டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது இந்தியா. இந்த தோல்விக்கான 4 காரணங்கள்.
காரணம்-1:
இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்த விஷயம் டாஸ். அடிலெய்ட் மைதானத்தின் பிட்ச் மழை காரணமாக இன்று ஈரப்பதமாக இருந்தது. இது ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதலில் பந்துவீசும் அணிக்கு சாதகமாக இருந்தது. இந்த சூழலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருந்தது.
காரணம் – 2:
இந்த உலகக் கோப்பை தொடரிலேயே மிக மோசமான தொடக்க ஜோடியாக இந்தியாவின் கே.எல்.ராகுல் – ரோஹித் சர்மா ஜோடி இருந்தது. இந்த தொடரில் அந்த ஜோடி எடுத்த அதிகபட்ச ஸ்கோரே 27-தான். இன்றைய ஆட்டத்திலும் 9 ரன்களிலேயே இந்திய அணியின் முதல் விக்கெட் விழுந்தது. கே.எல்.ராகுல் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மாவும் 27 ரன்களில் ஆட்டம் இழக்க, இந்தியாவின் அடித்தளம் ஆட்டம் கண்டது.
காரணம் 3:
பவர்ப்ளேவான முதல் 6 ஓவர்களில் அதிகமாக ரன்களைக் குவிக்க வேண்டியது டி20 கிரிக்கெட்டில் மிகவும் அவசியம். ஆனால் இன்று கே.எல்.ராகுலின் விக்கெட்டை 2-வது ஓவரிலேயே இழந்ததால் இந்திய அணி பம்மியது. முதல் 10 ஓவர்களில் இந்திய அணியால் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி 5 ஓவர்களில் ஆவேசமாக ஆடிய ஹர்திக் பாண்டியா இந்திய அணி 68 ரன்களைக் குவிக்க உதவினார். இந்த கடைசி ஓவர்களில் மட்டும் 68 ரன்களைக் குவிக்காவிட்டால் இந்தியா இன்னும் மோசமான தோல்வியை தழுவியிருக்கும்.
காரணம் 4:
இந்திய அணியின் பந்துவீச்சு இன்று மிகவும் பலவீனமாக இருந்தது இந்திய அணியின் மோசமான தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த காலங்களில் இங்கிலாந்து கேப்டன் பட்லரை 5 முறை அவுட் ஆக்கியவர் புவனேஸ்வர் குமார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் பட்லரை அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. பட்லர் – ஹேல்ஸ் ஜோடி ரன்களை அள்ளிக் குவிக்க இந்திய பந்துவீச்சாளர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
மேற்கண்ட இந்த 4 காரணங்களால், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றும் வாய்ப்பையும் இழந்தது.