No menu items!

பாஜகவின் 100 கோடி ரூபாய் திட்டம் – மிஸ் ரகசியா!

பாஜகவின் 100 கோடி ரூபாய் திட்டம் – மிஸ் ரகசியா!

“12 மணிக்கு சூரிய கிரகணம் ஆரம்பம். அதுக்குள்ள வீட்டுக்கு போகணும். அதனால செய்திகளை கடகடன்னு சொல்றேன் குறிச்சுக்கோங்க…” என்று படபடவென பேசிக்கொண்டே வந்தாள் ரகசியா.

“உன் அவசரம் உனக்கு. சரி செய்திகளை ஒவ்வொன்றாகச் சொல், குறித்துக் கொள்கிறேன்.”

“இந்த தீபாவளியில் யார் சந்தோஷமாக இருக்காங்களோ இல்லையோ, திமுக பிரமுகர்கள் ரொம்பவே சந்தோஷமா இருக்காங்க. தீபாவளி பரிசுகள்தான் இதற்கு காரணம். திமுக தொண்டர்கள் மீது நிர்வாகிகள் எப்போதும் பெரிய அளவில் கரிசனம் காட்டுவதில்லை. ஆனால், இந்த முறை மாவட்ட செயலாளர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் என கட்சியில் பொறுப்பில் எல்லோருக்கும் அவரவர் வகிக்கும் பதவிக்கு ஏற்ப 5 லட்சம் முதல் ஒரு லட்சம் வரை பட்டுவாடா செஞ்சிருக்காங்களாம். கூடவே பட்டு வேட்டி, சட்டை, பேண்ட் – சட்டை, புடவை, பட்டாசு என்று பரிசுப் பொருட்களையும் வாரி வழங்கி இருக்காங்க. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கட்சிக்காரர்களை குஷிப்படுத்தணும்னு மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கும் திமுக தலைமை போட்ட உத்தரவுதான் இதுக்கு காரணம். இதேமாதிரி பொங்கல் பண்டிகைக்கும் எல்லாருக்கும் பரிசுகளை பட்டுவாடா செய்யணும்னு அறிவுறுத்தி இருக்காங்களாம்.”

“சந்தோஷமான விஷயம்தான்.”

“ஆனா முதல்வர்தான் சந்தோஷமா இல்லை. கோவையில நடந்த கார் வெடிப்பு சம்பவத்தால முதல்வர் வருத்தத்திலிருக்கிறார். இந்த கார் வெடிப்பு சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் டிஜிபியைத் தொடர்புகொண்ட முதல்வர், அவரை உடனடியா கோவைக்கு போகச் சொல்லியிருக்கார். கடந்த 1998-ம் ஆண்டில் நடந்ததைப்போல பெரிய பாதிப்பு ஏதும் இப்ப ஏற்பட்டுடக் கூடாது. அதனால அரசுக்கு கெட்ட பெயர் வந்துடக் கூடாதுங்கிற டென்ஷன் முதல்வருக்கு. அதனால உடனே ஸ்பாட்டுக்குப் போய் தீவிரமா விசாரணை செய்யணும்னு டிஜிபிக்கு அவர் உத்தரவு போட்டிருக்கார்.”

“ஆறுமுகசாமி ஆணைய விசாரணை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கைகளின் விளைவுகள் பற்றிய செய்தி ஏதும் இருக்கா?”

“இந்த 2 விசாரணை கமிஷன்களின் அறிக்கையால திமுகவின் இமேஜ் எந்த அளவுக்கு உயர்ந்திருக்குன்னு திமுக தொழில்நுட்பக் குழுவினர் ஒரு சர்வே நடத்தி இருக்காங்க. அதோட முடிவை முதல்வர் ஆவலோட எதிர்பார்த்துட்டு இருக்கார். அதேநேரத்தில் சில அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலினிடம், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக் கமிஷனின் அறிக்கையால் தாய்மார்களிடம் உங்கள் இமேஜ் கூடியிருக்கு’ன்னு சொல்லி இருக்காங்க. அதை ஒரு புன்முறுவலோட ஸ்டாலின் ஏத்துக்கிட்டு இருக்கார்.”

“நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக வேகமா ரெடியாகிறாதாமே… கேள்விப்பட்டேனே?”

“ஆமாம். நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழக பாஜகவுக்கு இந்த முறை இப்போதைய தவணையா 100 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறதா சொல்றாங்க. பாஜக தொண்டர்களுக்கு மாத ஊதியம், அவர்களுக்குன்னு ஒரு வாகனம் எல்லாம் கொடுக்கணும்னு மேலிடத்துல சொல்லி இருக்காங்களாம். தமிழக அரசின் திட்டங்களில் மத்திய அரசோட பங்களிப்பு எவ்வளவு? அவங்க என்ன செய்திருக்காங்கங்கிறதைப் பத்தின புள்ளி விவரங்களை துண்டுப் பிரசுரங்கள்ல அச்சடிச்சு கொடுக்கறது அவங்களோட முக்கியமான வேலையா இருக்கும். அதோட அங்கங்க தெருமுனை கூட்டங்களையும் நடத்தி பாஜகவோட கொள்கைகளை மக்கள்கிட்ட கொண்டு போகணும்னும் சொல்லி இருக்காங்க.”

“இந்த 100 கோடி ரூபாய்ல எவ்வளவு பணம் உண்மையான தொண்டர்களுக்கு கிடைக்கும்கிறதுதான் கேள்விக்குறி.”

“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்னொரு ரூட்ல போயிட்டு இருக்காரு. தமிழ்நாட்டோட முக்கிய பத்திரிகையாளர்களைச் சந்திக்கற அவர், ‘தனியா யூடியூப் சேனல் ஆரம்பிங்க. அதுல பாரதிய ஜனதா கட்சியோட புகழைப் பாடணும்னு இல்லை. திமுக அரசை கடுமையா விமர்சிச்சாவே போதும். திமுகவை விமர்சிச்சு மக்கள் கருத்து, மீம்ஸ்னு போடுங்க அதுக்கான நிதி ஆதாரத்தை நாங்க பாத்துக்கறோம்’னு உறுதி அளிக்கறாராம்.”

“ஓஹோ?…”

“இன்னொரு பக்கம் தமிழகத்தில் ஆளும் கட்சி பிரமுகர்கள் பினாமி பெயரில் வாங்கிய சொத்து விவரங்களை சேகரிக்கறதுக்காகவே தமிழகத்துக்குன்னு தனியா ஒரு அமலாக்கத்துறை அதிகாரிய நியமிச்சிருக்கு மத்திய அரசு. அவர் இப்ப அதுக்கான பணிகளில் இறங்கி இருக்காரு. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது தொடர்பா கைதுகள் இருக்கும்னு பேசிக்கறாங்க.”

“தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியோட பிறந்தநாளை காங்கிரஸ் கட்சிக்காரங்க ஒற்றுமையா கொண்டாடி இருக்காங்களே?”

“அப்படியும் சில முட்டல் மோதல்கள் இல்லாம இல்லை. இந்த கூட்டத்துல பேசின ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘காங்கிரஸ் கட்சியில் இருந்த கோஷ்டி சண்டையெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டது. நாம் எல்லோரும் கே.எஸ். அழகிரி தலைமையில் ஒன்றாக இருக்கிறோம்’னு அவரைப் பாராட்டிப் பேசியிருக்கார். ஆனால், இதை கார்த்திக் சிதம்பரம் ஏற்றுக்கலை. காங்கிரஸ் கட்சியை வளர்க்க கே.எஸ். அழகிரி என்ன செய்தார்ங்கிறது அவரோட கேள்வி. இந்த கேள்வியை மத்த சில தலைவர்கள் ரசிக்கலை. மொத்தத்துல காங்கிரஸ் கட்சியில இப்ப கோஷ்டி சண்டை இல்லை… ஆனா இருக்குது!”

“ராஜீவ் காந்தி அறக்கட்டளையோட உரிமத்தை ரத்து செஞ்சிருக்காங்களே?”

“ராகுல் காந்தியோட பாத யாத்திரைக்கு மக்கள் மத்தியில் கிடைக்கிற ஆதரவுதான் இதுக்கெல்லாம் காரணம்னு சொல்றாங்க. கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ராகுல்காந்தியோட நடைப்பயணத்துக்கு நல்ல கூட்டம் திரண்டிருக்கு. இது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவா மாற வாய்ப்பு இருக்குன்னு அமித் ஷாவுக்கு தகவல் போயிருக்கு. மக்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு பெருகறதால சிதறிக் கிடக்கிற எதிர்க்கட்சிகளும் அவங்களோட சேரலாமோன்னு அமித் ஷா பயப்படறார். அதனால காங்கிரஸ் கட்சிக்கு செக் வைக்கத்தான் ராஜீவ் காந்தி அறக்கட்டளையோட உரிமத்தை ரத்து செஞ்சுட்டதா சொல்றாங்க” என்று சொல்லிவிட்டு சிட்டாக கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...