தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் உறுப்பினர்கள் 2 மணித்துளிகள் எழுந்து நின்று மவுனம் கடைபிடித்தனர். தொடர்ந்து 10.11 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், உசிலம்பட்டி அய்யப்பன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மற்ற அதிமுக எம்.எல்.ஏ.களும் அதிமுக கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் எம்.எல்.ஏ.களும் கலந்துகொள்ளவில்லை. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாகவும், அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமித்து உள்ளதாகவும் சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார். ஆனால், எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஓ.பன்னீர்செல்வம் அமரும் இருக்கை மாற்றப்படாமல் இருந்தது. இதனால் இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவை கூட்டத்துக்கு வராமல் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-23ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மொத்தம் 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 36,100 பேர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்திருந்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலில் அரசு ஒதுக்கீட்டில் மதுரையைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயக் 705 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளார். 7.5% சதவீத அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஈரோடு மாவட்டம் கவுந்தம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி தேவதர்சினி 518 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
தொடர்ந்து செய்ததியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “848 தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான 7,377 இடங்கள் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 454 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் என மொத்தம் 558 இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் (அக்.19) தொடங்குகிறது” என தெரிவித்துள்ளார்.
சசிதரூர் VS கார்கே: இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு
காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் முதலாவதாக தன் வாக்கை செலுத்தி இருக்கிறார். காங்கிரஸ் இடைகால தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் டெல்லியில் வாக்குகளை செலுத்தினர்.
அனைத்து வாக்கு பெட்டிகளும் டெல்லி கொண்டு வரப்பட்டு, 19ஆம் தேதி காலை 10 மணியளவில் எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றே உடனடியாக இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே, சசிதரூர் ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் இந்த தேர்தலின் மூலம் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
தமிழ்நாட்டில் தனியார் பால்விலை ரூ.2 முதல் ரூ.6 வரை உயர்வு
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் இது தமிழ்நாட்டின் பால் நுகர்வோரில் 16 சதவீதத்தையே பூர்த்தி செய்தது. மீதமுள்ள 84 சதவீதத்தை தனியார் பால் விற்பனையாளர்களே பூர்த்தி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஹெரிடேஜ், ஜெர்சி, ஆரோக்கியா ஆகிய 3 தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஜெர்சி, ஹெரிட்டேஜ் நிறுவனங்கள் பால் விலையை தலா ரூ. 6 மற்றும் ரூ. 4 என்ற விகிதத்தில் உயர்த்தி இருக்கின்றன. ஆரோக்கியா நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
சாந்தி தியேட்டர் வழக்கு: நடிகர் பிரபுவுக்கு எதிராக சகோதரிகள் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி
நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துகளில் தங்களுக்கு பங்கு தராமல் சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஏமாற்றிவிட்டதால், தங்களுக்கு சொத்துகளை பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மேலும், சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் சொத்துகளை விற்கும் நடவடிக்கையில் ராம்குமாரும் பிரபும் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை சாந்தி தியேட்டர் சொத்துகள், பங்கு விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூடுதல் மனுக்களும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் தீர்ப்பளித்தார். அதில், சாந்தி தியேட்டர் சொத்கள், மற்றும் பங்கு விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிய சாந்தி, ராஜ்வி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.