பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வாழங்க மும்பை உயர் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனை பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது. ஜாமின் வேண்டுமானால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.
கோர்ட்டின் நிபந்தனையை தெரிந்துகொள்ளும் முன்பு, நடந்த சம்பவத்தைப் பார்ப்போம். இந்த பாலியல் பலாத்கார சம்பவம் 2018-ல் நடந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரும், பாதிக்கப்பட்ட பெண்ணும் பக்கத்து வீட்டுக்காரர்கள். இருவரும் முதலில் நண்பர்களாகத்தான் பழகி வந்துள்ளனர். பின்பு அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலுக்கு இருவரின் பெற்றோரும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இருவரும் நெருக்கமாக பழகியதில் கர்ப்பமாகியிருக்கிறார் அந்தப் பெண். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார்.
தான் கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தினரிடம் இருந்து மறைக்க, அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது குழந்தையை சாலையோரத்தில் விட்டுவிட்டு, அவர் அங்கிருந்து சென்றுள்ளார். அவரை அதற்குப் பின் காணவில்லை.
2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்தது, ஏமாற்றுதல், ஆள் கடத்தல் மற்றும் முறைகேடான உடலுறவுக்கு தூண்டுதல், ஆகிய புகார்களின் அடிப்படையில் காதலர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட காதலரின் தரப்பு வழக்கறிஞர், அவர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளவும் குழந்தையை ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ள தாக தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்துவரும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி, பாரதி டங்கிரி, இது இருவரும் சம்மதித்து நடந்த உறவு, மேலும் அந்த ஆணும் அவர்து பெற்றோரும் இந்த திருமணத்தை ஏற்க தயாராக உள்ளதால், அந்த பெண்ணை 1 வருடத்திற்குள் கண்டுபிடித்துவிட்டால், அவரை திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால்தான் ஜாமீன் கிடைக்கும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.