ஜி-20 மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்தனர். இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இருதரப்பு மூலோபாய கூட்டுறவை வலுவாக்குதல், குவாட் கூட்டமைப்பில் நெருங்கிய ஒத்துழைப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலம் சார்ந்த துறைகளில் மேம்படுத்தப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “விளம்பர முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார். சென்னை மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் முதல்வர் ‘லவ் டுடே’ படத்தை குடும்பத்துடன் பார்க்கிறார். அமைச்சர்கள் ஊழலின் இலக்கணமாக உள்ளனர். இதுபோன்ற ஆட்சியை இதுவரை பார்த்ததில்லை” என்றார்.
இதே போல ஆரணியை அடுத்த சேவூரில் பஸ் நிறுத்தம் அருகே எம்.ஜி.ஆர்.சிலை முன்பாக ஆரணி வடக்கு மண்டல தலைவர் எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவருமான சி.ரவி இதில் சிறப்புரையாற்றினார்.
ஐபிஎல் போட்டியிலிருந்து பொல்லார்ட் ஓய்வு
ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய தீவு வீரர் கெய்ரன் பொலார்ட் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முடிவை எடுப்பது சுலபமாக இல்லை. ஏனெனில் இன்னும் சில வருடங்களுக்கு விளையாட நான் தயாராக இருந்தேன். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விவாதித்த பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன்.
என்னால் மும்பை அணிக்குத் தொடர்ந்து விளையாட முடியாது என்றால் அந்த அணிக்கு எதிராகவும் விளையாட முடியாது. மும்பை இந்தியன்ஸ் வீரர் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் வீரர் தான். எனினும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளேன். எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகளை தொடங்க ஐகோர்ட் அனுமதி
கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி மாணவியின் பெற்றோர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தின் போது கடந்த ஜூலை 17-ந்தேதி ஏற்பட்ட கலவரத்தால் பள்ளி சூறையாடப்பட்டது.
இந்த நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், கலெக்டர் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பள்ளியில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வகுப்புகளை நடத்த தயார் நிலையில் பள்ளி உள்ளதாகவும், பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, கனியாமூர் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஒரு மாதத்திற்குப் பின்னர் நிலைமையை பொறுத்து மற்ற வகுப்புகளை தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.