No menu items!

யார் இந்த யாஷ்? – ஒரு ஹீரோவின் வெற்றிக் கதை

யார் இந்த யாஷ்? – ஒரு ஹீரோவின் வெற்றிக் கதை

’என்னை மட்டும் காட்டுக்குள் விட்டீர்கள் என்றால், வீரப்பனை நான் பிடிப்பேன். இரண்டே நாட்களில் அவரை இங்கு கொண்டு வருவேன்’

ஒரு மூன்று வயது சிறுவனின் கர்ஜனை இது.

மைசூருவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டியில் கலந்து கொண்ட அந்த சிறுவன் போலீஸ் உடையில் இப்படி கர்ஜித்தது அங்கு கூடியிருந்த கூட்டத்தில் பலத்த கரகோஷத்தை எழுப்பியது.

அந்த கிண்டர்கார்டன் சிறுவன் அந்த நொடி முதல் அப்பள்ளியின் ஹீரோவாக தூக்கி வைத்து கொண்டாடப்பட்டான். அந்த ஒவ்வொரு மணித்துளியும் அவனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அப்பொழுது அவனுக்கு கிடைத்த கைத்தட்டல்கள், பாராட்டுக்கள், பாப்புலாரிட்டி அவனை சும்மா இருக்க விடவில்லை.

அன்று முதல் பள்ளிக்கூடத்தில் யாராவது அச்சிறுவனிடம் ‘எதிர்காலத்தில் நீ என்னவாக வர ஆசைப்படுகிறாய்’ என்று கேட்டால் நம்மைப் போல் ‘டாக்டராக வேண்டும்….பிஸினெஸ்மேனாக வரவேண்டும்…..கலெக்டர் ஆவேன்’ என்று சொல்லவில்லை.

‘அச்சிறுவனின் வாயில் இருந்து உதிர்ந்த ஒரே வார்த்தை ‘ஹீரோ’.

ஏறக்குறைய முப்பது வருடங்களுக்குப் பிறகு….

2018-ல் அவன் கன்னட சினிமாவின் ஒரு சூப்பர் ஹீரோவாக உருவெடுத்தான். அவன் பெயர் ‘யாஷ்’.

இந்திய சினிமா ரசிகர்களிடையே ‘ராக்கி பாய்’ என கொண்டாடப்படும், கன்னட சினிமாவில் இளசுகளால் அதிகம் உச்சரிக்கப்படும் ஒரு பக்கா ஆக்‌ஷன் ஹீரோ.

’என்னுடைய சின்ன வயதிலேயே பாராட்டுக்கள் பெறுவது எனக்கு பிடிந்திருந்தது’ என்று சொல்லும் யாஷின் உண்மையான பெயர் நவீன் குமார் கெளடா..

அப்பா அருண் குமார். கர்நாடகா ஸ்டேட் ரோட் ட்ரான்ஸ்போர்ட் கார்பொரேஷனில் டிரைவர். அம்மா புஷ்பா. இல்லதரசி.

அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள். கனவுகளுக்கு தடைப் போடும் பொருளாதாரச் சூழல்கள். மூளைக்குள் அமர்ந்து சுமையாக இருக்கும் குடும்பத்தின் எதிர்பார்புகள். இப்படி எல்லா அம்சங்களும் உள்ள வழக்கமான ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம்.

இதையெல்லாம் தாண்டி தனுஷ் படங்களில் வரும் ‘எதற்கும் உருப்பட மாட்ட… வெட்டிப் பயல்’ அவரது டெம்ப்லேட் கேரக்டரைதான் நவீன் குமார் கெளடாவுக்கும் அவரது குடும்பம் வழங்கியிருந்தது.

’இனி படிக்க மாட்டேன். பத்தாவது முடித்த பிறகு பள்ளிக்குப் போகிற ஐடியா இல்லை. நான் நடிக்க கிளம்புகிறேன்’ என்று நவீன் கொடுத்த குடைச்சலால் அப்பா அம்மா அசரவில்லை. வேறு வழியில்லாமல், அடுத்த இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதாயிற்று.

வீட்டிற்குள் இருந்தபடியே ஒரு ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார் நவீன் குமார் கெளடா. ’பெங்களூரு போயே ஆகவேண்டும். நடிக்க வேண்டும்’ என்று அடம்பிடிக்க, ஒரு சமரச உடன்படிக்கை உருவானது.

அதன்படி, ’நீ நடிக்கப் போகலாம். ஆனால் திரும்பி வந்தால் அதற்கு பிறகு நடிக்கவே முடியாது’ என்று அம்மாவும் அப்பாவும் சிரீயஸான குரலில் கோரஸாய் சொல்ல, நம் நவீனுக்கு அப்பொழுதே ஹீரோவானது போல் உற்சாகம். ஆனால் ‘எந்தவிதமான சினிமா பேக்கிரவுண்ட்டும் இல்லாமல் நம்முடைய மகன் சினிமாவில் நடிக்கவேண்டுமென்று அடம்பிடிக்கிறானே’ என்ற கவலை பெற்றோருக்கு இருந்தது.

முதலில் வீட்டைவிட்டு அடியெடுத்து வைப்போம். மற்றதை பிறகு பார்க்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. உடனடியாக சமரச உடன்படிக்கை அமுலுக்கு வந்தது.

வீட்டில் இருந்த சில்லறை சேமிப்பு எல்லாவற்றையும் திரட்டினால் 300 ரூபாய் சேர்ந்தது. நவீன் குமார் கெளடா இன்றைக்கு பாக்ஸ் ஆபீஸீல் ஆயிரம் கோடிகளை கல்லா கட்டும் ஹீரோவாக போட்ட முதல் முதலீடு அந்த 300 ரூபாய்தான்.
2003-ல் பெங்களூரு வந்திறங்கும் போது 16 வயது., அங்கு பார்த்த முதல் வேலை சினிமா ப்ரியர்களுக்கெல்லாம் தோள் கொடுக்கும் உதவி இயக்குநர்.வேலைதான். அதாவது வேலை இருக்கும். ஆனால் சம்பளம் எதுவும் இருக்காது.

ஃப்லிம் ஷூட் என்பதால் சாப்பாடு கிடைக்கும். தங்க இடம் கிடைக்கும். அது போதுமென்ற மன நிறைவு இருந்ததால் நவீனுக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஆனால் அந்த சந்தோஷம் வெறும் இரண்டு நாட்கள் நீடித்தது.48 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே படம் கேன்சல் என்று தயாரிப்பாளர் கிளம்பிவிட்டார்.

இனி வேறு வழியில்லை. மைசூருக்கு பேக்-அப் பண்ணியே ஆகவேண்டிய கட்டாயம். மனம் வெறுத்த நிலையில் பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டில் வந்து அமர்ந்த போது, நடந்தது ’கேஜிஎஃப்’ படத்தில் கூட இல்லாத ஒரு மேஜிக்கல் ட்விஸ்ட்..

சென்னை சாலிக்கிராமம் காவேரி கார்னரில் கூடும் உதவி இயக்குநர்கள், நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருப்பவர்களைப் போலவே ஒரு கூட்டம் காந்தி நகருக்கு கிளம்பிக்கொண்டிருந்தது.

ஆடிஷனுக்கு போய் தோற்றாலும் விடாப்பிடியாக முயற்சித்து கொண்டிருந்த அவர்களின் அந்த பேச்சு, நவீனுக்கு எனர்ஜி எலக்ட்ரோலைட்களை ஏற்றியது போல் புத்துணர்ச்சி அளித்தது.

‘எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு போராட்டம் கண்டிப்பாக இருக்கும். எனக்கு இருப்பது ஒரு வாழ்க்கை. அந்த ஒரு வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டேன்’ என்கிறார் இந்நாள் ‘யாஷ்’. என்கிற ’முன்னாள்’ நவீன் குமார் கெளடா.

இனி வீட்டிற்குப் போவதில்லை என்று முடிவெடுத்த பிறகு என்ன செய்வதென்று ஒரு திட்டமும் இல்லை. அப்பொழுது கிடைத்தது ஒரு வேலை. ஒரு தியேட்டர் க்ரூப்புக்கு திரைக்குப் பின்னால் நாடகங்களில் உதவும் வேலை. பிழிந்து எடுத்துவிட்டார்கள். நவீன் குமார் கெளடா வாய் விட்டு கேட்டதால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் கொடுத்தார்கள்.

இந்த நாடக க்ரூப் நிகழ்ச்சிகாக மும்பைக்குச் செல்ல வேண்டியிருந்தது. . சில நடிகர்களால் ரிகர்சலுக்கு வரமுடியாமல் போனது. நீங்கள் நினைப்பதைப் போலவே நவீன் குமார் கெளடா நடிக்க மேடை ஏறினார். ஆனால் அடுத்த ட்விஸ்ட் அங்கே வந்தது.

‘நீ ஒரு நடிகனே இல்லை. அப்புறம் எப்படி தைரியமாக நடிக்க மேடை ஏறின.. நாங்க நடிப்பதை நல்லா பாரு. அப்பதான் நடிப்புன்னா என்னன்னு கத்துக்க முடியும். இப்ப நீ கீழே இறங்கிப் போ. நாங்க நடிக்கிறத பாரு’ என்று தியேட்டர் க்ரூப் சினீயர்கள் சொல்ல. அடம்பிடித்தான் அந்த 16 வயது நவீன் குமார் கெளடா.

அந்த அடம்தான் இன்றைக்கு இந்திய சினிமாவில் நவீன் குமார் கெளடா ’யாஷ்’ ஆக தடம் பதிக்க உதவியிருக்கிறது.

தியேட்டர் க்ரூப் டைரக்டரை இம்ப்ரஸ் செய்ய, அடுத்தடுத்து பேக்-அப்பில் தயாராக இருக்கும் ஆர்டிஸ்ட்டாக மேடையேறினார் நவீன் குமார் கெளடா.

2004-ல் பெங்களூருவில் நடந்த ’கோகுல் நீல்கமலா’ நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமான பலராமாவாக நடிக்க வாய்ப்பு அமைந்தது.

அடுத்து டிவி சிரீயலில் ஒரு வாய்ப்பு. ஒரு நடிகருக்குப் பதிலாக நடிக்க நவீனை அழைத்தார்கள். ‘நந்த கோகுலா’ என்ற அந்த சிரீயல் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்தார் நவீன் குமார் கெளடா. அடுத்தக்கட்டம் என்று சொல்ல காரணம் இங்குதான் தனது மனைவி ராதிகா பண்டிட்டை சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது.

அந்த ராசியோ என்னவோ. அடுத்தடுத்து இரண்டு மூன்று சிரீயல்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கும் அளவிற்கு நிலைமை மாறியது. அப்பா அம்மா மைசூருவிலிருந்து பெங்களூருவிற்கு மாறியிருந்தார்கள்.

நவீனும், ராதிகாவும் சந்தித்த போது அவர்களுக்கு வயது 19.

‘அந்த வயதிலும் கூட நவீன் தன்னோட இலக்கு மேல ரொம்ப குறியா இருப்பார். வாழ்க்கையில ஜெயிக்கணும். அதுவும் நாம விருப்பப்பட்ட மாதிரியே ஜெயிக்கணுங்கிறதுல தெளிவா இருந்தார்’ என்று குறிப்பிடுகிறார் ஃப்ளாஷ்பேக்கில் மூழ்கி எழும் ராதிகா

தியேட்டர், டெலிவிஷன் எல்லாம் நவீனின் ப்ளான் இல்லையென்றாலும், ஒரு நடிகராக சமாளிப்பதற்கும், சினிமா டெக்னிக்கல் சமாச்சாரங்களைப் புரிந்து கொள்வதற்கும் இந்த அனுபவம் உதவின. குறிப்பாக ஆனந்த் நாக் உடன் பணியாற்றியது நவீனுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

நவீனுக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. ஒரு படம் கூட நடிக்காவிட்டாலும் கூட, ஆடிஷனுக்கு அழைத்த டைரக்டர்களிடம் ‘கதை என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாலாமா’ என்று கேட்ட நவீனின் ’அந்த’ கேரக்டரை எந்த டைரக்டரும் ரசிக்கவில்லை.

நவீனின் நெருங்கிய தோழியாக மாறியிருந்த ராதிகாவுக்கு 2008-ல் ‘மொக்கினா மனசு’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.. இருவரும் யதேச்சையாக பேசிய போது, இன்னும் சில காட்சிகள் மட்டும்தான் எடுக்க வேண்டும்.’ என்று ராதிகா கூறியிருக்கிறார்.

ஆனால் மறுநாளே அதே படத்தில் நடிக்க நவீனுக்கு அழைப்பு வந்தது. நவீனுக்கு யாரோ விளையாடுகிறார்கள் என்று தோன்ற அதை சிரீயஸாக எடுத்து கொள்ளவில்லை. மீண்டும் அழைப்பு வரவே, சரி போய் பார்க்கலாம் என்று கிளம்பினார். அந்த முடிவே சினிமாவிற்கான பிள்ளையார் சுழியாக அமைந்தது.

சுவாரஸ்யம் என்னவென்றால் படம் கமர்ஷியல் ஹிட். இப்படத்தில் நடித்த ராதிகாவுக்கும், நவீனுக்கும் ஃப்லிம்ஃபேர் விருது கிடைத்தது.

நாட்கள் போகப் போக நவீனின் திறமையை அடையாளம் கண்டுகொள்ள ஆரம்பித்தது சினிமா. நவீன் முழுமையான யாஷ் ஆனார். இந்த யாஷை நம்பி படமெடுக்க பணம் போட தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர்.

ஜெயன்னாவுக்காக சில படங்கள் நடித்தார் யாஷ். காரணம் ஜெயன்னா யாஷ் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். இது யாஷின் தன்னம்பிக்கைக்கு பூஸ்டர் டோஸ் போல் இருந்தது. ‘ஜானு’ [2012], ‘ட்ராமா’ [2012], ‘கூக்ளி’ [2013], ‘கஜகேசரி’ [2014], என தொடர்ந்து ஜெயன்னா படங்களில் நடித்தார் யாஷ்.

2013-ல் கன்னட சினிமாவில் கைவசம் படங்கள் வைத்திருக்கும் ஹீரோக்களில் ஒருவரானார் யாஷ். ஆனாலும் அவரை கன்னட சினிமாவை விட்டு வேறு யாருக்கும் யாஷ் என்றால் ’யாரு?’ என்று கேட்கும் நிலைமைதான் இருந்தது.

அந்த நிலைமையிலும் கூட ’கன்னட சினிமாவா.. அது ரொம்ப சின்ன இண்டஸ்ட்ரி’ என்று கமெண்ட் அடித்தால், யாஷூக்கு புஸ் புஸ் என்று கோபம் பொத்துக்கொண்டு வரும்.

அந்த மாதிரி சூழ்நிலைகளில் யாஷ் சொல்வது..’’இதை நான் மாத்த விரும்புறேன். கன்னட சினிமாவிலயும் ஏகப்பட்ட திறமைகள் வெளிப்படாம இருக்கு. இந்த திறமைகளையெல்லாம் பிரதிபலிக்கிற மாதிரி ஒரு படம் பண்ண காத்துகிட்டு இருக்கேன். நிச்சயம் அதை உலகுக்கு காட்டுவேன்’ என்று கர்ஜிப்பார் யாஷ்.
இந்த நேரத்தில்தான் ஹொம்பாலே ஃப்லிம்ஸின் விஜய் கிரகண்டூர் மூலம் இயக்குநர் பிரஷாந்த் நீல்லை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. ‘கேஜிஎஃப்’ பட வரிசையின் இயக்குநர் தான் இந்த பிரஷாந்த் நீல்.

விஜயும், பிரஷாந்தும் ஒரு ஸ்கிரிப்டை கையில் வைத்திருந்தனர். அந்த கதையில் கேஜிஎஃப் என்பது ஒரு சின்ன புள்ளி மட்டுமே.

‘நாம ஏன் கேஜிஎஃப்-ஐ வைத்து ஒரு பெரிய கதையா பண்ணக்கூடாது?’ என்று யாஷ் கேட்க பிரஷாந்த் நீல்லுக்கு பஞ்சகர்மா மசாஜ் செய்தது போல புத்துணர்ச்சி.

’அட ஆமாம்’ என்று விஜயும் அதை ஆமோதித்தார்.

அடுத்து மூன்று நான்கு ஆண்டுகள் ’கேஜிஎஃப்’ ஸ்கிரிப்ட் வேலைகளில் மும்முரமானது இந்த மூவர் அணி.

ஒரு பக்கம் கேஜிஎஃப் கதையை டைரக்டர் பிரஷாந்தும், ப்ரொடியூஸர் விஜயும் ரூம் போட்டு யோசித்து கொண்டிருக்க, யாஷ் நடித்த ‘மிஸ்டர் & மிஸஸ் ராமாசாரி’ படம் கமர்ஷியல் ஹிட்.

’கேஜிஎஃப்’ ஸ்கிரிப்ட் ஓரளவிற்கு ரெடியானதுமே இவர்கள் மூன்று பேருக்கும் அதற்கு மேல் பொறுமை இல்லாமல் போனது. ப்ரஸ் மீட்டை வைத்து ’40 முதல் 50 கோடி பட்ஜெட்டில் ஒரு படமெடுக்கப் போறோம்’ என்று சொல்ல, ஒட்டுமொத்த கன்னட சினிமாவும் வீரப்பனை நேரில் பார்த்தது போல வெடவெடத்து போனது. காரணம் வழக்கமான ஒரு கன்னடப் படத்தின் பட்ஜெட்டை போல ஏழு எட்டு மடங்கு அதிகம்.

பொழுது போகாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ற பேச்சு கன்னட சினிமா உலகில் உலாவர, சைலண்ட்டாக ஷூட்டிங்கிற்கு கிளம்பியது யாஷ் அண்ட் கோ.
ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களிலேயே ’எதற்கு இவ்வளவு அவசரமாக படத்தை எடுக்க வேண்டும். ஸ்கிரிப்ட் செம ஸ்கிரிப்ட். அதனால தைரியமா இரண்டு பாகங்களாக எடுக்கலாம்’ என்று பிரஷாந்த் நீல் சொல்ல, விழுந்து விழுந்து சிரித்தார் யாஷ்.

‘என்ன பாஸ், கேஜிஎஃப் முதல் பாகத்தோட செகண்ட் ஹால்ஃப் வெறும் 15 நிமிஷம்தானா’ என்று யாஷ் நக்கலாக சிரிக்க அதன் பிறகே கேஜிஎஃப் ப்ராஜெக்ட் ரொம்ப சிரீயஸான ஒன்றாக மாறியது.

ஒரு மாதம் கடந்தது. நேரம் போக போக டென்ஷன் எகிறிக்கொண்டேதான் இருந்தது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படமெடுத்த அனுபவம் அங்கு யாருக்கும் இல்லை.
கொஞ்சமும் யோசிக்காமல், ’55 ஜூனியர்கள், 1000 எக்ஸ்ட்ராக்கள் என செட்டில் கொடை விழாவுக்கு வந்தது போல செம கூட்டம். ஆனால் இந்த கூட்டத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை. ‘லகான்’ படத்தில் வருவது போலவே என்ன செய்யவேண்டுமென தெரியாத ஒரு கூட்டம். ஆனால் நாம் எப்படியும் ஜெயிப்போம் என்று தில்லாக நின்றது ராக்கி பாய்.

’கேஜிஎஃப்’ தயாரானது. அதைப் பார்த்தது எஸ்.எஸ். ராஜமெளலி.

‘எதுக்கு கன்னடம் மட்டும்’ என்று கேட்டார் ராஜமெளலி.

அவ்வளவுதான் இந்தியா முழுவதிலும் 2,000 ஸ்கிரீன்களில் வெளியானது ’கேஜிஎஃப்’. என்னது கன்னடப் படமா என்று ஆச்சர்யப்பட்டது. பாலிவுட்டும் டோலிவுட்டும் நம்ம கோலிவுட்டும்.

’பொதுவா ஒரே நைட்டுல சக்ஸ்சஸ் வரலாம். இல்லைன்னா ரொம்ப நாளா கஷ்டப்பட்டு வேலைப் பார்த்தா வெற்றி கிடைக்கலாம். ஆனா என் கதையே வேற. ரொம்ப கஷ்டப்பட்டு கன்னட சினிமாவுல ஜெயிச்சேன். கேஜிஎஃப் ரிலீஸானதும் ஒவர் நைட்டுல சக்ஸ்சஸ் கிடைச்சது. இந்த ரெண்டு அனுபவமும் சேர்ந்து கிடைச்ச ஆளு நானாகதான் இருப்பேன்’ என்று சிரிக்கிறார் யாஷ்.

’கேஜிஎஃப் -2’ வெளியாவதில் பல தடைகள்.

ஒடிடி-யில் கொடுத்துவிடலாம். கோவிட் எப்பொழுது முடிவுக்கு வருமென தெரியவில்லை என்று எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்துவிட, ‘’இந்தப் படம் தியேட்டரில் பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட படம். அதை வீட்டுல உட்கார்ந்து டிவியில பார்த்தா ஏமாற்றமா இருக்கும். ஆடியன்ஸூக்கு நாம கொடுக்க நினைச்ச அனுபவம் மிஸ் ஆகிடும். காத்திருந்து தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ணலாம்’ என்று தாடியை நீவிவிட்டார் ராக்கி பாய்.

இந்த தன்னம்பிக்கையும், நம்பிக்கையுமே யாஷின் வெற்றிக்கு காரணம்.

இவையிரண்டையும் தாண்டி, ‘ஷூட்டிங்குல நேரடியாக செட்டுக்கு வந்து, டயலாக் என்னன்னு கேட்டுட்டு, அதை நடிச்சிட்டு கிளம்புற ஆளு நான் இல்ல. ஒரு டயலாக்கை எப்படி சொல்லணும்னு நான் யோசிச்சு பார்த்தது கிடையாது. காரணம் ரொம்ப சிம்பிள். ஒருத்தர் எழுதின டயலாக்கை, எப்படி சொல்லணும், டெலிவரி எப்படி இருக்கணும்னு அவங்களே யோசிச்சு வைச்சிருப்பாங்க. அதே ஃபீல் வர்ற மாதிரி பேசணும் அதுதான் சவால்.’ என்று சொல்லும் போது இருக்கிற அர்ப்பணிப்புதான் யாஷின் இந்த வளர்ச்சிக்கான விதை.

இன்னும் சொல்லப்போனால், யாஷ் டிவி சிரீயல்களில் நடித்த போது சும்மா இருக்காமல் ட்ராலியை தள்ளுவது வழக்கம். ட்ராலி டைம்மிங்கை கணக்கு பண்ணுவதற்குதான் இந்த முயற்சி. அல்லது எடிட் ரூமில் உட்கார்ந்து கொண்டு ஆக்‌ஷன் கன்டினியூட்டி எங்கே மிஸ் ஆகிறது என்பதை கவனித்து கொண்டிருப்பார்.

’யாஷ் எப்பவும் எதிலும் பெர்ஃபெக்‌ஷன் பார்பார். எந்தவொரு சீன்னாக இருந்தாலும் ரிகர்சல் பண்ணுவார். ஷூட்டிங்கில் கூட நான் ஏதாவது மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு எனக்கு ப்ராம்ப்ட் கொடுப்பார். அதேமாதிரி அவர் நடிக்கும் போது ஏதாவது லைனை மிஸ் பண்ணிடக்கூடாது என்பதுக்காகவும், கடைசியா எடுத்த ஷாட்டுல கன்டினியூட்டியை செக் பண்ண சொல்வார்’ என்கிறார் திருமதி. ராதிகா யாஷ்,

சினிமா மேல யாஷூக்கு பைத்தியம் இருக்கலாம். காதல் இருக்கலாம். ஆனால் குடும்பத்தை அவர் எப்பொழுதும் மிஸ் பண்ணியது இல்லை. அவர் பிஸியாக இருந்த நாட்கள்ல கூட எங்க குழந்தையை நான் சுமந்த கர்ப்பத்தை அல்ட்ரா ஸ்கேன் எடுத்த எந்தவொரு நாளையும் அவர் மிஸ் பண்ணினது இல்ல’ என்று சர்டிஃபிகேட் கொடுப்பது திருமதி யாஷ்.

இன்றைக்கு கன்னட சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவர் யாஷ். இருந்தாலும் இவருடைய பயணம் வெறும் சினிமாவுடன் நின்று விடவில்லை.

மேன்லி லுக்கில் அசத்தும் யாஷூக்கு, ’இந்தியாவில் ஆண்களுக்கான எல்லோராலும் வாங்க முடிகிற விலையில நல்ல பெர்ஃப்யூம்கள் இல்லை’ என்ற கேள்வி ஒரு நாள் எழுந்தது.

சட்டென்று ஆண்களுக்கென ஒரு பிரத்தியேகமான லைஃப் ஸ்டைல் ப்ராண்டாக ‘வில்லன்’ -ஐ களமிறங்கினார். ‘பியர்டோ’ நிறுவனர்களில் ஒருவரான அஷுதோஷ் வலானியுடன் கூட்டு சேர்ந்து வில்லன் ப்ராண்ட்டை அறிமுகம் செய்திருக்கிறார். ஆண்களுக்கான பெர்ஃப்யூம்களை அடுத்து ஆடைகளில் களமிறங்க இருக்கிறார்.

ஆசைக்கு சினிமா, வாழ்வுக்கு வில்லன் ப்ராண்ட், என செட்டிலாகிவிட்ட யாஷூக்கு மீதி பட்டும் படாமல் இருந்தது மன நிறைவு.

யாஷோ மர்கா பவுண்டேஷனை தொடங்கினார். கர்நாடகாவில் இருக்கும் குடி தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியாக இதை ஆரம்பித்தார். கொப்பல் மாவட்டத்திலிருக்கும் தல்லூர் கிராமத்தில் ஒரு பிரம்மாண்டமான குடிநீர் நிலையை புதுப்பித்து இருக்கிறார். இது 200 கிராமங்களில் இருக்கும் 40,000 குடும்பங்களின் வாழ்க்கையில் தாகத்தை தணித்து இருக்கிறது.

கொரோனா தொற்றின் போது கொண்டு வரப்பட்ட பொது முடக்கத்தின் போது, கன்னட சினிமா இன்டஸ்ட்ரியை சேர்ந்த 4000 உறுப்பினர்களுக்கு 5000 ரூபாயை அவரது வங்கி கணக்குகளில் செலுத்தி விட்டு சைலண்ட்டாக கேஜிஎஃப் -3 வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டார் யாஷ்.

இப்போது புரிந்திருக்கும் யாஷ் என்பது ஒரு மனிதன் மட்டுமே அல்ல.

நம்பிக்கை. தன்னம்பிக்கை. உழைப்பு., அர்ப்பணிப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...