பல்வேறு குழப்பங்கள் மற்றும் யோசனைகளுக்குப் பிறகு ட்விட்டர் தளத்தை வாங்கிய எலன் மஸ்க், இப்போது தனது அதிரடிகளை காட்டத் தொடங்கிவிட்டார். அந்த அதிரடிகளில் முக்கியமானது இனி ட்விட்டரில் புளூ டிக் பெற மாதந்தோறும் சந்தா கட்ட வேண்டும் என்பது.
அதிக அளவில் மக்கள் பின் தொடரும் ட்விட்டர் கணக்குகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள், தனி எழுத்தாளர்கள், தனியார் நிறுவனங்கள், பிரபலங்களின் அக்கவுண்ட்கள் என பல ட்விட்டர் கணக்குகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, ட்விட்டர் நிறுவனம் அவற்றின் உன்மைத்தன்மையை சோதித்து அவற்றுக்கு ப்ளூ டிக் வழங்கி அங்கீகரித்து வருகிறது.
இந்த அங்கீகாரத்துக்கு இதுவரை கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இப்போது ட்விட்டரில் ப்ளூ டிக் பேட்ஜ் வைத்துக்கொள்ள இனி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என பேச்சு அடிபடுகிறது. இதற்கான முயற்சிகளில் எலன் மஸ்க் இறங்கியுள்ளார். மாதம் ஒன்றுக்கு 1,600 ரூபாயாக இந்த கட்டணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படி கட்டணம் செலுத்துவதை கட்டாயமாக்கி விட்டால் ப்ளூடிக் வைத்திருக்கும் 70 சதவீத பயனர்கள் அந்த ப்ளூ பேட்ஜை புறக்கணிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.