உலகின் முன்னணி நிறுவங்களின் ஸ்டியரிங்குகளை பிடித்திருக்கும் இந்தியர்களின் வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளார் ஸ்ரீராம் கிருஷ்ணன். ட்விட்டர் இணையதளத்தை வாங்கியிருக்கும் எலன் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்துவரும் நிலையில் அவருடன் இணைந்து இதற்கெல்லாம் ஆலோசகராக இருந்து வருகிறார் ஸ்ரீராம் கிருஷ்ணன். இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையை சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விஷயம்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு அதன் தலைமைப் பதவியில் இருந்த இந்தியரான பராக் அகர்வாலை வீட்டுக்கு அனுப்பினார் எலன் மஸ்க். இதனால், ட்விட்டரில் இந்தியரில் கை தாழ்ந்து போய்விட்டதோ என்று எல்லோரும் கவலைப்பட்ட நேரத்தில் ஸ்ரீராம் கிருஷ்ணனை தனது முக்கிய குழுவில் இணைத்து இந்தியாவின் மரியாதையை காப்பாற்றினார் எலன் மஸ்க்.
சென்னையில் பிறந்து வளர்ந்தவரான ஸ்ரீராம் கிருஷ்ணன், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பிடெக் படித்து முடித்துள்ளார். பின்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அவருடைய மனைவி ஆர்த்தியும் சென்னையில் படித்து வளர்ந்தவர்தான். 2003-ம் ஆண்டில் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருவரும் சந்திக்க, அவர்களுக்குள் காதல் அரும்பியுள்ளது. 2005-ம் ஆண்டில் வேலைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் ஸ்ரீராம். தற்போது சான்பிரான்சிஸ்கோ நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார் ஸ்ரீராம். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
ஆரம்பத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த ஸ்ரீராம், பின்னர் 2017-ம் ஆண்டில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பிரிவில் இயக்குநராக பணிக்கு சேர்ந்துள்ளார். பின்னர் 2 ஆண்டுகளில் அந்நிறுவனத்தில் இருந்து விடுபட்டு Andreessen Horowitz (a16z) என்ற நிறுவனத்தில் பங்குதாரர் ஆகியுள்ளார்.
கடந்த 30-ம் தேதி ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கிய தினம்தொட்டு அவரை நிழலாக பின்தொடர்ந்து அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய ஆலோசனை வழங்கி வருகிறார் ஸ்ரீராம். எலன் மஸ்குக்கு உதவுவதுடன் தற்போது ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் (a16z) என்ற நிறுவனத்தில் பொது பங்குதாரராகவும் ஸ்ரீராம் உள்ளார். இந்த நிறுவனம் கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து இயங்கி வருகிறது.
தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் எலன் மஸ்க், இதற்கு முன்பு யாஹூ, ஃபேஸ்புக், மற்றும் ஸ்னாப் ஆகியவற்றிலும் நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார் அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி நெட்ஃபிலிக்ஸ் மற்றும் பேஸ்புக்கில் பணிபுரிந்துள்ளார்.
2021-ம் ஆண்டு ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் ஆர்த்தி ராமமூர்த்தியின் செல்வாக்குமிக்க போட்காஸ்ட் நிகழ்ச்சியான ‘தி குட் டைம்ஸ் ஷோ’வில் எலான் மஸ்க் தோன்றினார்.
ட்விட்டர் நிறுவனத்தில் இணைந்தது பற்றி சமூக வலைதளத்தில் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள பதிவில், “டுவிட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்கிற்கு உதவி வருகிறேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் முக்கியமான நிறுவனம். உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் கூட. மஸ்க், அதை சாதித்து காட்டுவர் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியருக்கு பதவி வழங்கிய அதே கையோடு, வாரத்தில் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நாளும் 12 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஊழியர்களுக்கு நிபந்தனை விதித்து வருகிறாராம் எலன் மஸ்க். இதெல்லாம் எங்குபோய் முடியுமோ என்று புலம்பி வருகிறார்கள் ட்விட்டர் ஊழியர்கள்.