தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால், வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 11ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆளுநரை மாற்றுங்கள்: திமுக மனு குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்பு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட மனு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையும் ஆற்றி வரும் பணிகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் அரசின் கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாக பொதுவெளியில் முரண்படுவதும், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கியமான சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையின்றி காலம் தாழ்த்துவது என ஆளுநர் அலுவலகம் செயல்பட்டு வருவதை பற்றிய எங்கள் அதிருப்தியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சோசலிச மதசார்பற்ற மக்களாட்சி குடியரசு. அதில் கூறப்பட்டுள்ளவற்றுள் எதாவது ஒன்றில் நம்பிக்கை இல்லாத ஓர் ஆளுநர், அத்தகைய அரசியலமைப்பின் பேரிலான பொறுப்பை வகிக்க தகுதியற்றவர் ஆகிறார். பல்வேறு மதங்கள், மொழிகள் சாதிகளை சார்ந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வரும் சொர்க்கமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ரவி கெடு வாய்ப்பாக இந்நாட்டின் மதசார்பின்மை கருத்தியலில் தனது நம்பிக்கையின்மையை பொது வெளியில் தெரிவிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு அடிக்கடி சமுதாயத்தில் பிளவுபடுத்தும் பேச்சுகளில் ஈடுபடுகிறார். மக்கள் மனங்களில் வெறுப்பை துண்டி சமூக பதற்றத்தை உண்டு பண்ணும் நோக்கத்துடன் திட்டமிட்டு அவரது பேச்சுக்கள் அமைகின்றன.
தனது நடத்தையாலும் செயல்களாலும் ஆளுநர் அரசியலமைப்பினால் நிறுவப்பட்ட ஆளுநர் பொறுப்பை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துவிட்டார். ஆகவே, அப்பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக நீக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயக்க மருந்து கொடுத்து 15 சிறுமிகள் பலாத்காரம்: கர்நாடக மடாதிபதி கொடூரம்
கர்நாடகாவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு சுவாமி (வயது 64). இவர் மடத்தின் பள்ளியில் படித்து வந்த 2 மாணவிகளை பலாத்காரம் செய்ததாக சித்ரதுர்கா புறநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மடாதிபதி, வார்டன் ரஸ்மி, மடத்தில் பணியாற்றி வந்த 2 ஊழியர்கள், வக்கீல் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் 694 பக்கம் அடங்கிய குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு, 15 சிறுமிகளுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஆப்பிளை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். இதில் ஒரு சிறுமி இறந்துள்ளார். கடவுளின் அவதாரம் என தன்னை கூறி கொண்ட மடாதிபதி, தனக்கு சேவை செய்யாவிட்டால் சாபமிட்டு விடுவேன். தனது சாபம், சிறுமிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் அழித்து விடும் என கூறி மிரட்டி இதனை செய்துள்ளார். அநாதை குழந்தைகளையும், மடம் சார்பில் நித உதவி அளிக்கப்படும் குடும்பத்தினரின் சிறுமிகளையும் தனது இலக்காக வைத்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த வழக்கு பற்றி, சட்டத்தின்படி மடாதிபதி தண்டிக்கப்படுவார் என கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திர சூட் பதவி ஏற்றார்
நேற்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித், தனக்கு அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட்டை கடந்த மாதம் 11-ந் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். அதையடுத்து, டி.ஒய். சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்த மாதம் 17-ந்தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் இன்று பொறுப்பேற்றார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
1959-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி பிறந்தவரான சந்திரசூட், கடந்த 2016-ம் ஆண்டு மே 13-ந்தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அவர் தலைமை நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி வரை பொறுப்பு வகிப்பார். புதிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி.சந்திரசூட்டும் இந்திய தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ஆவார். மிக நீண்டகாலம் இப்பதவியை அலங்கரித்தவர் என்ற பெருமை பெற்ற அவர், 1978-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல், 1985-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி வரை இந்த உச்ச பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.