கை இருக்கும் அதை வைத்து எடை போடக் கூடாது என்றெல்லாம் அவருக்கு ஆதரவான கருத்துக்கள் அதிகமாக வருகின்றன.
லவ்டூடே படத்தில் மட்டுமல்ல கோமாளி படத்தின் போதும் பிரதீப் ரங்கநாதன் சர்ச்சைக்குள்ளானார்.
அதில் ஒரு காட்சியில் ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று கிண்டல் செய்யப்பட்டிருந்தது. அப்போது வேண்டுமென்றே செய்யவில்லை என்று விளக்கமும் கொடுக்கப்பட்டது.
பிரதீப் கடந்த காலங்களில் பலரிடம் வாய்ப்பு கேட்ட பதிவுகளும் வெளிவந்திருக்கின்றன.
என்னுடைய ஷார்ட் பிலிமை வெளியிடுங்கள் என்று 2014ல் கேட்டிருக்கிறார். அதற்கு பிரேம்ஜி இப்போது பதிலளித்திருக்கிறார், ‘சார், உங்கள் படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்று.
பல தடைகளைத் தாண்டிதான் பிரதீப் ரங்கநாதன் சாதித்திருக்கிறார்.