சக கிரிக்கெட் வீரர்களே பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஆடம்பரமாக வாழ்க்கையை வாழ்ந்தவர் சவுரவ் கங்குலி. பிறக்கும்போதே கோடீஸ்வரராக பிறந்த கங்குலி, கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பே பணமழையில் நனைந்தவர். அவரது அப்பா ஆசியாவின் முன்னணி அச்சகத்தை நடத்தி வந்துள்ளாதால் வீட்டில் பணத்துக்கு பஞ்சமில்லை.
பின்னாளில் கங்குலி கிரிக்கெட்டில் குதிக்க மேலும் பணக்காரர் ஆனார். அவரது மொத்த சொத்து மதிப்பு தற்போது 365 கோடி ரூபாய். தனது செல்வத்தை வைத்து காஸ்ட்லியான பல ஆடம்பர பொருட்களை வாங்கியுள்ளார் கங்குலி. அவற்றில் சில…
48 அறைகள் கொண்ட பரம்பரை வீடு
கொல்காத்தாவில் அமைந்துள்ள கங்குலியின் வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை மட்டுமே 48. கூட்டுக் குடும்பமாக தனது மகன்களும், பேரக் குழந்தைகளும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இந்த வீட்டைக் கட்டியுள்ளார் கங்குலியின் அப்பா. 4 அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த வீட்டின் வெளிப்பரப்பில் கிரிக்கெட் பிட்ச், வாக்கிங் செல்வதற்கான பூந்தோட்டம் உட்பட பலவிஷயங்கள் இருக்கின்றன.
மேலும் கிரிக்கெட் போட்டிகளின்போது கங்குலி வாங்கிய பரிசுகளை வைப்பதற்காகவே இந்த வீட்டுக்குள் ஒரு மினி அருங்காட்சியகம் வைத்திருக்கிறார் கங்குலியின் அப்பா. இந்த வீட்டின் மதிப்பு பல கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படி அப்பா பார்த்துப் பார்த்து கட்டிய வீடு ஒருபக்கம் இருக்க, தானே சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி, கடந்த மே மாதத்தில் அங்கு குடிபோயுள்ளார் கங்குலி. கொல்கத்தாவின் முக்கிய பகுதியில் உள்ள இந்த புதிய வீட்டின் மதிப்பு 40 கோடி ரூபாய்.
20 லட்ச ரூபாய் கைக்கடிகாரம்
கிரிக்கெட்டில் டைமிங் சென்ஸ் அதிகம் உள்ளவர் கங்குலி. பேட்டிங்கில் அவரது டைமிங்கைப் பற்றிப் பேசாதவர்கள் குறைவு. இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் டைமிங்குக்கு பதில் டைமில் கவனம் செலுத்துகிறார் கங்குலி. அவரது கரங்களை Rolex Cellini Moonphase ரக கைக்கடிகாரம் அலங்கரிக்கிறது. இந்த கைக்கடிகாரத்தின் விலை 20 லட்ச ரூபாய். 2017-ம் ஆண்டில் இந்த கைக்கடிகாரத்தை ரோலக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியபோதே அதை வாங்கிவிட்டார் கங்குலி.
4.2 லட்ச ரூபாய் பைக்:
பார்ப்பதற்கு சாதுவாக இருக்கும் கங்குலிக்கு வேகமாக பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். பகலில் பைக்கில் சென்றால் மற்றவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் பைக்கில் சுற்றுவார் கங்குலி. இதற்காக பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் ரக பைக்கை வாங்கி வைத்திருக்கிறார். லிட்டருக்கு 30 கிலோமீட்டர் தூரம்வரை கொடுக்கும் இந்த பைக்கின் விலை 4.2 லட்சம் ரூபாய்.. அதிகபட்சமாக மணிக்கு 143 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்வது இந்த பைக்கின் சிறப்பம்சம்.
சொகுசுச் காரும் ஸ்போர்ட்ஸ் காரும்:
ஒரு சிலருக்கு சொகுசு கார்களைப் பிடிக்கும். மற்றொரு சிலருக்கு ஸ்போர்ட்ஸ் கார்களைப் பிடிக்கும். சவுரவ் கங்குலிக்கோ இரண்டு வகையான கார்களையும் பிடிக்கும். கிரிக்கெட் கட்டு வாரிய கூட்டத்துக்கு போவது, குடும்ப பிசினஸ் தொடர்பான மீட்டிங்குகளுக்கு போவது என வர்த்தகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்லும்போது சொகுசு கார்களில் செல்வார் கங்குலி.
அதேநேரத்தில் பார்ட்டிக்கு செல்லும்போதும், குடும்பத்துடன் ரிலாக்ஸாக போகும்போதும் எஸ்யுவி ரக ஸ்போர்ட்ஸ் கார்களைப் பயன்படுத்துவார். இதற்காகவே BMW G310 GS, Mercedes-Benz CLK 230, BMW 7 Series, Audi Q5 உள்ளிட்ட பல்வேறு ரக கார்களை வைத்துள்ளார் சவுரவ் கங்குலி. இவற்றின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டுகிறது.