காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகியதைத் தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியாகாந்தி இருந்து வருகிறார். இந்நிலையில், கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மல்லிகார்ஜுன கார்கேவும் சசிதரூரும் போட்டியிட்டனர். இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கே அக்டோபர் 26ஆம் தேதி பதவி ஏற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, தேர்தல் சான்றிதழை கார்கேவிடம் முறைப்படி ஒப்படைத்தார். பின்னர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பொறுப்புகளை கார்கேவிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் அமர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் 5 இடங்களில் தாக்குதலுக்கு சதி – முபின் வீட்டில் சிக்கிய டைரியில் தகவல்
கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாளான 23ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் அதே பகுதியில் வசித்து வந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் உடல் கருகி பலியானார். கார் வெடித்த இடத்தில் ஆணிகளும் கோலிக்குண்டுகளும், பால்ரஸ் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் பவுடர், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்கள் அடங்கும். இதையடுத்து போலீசார் 9 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே கோவை கோட்டைமேடு, எச்.எம்.பி.ஆர். தெருவில் உள்ள முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரு சிறு டைரியை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த டைரியை ஆய்வு செய்த போது சங்கேத குறியீடுகள், பல ரகசிய தகவல்கள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக ‘சுற்றுலா தலங்கள்’ என்ற சங்கேத குறியீட்டு பெயரில் கோவையில் உள்ள 5 முக்கிய இடங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. இந்த 5 இடங்களும் பொதுமக்கள் தினமும் அதிக அளவு வந்து செல்லும் இடங்களாகும். எனவே, இந்த 5 இடங்களிலும் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் கார் சிலிண்டர் மூலம் மிக பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நயன்தாரா வாடகை தாய் விவகாரம்: இன்று மாலை வெளியாகிறது அறிக்கை
நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் நட்சத்திர ஜோடி வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொண்டது சர்ச்சைக்குள்ளானது. இது தொடர்பாக விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.
இந்த நிலையில், நேற்று சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகை தாய் விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவித்தார்.
புற்றுநோய் அபாயம்: ஷாம்பூக்களை திரும்பப் பெற்றது யுனிலீவர் நிறுவனம்
அழகு சாதனப் பொருட்களில் ஆபத்து கலந்துள்ளதாக நீண்ட காலமாகவே நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள். இந்த குற்றச்சாட்டால் ஜான்சன் அண்ட் ஜான்சன், நியூட்ரோஜீனா, எட்ஜ்வெல் பெர்சனல் கேர் நிறுவனத்தின் பனானா போட், ஓல்ட் ஸ்பைஸ் மற்றும் யுனிலீவரின் சாவே ஆகிய பொருட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெர்சனல் கேர் பொருட்களின் ஏரோஸால்களில் இருக்கும் பெரும் பிரச்சினையே அவற்றை ஸ்ப்ரே செய்ய பயன்படுத்தப்படும் ப்ரொப்பலன்ட்களில் பென்சீன் இருப்பதே என்று பெர்சனல் கேர் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன. பென்சீன் நம் உடலில் கலந்தால் நமக்கு ரத்தப் புற்றுநோய் அல்லது ரத்தம் சம்பந்தப்பட்ட பிற புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் பென்சீன் வேதிப்பொருள் கலந்ததின் காரணமாக தனது தயாரிப்புகளான டவ் ட்ரை ஷாம்பூ உள்ளிட்ட பல்வேறு ஷாம்புகளை திரும்பப் பெறுவதாக யுனிலீவர் நிறுவனம் அறிவித்துள்ளது. நெக்சஸ், சாவே, ட்ரெஸ்ஸமே, டிகி மற்றும் ஏரோஸார் ட்ரை ஷாம்பூ ஆகியனவற்றை அமெரிக்க சந்தைகளில் இருந்து திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கூடுதல் அபராதம்: இன்று முதல் அமல்
இந்தியா முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு உயர்த்தியது. இதனை தமிழ்நாட்டில் அமல்படுத்துவது தொடர்பான அரசாணையை கடந்த வாரம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டார். இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று இரவு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகரிக்கப்பட்ட அபராத தொகை இன்று முதல் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய அபராத தொகையை வசூலிப்பது தொடர்பான ஆரம்பகட்ட பணிகளை இன்று தொடங்கினர். புதிய விதிகளின் படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000, மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம், இலகுரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ஆயிரம் ரூபாய், நடுத்தர மற்றும் கனரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ரூ.2 ஆயிரம், செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினால் ரூ.1000, இந்த தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம், உடல் மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000, 2-வது முறை ரூ.2 ஆயிரம், ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.