திமுகவை அழிக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால் கட்சியை ஒன்றிணைக்க வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே டிடிவி தினகரன் தலைமையில் அமமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தினகரன், “பொதுக்குழுவில் தூக்கம் வராமல் தவிப்பதாக கூறினார் ஸ்டாலின். ஜெயலலிதா இருந்தால் அமைச்சர்களுக்கு தூக்கம் வருமா..? பொழுது விடிந்தால் அமைச்சர் பதவி இருக்குமா என தெரியாது. திமுக போல தொடை நடுங்கி கிடையாது நாங்கள். பொய் பித்தலாட்ட தி.மு.க. ஆட்சியின் ஆயுள்காலம் முடிவதற்கான அறிகுறி தென்பட்டுவிட்டது.
திமுகவை அழிக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால் கட்சியை ஒன்றிணைக்க வாய்ப்பில்லை. கடந்த முறை இதே கருத்தை முன்வைத்தேன். ஆனால் சிலரது ஆணவ போக்கால் அது ஈடேறவில்லை” என்றார்.
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸ் தொகையாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் சுமார் 11 லட்சம் அரசிதழ் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். மேலும், போனஸ் தொகை வழங்குவதற்காக இந்திய ரயில்வேக்கு கூடுதலாக 2000 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பூமியை நோக்கி வந்த விண்கல்லை திசை மாற்றிவிட்டோம்: நாசா தகவல்
பூமியை தாக்க வந்த விண்கல்லை வெற்றிகரமாக திசை மாற்றிவிட்டதாக நாசா அமைப்பு தெரிவித்துள்ளது.
டிமார்போஸ் (Dimorphos) என்ற விண்கல் ஒன்று பூமியின் மீது மோத இருந்ததாக நாசா தெரிவித்து வந்தது. இந்த நிலையில், அந்த விண்கல்லை திசைத் திருப்ப டார்ட் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. கடந்த மாதம் 27-ம் தேதி டார்ட் விண்கலம், அந்த விண்கல்லின் மீது துல்லியமாக மோதியது. இதன் மூலம் அந்த விண்கல் எதிர்பார்த்தபடி திசை மாறி சென்றதா என்ற பதிலுக்காக நாசா காத்திருந்தது. இந்த நிலையில்தான், அந்த விண்கல் சரியாக திசை மாறி சென்றுள்ளதாக நாசா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதிமுக அணிகளின் கடிதங்கள் குறித்து நியாயமான முறையில் பரிசீலனை – சபாநாயகர் அப்பாவு
ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகளின் கடிதங்கள் குறித்து நியாயமான முறையில் பரிசீலனை செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு, “தமிழக சட்டசபை நிகழ்வுகளில் கட்சி சார்பில் தன்னை கலந்து தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கடிதம் கொடுத்துள்ளனர். அவை என் பரிசீலனையில் உள்ளன. நான் சென்னை சென்றதும் கடிதங்களை படித்து பார்த்து நியாயமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
‘குட்டி காவலர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘குட்டி காவலர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை கொடிசியா வர்த்தக மையத்தில் 5 ஆயிரம் மாணவர்களும், பல்வேறு பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.