British Broadcasting Corporation (பிரிட்டானிய ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம்) என்று அழைக்கப்படும் பிபிசி தற்போது 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1922-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்த பிபிசி, இன்றைய தினம் உலகிலேயே அதிக நம்பகத்தன்மை வாய்ந்த செய்தி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தனை சிறப்புவாய்ந்த பிபிசி நிறுவனத்தைப் பற்றி சுவாரஸ்யமான சில தகவல்கள்…
இங்கிலாந்து அரசின் நிதியுதவியுடன் பிபிசி தொலைக்கட்சி நடத்தப்படுகிறது. தொலைக்காட்சி லைசன்ஸுக்காக மக்கள் செலுத்தும் பணம், பிபிசி நிகழ்ச்சிகளை டவுன்லோட் செய்ய மக்கள் செலுத்தும் பணம் ஆகியவற்றின் ஒரு பகுதி பிபிசி செய்தி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது.
இங்கிலாந்தில் நடக்கும் எந்த செய்தியையும் உலக மக்களுக்கு சிறப்பாக வழங்க வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டு பிபிசி செய்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிலாந்து மட்டுமின்றி உலகையே அதிரவைக்கும் செய்தியாக இங்கிலாந்து ராணியின் மரணச் செய்தி இருக்கும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் அந்தச் செய்தியை எப்படி கொடுப்பது என்பது பற்றி பிபிசி நிறுவனம் ஒத்திகை பார்த்துள்ளது.
1960-ம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. இங்கிலாந்து ராணி மட்டுமின்றி அவரது கணவர் பிலிப்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்தின் முக்கிய புள்ளிகளின் மரணச் செய்தியை ஒளிபரப்புவது பற்றியும் ஆண்டுதோறும் பிபிசி நிறுவனம் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.
பிபிசி என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது செய்திகள்தான். அந்த அளவுக்கு அள்ள அள்ள அந்த நிறுவனம் செய்திகளை வழங்கி வருகிறது. அப்படி செய்திகளை வழங்கிவரும் பிபிசி நிறுவனம், செய்திகளே இல்லாமல் ஒரு நாள் தவித்துள்ளது. 1930-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதிதான் அந்த நாள்.
அன்றைய தினம் வாசிப்பதற்கு செய்திகள் ஏதும் கிடைக்காததால் அன்று செய்தி வாசித்தவர், ‘மாலை வணக்கம். இன்று புனித வெள்ளி. மற்றபடி செய்திகள் ஏதும் இல்லை’ என்று மட்டும் சொல்லி செய்திகளை முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மீதமுள்ள செய்தி நேரத்துக்கு பியானோ இசை ஒளிபரப்பப்பட்டுள்ளது.
1949-ம் ஆண்டில் பிபிசி நிறுவனம் தனது எழுத்தாளர்களுக்கும், செய்தி வாசிப்பாளர்களுக்கும் செய்திகளை நகைச்சுவையுடன் வழங்குவது தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆபாசமான நகைச்சுவைகளைச் சொல்லக்கூடாது. கழிப்பறை, தேனிலவு, பெண்களின் உள்ளாடைகள், விபச்சாரம், பணிப்பெண்கள் உள்ளிட்ட விஷயங்களை காமெடி ஆக்கக்கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிபிசி தொலைக்காட்சியில் ‘ப்ளூ பீட்டர்’ என்ற நிகழ்ச்சி கடந்த 1958-ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. உலகிலேயே அதிக ஆண்டுகள் ஒளிபரப்பாகும் குழந்தைகள் நிகழ்ச்சி என்ற பெருமையை ‘ப்ளூ பீட்டர்’ பெறுகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிபிசியின் சேவைகள், 1946-ம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் தொடங்கியது.
1923-ம் ஆண்டுமுதல் பிபிசி நிறுவனத்தில் பெண்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
உலகின் சிறந்த செய்திச் சேனலாக எதைக் கருதுகிறீர்கள் என்ற கேள்வியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 16 நாடுகளில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் அதிகம் பேரின் அதரவுடன் முதல் செய்திச் சேனலாக பிபிசி தேர்ந்தெடுக்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 96 சதவீதம் பேர் பிபிசி செய்திகளை தொடர்ந்து பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் 33 முறை பிபிசி மூலம் உரையாற்றியுள்ளார்.
பிபிசி நிறுவனம் தற்போது 42 மொழிகளில் தனது சேவைகளை வழங்கி வருகிறது.