சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி இன்று பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதனை தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மேற்கு பகுதிகளில் பார்க்க முடிந்தது. இது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின்னர் நவம்பர் 8-ந்தேதி முழு சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இது தமிழ்நாட்டில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிடங்களே தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” தீபாவளிக்கு முன்தினம் அக்.23, கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு கார் விபத்து நிகழ்ந்ததாக செய்தி வந்தது. பின்னர், அந்தக் காரிலிருந்த சிலிண்டர் வெடித்துள்ளது என்று செய்தி வந்தது. இதில் உண்மையை சொல்ல வேண்டிய கடமை பாஜகவுக்கு உள்ளது.
கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல். இரண்டு தினங்களுக்கு முன், காரை ஓட்டி இறந்த ஜமேசா முபீன் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மாற்றியுள்ளார். If the news about my death reaches you forgive my mistake. come particpate in my janesha and pray for me என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் முன்பு நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள், என் குற்றங்களை மறந்துவிடுங்கள், என் இறுதிச்சடங்கில் பங்கேறுங்கள், எனக்காக வழிபாடு செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இது ஐஎஸ்ஐஎஸ் படையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் பயன்படுத்தும் அதே வார்த்தைகள்” என்று கூறினார்.
இந்தியாவில் 2 மணி நேரம் முடங்கிய வாட்ஸ் அப்: என்ன காரணம்?
இந்தியா உட்பட சில நாடுகளில் இன்று மதியம் சுமார் 12.45 மணியளவில் வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது. இதுகுறித்து டுவிட்டரில் வாட்ஸ்அப் நிறுவனத்தை டேக் செய்து பல பயனர்கள் பதிவிட்டனர். குறிப்பாக #WhatsappDown என்ற ஹேஷ்டேக் குறியிட்டு பல பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் வேலைசெய்யவில்லை என்று புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வாட்ஸ் அப் சேவையை நிர்வகிக்கக்கூடிய மெட்டா நிறுவனம் விரைவில் சீராகும் என்று கூறியது. பின்னர் மீண்டும் செயல்படத் தொடங்கியது வாட்ஸ் அப்.
தீபாவளியன்று சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளி அன்று காலை மற்றும் இரவு நேரங்களில் தலா ஒரு மணி நேரம் வீதம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பல்வேறு விதிமுறைகளும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையன்று நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் விதிமுறைகள் மீறப்பட்டன. இதன் விளைவாக காற்று மாசுபாட்டின் தரக்குறியீடு கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை இன்று காலை 4 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 192-ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.