டென்னிஸ் உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் ரோஜர் பெடரர். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உட்பட 103 ஒற்றையர் பட்டங்களை வென்ற இவரது சொத்து மதிப்பு 4,391 கோடி ரூபாய்.
இவ்வளவு பணத்தை சம்பாதித்த ரோஜர் ஃபெடரர், அவற்றை செலவழிக்கவும் தயங்கவில்லை. மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவில் சொகுசான வாழ்க்கையை வாழ்கிறார் ரோஜர் பெடரர். தான் வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் ரோஜர் ஃபெடரர்.
அவருடைய ரிட்டயர்ட் வாழ்க்கையில் அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் விஷயங்களைப் பார்ப்போம்:
ஏரி பார்த்த வீடு:
ஸ்விட்சர்லாந்தில் உள்ள வொலேரோ நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் ரோஜர் ஃபெடரர், ஜூரிச் ஏரியைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் இந்த வீடு அமைந்துள்ள நிலத்தின் பரப்பளவு 1.5 ஏக்கர். 3 அடுக்குகளைக் கொண்டுள்ள இந்த வீடு அதிக அளவில் கண்ணாடிகளை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தைக் கட்டி முடிக்க 60 கோடி ரூபாயைச் செலவழித்துள்ளார் ஃபெடரர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள இந்த வீட்டைத் தவிர துபாய் நகரிலும் பிரம்மாண்மான ஒரு வீட்டை வைத்துள்ளார் ஃபெடரர். 2 வீடுகள் இருந்தாலும், சுவிட்சர்லாந்து வீட்டில் இருப்பதுதான் ஃபெடரருக்கு மிகவும் பிடிக்கும்.
டென்னிஸ் ராக்கெட்:
வாழ்க்கையில் தனக்கு இத்தனை உயரத்தைக் கொடுத்தது டென்னிஸ் விளையாட்டுதான் என்பதை உணர்ந்திருந்ததால், அதற்கான உபகரணங்களில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார் ரோஜர் ஃபெடரர். டென்னிஸ் ராக்கெட்களிலேயே இவர் பயன்படுத்தும் டென்னிஸ் ராக்கெட்டில் உள்ள இழைகள்தான் மிகவும் மதிப்புவாய்ந்தது. டென்னிஸ் ராக்கெட்டின் இழைக்காக மட்டும் ஆண்டுக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களைச் செலவழிக்கிறார் ரோஜர் ஃபெடரர்.
மற்ற டென்னிஸ் வீரர்கள் எல்லோரும் அந்தந்த போட்டிகளின் அமைப்பாளர்கள் வழங்கும் இழைகளை தங்கள் ராக்கெட்டுக்கு பயன்படுத்த, ரோஜர் ஃபெடரர் மட்டும் தான் வழக்கமாக பயன்படுத்தும் ராக்கெட் இழைகளையே பயன்படுத்துவார். ஒருமுறை இதுபற்றி கேட்டபோது, ‘டென்னிஸ் மூலம் நான் சம்பாதிக்கும் பணத்தில் அரை சதவீதத்தைதான் இதற்கு பயன்படுத்துகிறேன்’ என்று வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார் ஃபெடரர்.
ரோலெக்ஸ் கைக்கடிகாரங்கள்:
உலகின் பிரபலமான கைக்கடிகாரமான ரோலக்ஸ் வட்சஸ் நிறுவனத்தின் விளம்பர தூதர் ரோஜர் ஃபெடரர். அதனால் அந்த நிறுவனத்தின் கைக்கடிகாரங்களை மட்டுமே அணிவது இவரது வழக்கம். ரோலக்ஸ் நிறுவனம் புதிய காஸ்ட்லி கைக் கடிகாரங்களை வெளியிடும்போதெல்லாம் அவற்றை வாங்குவது ஃபெடரரின் வழக்கம். அந்த வகையில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை ஃபெடரர் வைத்துள்ளார்.
9 சொகுசு கார்கள்:
உலகில் யாராவது இத்தனை காஸ்ட்லி கார்களை வைத்திருக்கிறார்களா என்று சவால்விடும் அளவுக்கு காஸ்ட்லி சொகுசு கார்களை வைத்துள்ளார் ரோஜர் ஃபெடரர். Mercedes Benz SL, Mercedes E-Class Cabriolet, Mercedes Benz X Class, Mercedes- AMG G63, Mercedes AMG GT Coupe, Mercedes AMG GLE63, Mercedes-Benz CLS63, Mercedes CLS 450 4Matic, Mercedes Benz R Class என்று இவர் வைத்துள்ள சொகுசு கார்களின் எண்ணிக்கை மட்டும் 9 இதைத் தவிர வேறு சில கார்களையும் அவர் வைத்துள்ளார்.
இந்த கார்களுக்காக மட்டும் பல கோடி ரூபாயை செலவழித்துள்ளார் ஃபெடரர்.