‘வாவ் தமிழா’ யூடியூப் தளத்தில் (youtube.com/WowTamizhaa) ‘ மாணவர்கள் – சாதனையாளர்கள் சந்திப்பு’ தொடர் வீடியோக்கள் விரைவில் வெளிவரவுள்ளது. அந்த வரிசையில் முதல் நிகழ்ச்சி டைரக்டர் மிஷ்கின் – மாணவர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் டைரக்டரை வைத்து படங்களை சொல்வது ரொம்ப குறைவு. இது பாலசந்தர் படம், இது பாரதிராஜா படம், இது மகேந்திரன் படம், இது ஷங்கர் படம் என்று சில டைரக்டர்கள்தான் அந்த முத்திரை வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்கள். டைரக்டர் மிஷ்கினும் அப்படி ஒரு முத்திரை இயக்குநர்.
யுனீக் என்று இங்கிலிஷில் சொல்வார்கள். தனித்து தெரிவது. மிஷ்கின் ஒரு யுனீக் டைரக்டர். அவர் படங்களில் திரைமொழி வித்தியாசமானது. எல்லோரையும் கவரக் கூடியது. உலக சினிமாக்களுக்கு சமமானது. ‘சித்திரம் பேசுதடி’யில் முதல் முறையாக அனைவரையும் கவர்ந்த இயக்குநர் மிஷ்கின் இப்போது… ‘பிசாசு’ 2 வரைக்கும் அதை தக்க வைத்திருக்கிறார்.
டைரக்டர் மிஷ்கின், ‘வாவ் தமிழா’ யூடியூப் தளத்துக்காக திரை மொழியை பாடமாக படிக்கும் சென்னை அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரி விஷூயுவல் கம்யூனிகேஷன் மாணவர்களை சந்தித்தார்.
கல்லூரிக்குள் மிஷ்கின் கார் நுழைந்ததுமே, அவரைக் கண்டுகொண்ட ஒரு மாணவர் ஓடி வந்து, ‘வாவ் தமிழா’ தளத்தில் வந்த மிஷ்கினின் ‘Book Talk’ வீடியோக்களை (youtube.com/watch?v=Ew22e8fTJjs) பார்த்துள்ளதாகவும், அதில் அவர் குறிப்பிடும் புத்தகங்களை படித்துள்ளதாகவும் கூறினார். ‘ஆரம்பமே அதிர்ச்சியா இருக்கே’ என்றவாறே அந்த மாணவனுடன் கைகுலுக்கி வாழ்த்து சொல்லிவிட்டு நகர்ந்தார் மிஷ்கின். தொடர்ந்து மிஷ்கினுடன் செல்ஃபி எடுக்க சில மாணவர்கள் ஓடி வந்தார்கள். அனைவருக்கும், ‘நிகழ்ச்சி முடிந்தபிறகு ஃபிரண்ட்ஸ்’ என்று அன்பாக சொல்லிவிட்டு அரங்கத்துக்குள் நுழைந்தார்.
அடுத்த மூன்று மணி நேரம்… கதை என்றால் என்ன? திரைக்கதை எப்படி தயாராகிறது? பின்னர் அது எப்படி சினிமாவாக உருவாகிறது? ஒரு திரைப்பட இயக்குநராக நடிகர்களிடம் இருந்து தனக்கு வேண்டிய நடிப்பை எப்படி வாங்குகிறார்? இதுபோல் ஸ்டண்ட் மாஸ்டர், நடன இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், கேமராமேன் ஒவ்வொருவரிடமும் படத்துக்கு வேண்டியதை எப்படி பெற்றுக்கொள்கிறார் என மிஷ்கின் அவருக்கேயுரிய கலகலப்புடனும் குதூகலமுடனும் கழிந்தது. ஒவ்வொரு அனுபவத்தையும் மிஷ்கின் விவரித்தபோது மாணவர்கள் உற்சாகமாக கைதட்டி கொண்டாடினார்கள்.
‘அஞ்சாதே’ படத்தில் வரும் ‘கத்தால கண்ணால குத்தாத நீ என்ன’, ‘கண்ணதாசன் காரைக்குடி’ பாடல்களை பாடலாசிரியர் கபிலனுடன் இணைந்து எழுதிய அனுபவங்களை சொன்னபோது மாணவர்கள் கைதட்டி, சிரித்து அரங்கத்தை அதிர வைத்தார்கள்.
எந்த துறையில் சாதிக்க வேண்டுமென்றாலும் சின்சியாரிட்டியும் சீரியஸ் பயிற்சியும் மிக அவசியம் என்று குறிப்பிட்ட மிஷ்கின் அதற்கு உதாரணமாக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்கள் டெண்டுல்கரையும் தோணியையும் சொன்னார். ‘இந்தியாவுக்கு பல மேட்ச்களை வின் செய்து கொடுத்தவர் தோணி. ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். ஒரு மேட்சில் 300 பந்துகளில் 50 முதல் 100 பந்துகளைதான் அவர் சந்திக்க வாய்ப்புள்ளது. ஆனால், இதற்காக அவர் 5 லட்சம் முதல் 10 லட்சம் பந்துகள் வரை விளையாடி பயிற்சி எடுத்திருப்பார். இயக்குநர் ஆக வேண்டும் என்றால் அவரை மாதிரியான கடுமையான பயிற்சியை நீங்களும் செய்ய வேண்டும். சினிமாவுக்கு கதை எழுத உட்காரும் முன்னால் குறைந்தது 2000 கதைகளையாவது படித்திருக்க வேண்டும்’ என்றார்.
மேலும், ‘புத்தகம் வாசிப்பு ஒரு நல்ல திரைப்பட இயக்குநராக மட்டுமல்ல, உங்கள் அம்மா – அப்பாவுக்கு ஒரு நல்ல மகனாக, உங்கள் காதலிக்கு ஒரு நல்ல காதலனாக, உங்கள் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக, உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அப்பாவாக உங்களை மாற்றும்’ என்றும் குறிப்பிட்டார்.
இந்த மூன்று மணி நேர நிகழ்வில் மாணவர்களிடம் மிஷ்கின் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியது, ‘புத்தகம் வாசியுங்கள், புத்தகம் வாசியுங்கள்’ என்பதைத்தான். தான் படிக்கவும் புத்தகம் வாங்கவும் மட்டுமே சம்பாதிப்பதாக சொன்ன மிஷ்கின், ‘இதுவரைக்கும் குறைந்தது 2 கோடி ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருப்பேன்’ என்றார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் மிஷ்கினுடன் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போதும் சில மாணவர்கள் அவரிடம் சந்தேகங்களை கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.