No menu items!

லாங் தெங்கா: ஓர் அழகிய தீவு

லாங் தெங்கா: ஓர் அழகிய தீவு

யோகி

மலேசியாவுக்கு மலைநாடு என்ற பெயரும் இருக்கிறது. திதிவங்சா மலைத் தொடர் வட தாய்லாந்தில் உத்தாராடிட் எனும் இடத்தில் தொடங்கி, கீழ் நோக்கிப் படர்ந்து மலேசியாவின் கெடா, பேராக் மாநிலங்கள் கடந்து பகாங் மாநிலம் வரை சுமார் 480 கிலோமீட்டர் நீண்டுள்ளது. தமிழ்நாட்டின் மேற்குதொடர்ச்சி மலைக்கு ஒப்பாகத்தான் மலேசியர்கள் இந்த மலைத் தொடரை பார்க்கின்றனர். மலைகளோடு கடலும் இணைந்த பல அழகியத் தீவுகள் மலேசியாவில் இருக்கின்றன.

மலாயா தீபகற்பத்தில் அதிகமான காடுகளும் நீர்நிலைகளும் மலைகளும் கொண்ட ஒரே மாநிலம் பகாங். புகழ்பெற்ற மலைகளான கெந்திங், ஃப்ரெசர், கேமரன் ஆகியவை இம்மாநிலத்தில்தான் இருக்கின்றன. இம்முறை நான் திரெங்கானு மாநிலத்திற்கு சென்ற அனுபவத்தைக் கூறப் போகிறேன். இன்னும் கொஞ்சம் தொலைவுச் சென்றால் கெடா மாநிலத்தில் உள்ள லங்காவித் தீவையும் பார்க்கலாம். கோவாவைப் போன்ற புகழ்பெற்ற தீவு இது. மலேசியாவைப் பொறுத்தவரை இயற்கை அன்னை ஓய்வெடுக்க தேந்தெடுத்த இடம் திரங்கானுவின் தீவுகள்தான்.

பிப்ரவரியில் இருந்து செப்டம்பர் வரை திரங்கானுவின் பலத் தீவுகள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கும். ஏனைய மாதங்கள் கடல் மற்றும் காற்றின் சீற்றத்தை பொறுத்து இயங்கும். பெரும்பாலும் ஆள்நடமாட்டம் அற்று மூடியே கிடக்கும். கிட்டதட்ட  இந்தியாவின் கேதர்நாத் ஆன்மீகப் பயணம் மாதிரிதான். ஆறு மாதங்கள் பத்தர்களுக்கு கோயில் திறக்கப்படுவதும் ஆறுமாதங்கள் பாதுகாப்புக் கருதி மலைப் பயணத்தை நிறுத்தி வைப்பதும் மாதிரிதான்.

கோலாலம்பூரிலிருந்து நெடுஞ்சாலையில் பயணித்து 4 மணிநேரத்தில் திரங்கானுவை அடைந்தோம். அங்கிருந்து கோலத்திரங்காவின் மேராங் படகுத்துறையைச் சென்றடைய மேலும் 1 மணிநேரம். தென் சீனக்கடலில் அமைந்திருக்கும் மேராங் படகுத் துறையிலிருந்து கடலை பார்க்க, துட்சாதனன் துகிலுரிக்க முனைந்து தோற்றுப்போன திரௌபதியின் நீண்டுக் கொண்டிருக்கும் புடவையைப்போல அந்த நீலக்கடல் அசைந்துக்கொண்டே இருந்தது. காற்றில் மிதக்கிறதா, இல்லை வானம் கீழே வீழ்ந்துவிட்டதா என்று கற்பனைக்கு அடங்காமல், இதுவரை பார்க்காத நீலத்தோடு அந்தக் கடல் எம்மை அரவணைக்க காத்துக்கொண்டிருந்தது.

மேராங் படகுத் துறையிலிருந்து 12-க்கும் மேற்பட்ட தீவுகளுக்கு செல்வதற்கான படகு போக்குவரத்து இருக்கிறது. தீவுகளுக்கு தகுந்த கட்டணத்தைச் செலுத்தி நாம் பயணப்படலாம். நானும் எனது தோழர்களும் லாங் தெங்கா தீவில் விடுமுறையை கழிப்பதற்கான முன்னேற்பாடாக படகு போக்குவரத்திற்கும் தங்கும் இடத்திற்கும் இணையத்திலேயே பதிவு செய்து பணம் செலுத்தியிருந்தோம். காரை பாதுகாப்பாக நிறுத்துவதற்கான கட்டணத்தோடு இடவசதி இருந்தது. பொதுப் போக்குவரத்தில் திரெங்கானு வருபவர்கள் ஒரு வாடகை வண்டியைப் பிடித்து மேராங் படகுத் துறைக்கும் வந்துவிடலாம்.

இங்கிருந்து உலகப் புகழ்பெற்ற தீவுகளான பூலாவ் ரெடாங், பூலாவ் பெர்கெந்தியான் ஆகிய தீவுகளுக்கும் போகலாம். இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையில் இருப்பதுதான் பூலாவ் லாங் தெங்கா எனப்படும் லாங் தெங்கா தீவு.

ஒரு சிறிய தீவுதான். ஆனால், மக்கள் கூட்டம் அதிகம் ஆட்பரிக்காததால் தீவு மிகவும் சுத்தமானதாக இருந்தது. அதை அப்படியே தொடர்ந்து பாதுகாக்கும் பொருட்டு அங்கே வசிப்பவர்கள் இயற்கை சார்ந்த சில முன்னெடுப்புகளை பின்பற்றியும் வருகிறார்கள். உதாரணத்திற்கு நெகிழியை தவிர்த்தல், குப்பைகளின் மறுசுழற்சியில் கவனம் கொள்ளுதல், கடலாமைகளை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் தன்னார்வ இயக்கங்கள். மின்சாரம்கூட தேவைக்கேற்பவே பயன்படுத்தப்படுகிறது. கடல் வழியே சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் தீவு அமைந்திருக்கிறது.

உலகின் மிக அழைகிய 100 தீவுகளில் 13ஆவது இடத்தில் இருக்கிறது, பூலாவ் பெர்கெந்தியான். அதை ஒட்டியிருக்கும் லாங் தெங்கா தீவு எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். மோட்டார் படகில் விரைவாக பயணம் செய்தால் சுமார் 1 மணி நேரத்தில் சென்றடைய முடியும். கண்ணாடி போன்ற கடல் நீரில் முகம் பார்த்துக்கொண்டே, மோட்டார் படகின் சாகசப் பயணத்தின் இடை இடையே சில தீவுகளை கண்டோம். ஆனால், இதில் அனைத்து தீவுகளும் சுற்றுலாவுக்கு ஏற்றவை என்று சொல்லிவிட முடியாது. பயணத்தின் சுமார் 40 நிமிடத்தில் கைகளை நீட்டி அழைக்கும் ஆண்டவரி சிலை ஒன்று கடல் பார்த்து இருந்தது. அத்தீவின் பெயர் புலாவ் பீடோங்.

1975இல் வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரின் போது, வியட்நாமியர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்தார்கள். மலேசியாவில் அவ்வாறு தஞ்சம் அடைந்த ஆயிரங்கணக்கான அகதிகளை குடியேற்றிய இடம்தான்  புலாவ் பீடாங் எனப்படும் பீடோங் தீவு. சுமார் 252,390 அகதிகளுக்கு மலேசியா தஞ்சம் வழங்கியதோடு, சுமார் 4,535 குழந்தைகள் இந்த முகாமில் பிறந்திருக்கிறார்கள். தற்போது வியட்நாம் அகதிகளின் ஞாபகங்களாக மாறியிருக்கும் அந்தத் தீவில் மிச்சம் இருப்பது பாழடைந்த ஒரு சில நினைவுச் சின்னங்கள்தான். மிக நீண்டகாலம் கைவிடப்பட்ட நிலையில் அவை மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன. மிச்சமிருக்கும் புத்த விக்ரகங்களும் இறந்தவர்களின் பெயர் சுமந்த பதாகைகளும் திறந்தவெளியாக மாறிவிட்ட தேவாலயமும் அகதிகள் முகாம் என்ற நினைவு தூபியும் இன்னும் சில நாட்களில் காணாமல் போய்விடலாம்.

பீடோங் தீவை பார்க்க விருப்பம் இருப்பவர்கள் மோட்டார் படகோட்டிகளிடம் கோரிக்கை வைக்கலாம், வேண்டாம் என்பவர்கள் கடல்வழியே அந்தத் தீவை நோட்டமிட்டவாறு ‘லாங் தெங்கா’வில் தரையிறங்கலாம்.

லாங் தெங்கா போய் சேர்ந்தபோது, ‘சுத்தமான, அழகான, அதிகமாக மாசுபடியாத, ஆபத்தான வன விலங்குகள் இல்லாத ஒரு தீவில் தற்போது நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள்’ என்றார் படகோட்டி.   தங்குவதற்கும் உண்பதற்கும் அவரவர் வசதிக்கும் பணத்திற்கும் தகுந்தாற்போல் ஒரு சில தங்கும்விடுதிகள் இருக்கின்றன. அதற்குமேல் பயணிகள் பேராசைகளை பூர்த்திசெய்ய இந்தத் தீவில் இடமில்லை.

லாங் தெங்காவின் சூரிய உதயத்திலிருந்து அந்த நாளை தொடங்குவது தனிச் சிறப்பு. பாதுகாக்கப்பட்டிருக்கும் வனத்திலிருந்து சுமார் 20-30 நிமிடங்கள் மலையை நோக்கி ஏறினோம். அந்நிய மண்ணில் சிறுநேரமாவது மலை ஏறும் பயண அனுபவம் மனதிற்கு நிச்சயம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இருண்மையிலிருந்து மெல்ல வெளிச்சத்தை நோக்கி இந்த பூமி மலர்வதை, கடலிலிருந்து கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்துக்கொண்டு பார்க்கும் அனுபவத்தை பெற்றபோது வாழ்க்கையில் இந்த நாள் மறக்க முடியாத ஒரு நாளாக இடம்பிடிக்கும் என்று தோன்றியது.

பல்வேறு நாடுகளில் சூரிய உதயத்திற்கென்றே தனித்துவமான இடங்கள் உண்டு; இந்தியாவில் கன்னியாகுமரி போல். மலேசியாவில் லாங் தெங்கா அவ்வாறான ஓர் இடம். சூரிய உதயத்தைப் பார்த்தப் பிறகு நீச்சல் தெரிந்தவர்கள் மலையிலிருந்து கடலில் குதித்து நீந்திக்கொண்டே லாங் தெங்கா தீவை வந்தடைவார்களாம்.

இந்தத் தீவின் சிறப்புகளில் முக்கியமானது கடலாமைகள். முட்டையிடுவதற்காக அவை ஒதுங்கும் இடத்திற்கு சென்றோம். தன்னார்வளர்கள் அங்கேயே குடில் அமைத்து, மிகமிக சொற்பமான வசதிகளுடன் கடல் ஆமைகளுக்காக சேவையாற்றுகிறார்கள்  ‘Lang Tengah Turtle Watch’ என்ற அமைப்பினரை அங்கு சந்தித்தோம். அவர்களின் சேவைகள் குறித்தும் கடலாமைகள் குறித்தான எங்கள் சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் சொன்னார்கள். ஆனால், பல நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கு இருப்பதால் ஆங்கிலத்தில்தான் உரையாடல்.

மலேசிய நாட்டில் மொத்தம் 7 வகையான கடலாமைகள் இருக்கின்றன. தற்போது மிக அதிகமாக Hawksbill Turtle, Green Turtle ஆமைகள் இருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற Leatherback எனும் ஆமையினம் பல்வேறு காரணங்களால் எங்கள் மண்ணிலிருந்து அழிந்துபோய்விட்டது ஒரு வரலாற்று சோகம்.

லாங் தெங்கா தீவு ‘ஸ்நோர்கெலிங்’ என்னும் முக்குளிப்புக்கும் சிறப்பு பெற்ற இடம். லாங் தெங்கா மட்டுமல்லாமல் இந்த மாநிலத்தில் உள்ள பல தீவுகளும் முக்குளிப்பதற்கென்றே பிரசித்தி பெற்றது. நீச்சல் தெரியாதவர்களுக்கும் ‘ஸ்நோர்கெலிங்’ செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. பயண வழிகாட்டிகள் அதற்கு நமக்கு உதவியாக இருக்கிறார்கள். ‘ஸ்நோர்கெலிங்’க்கு தேவையான பொருள்களை எப்படி பயன்படுத்துவது? என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது உள்ளிட்ட விளக்கங்கள் சொல்லி கொடுக்கப்பட்டு, ஒருவருக்கு ஒருவர் வீதம், ஒரு நீச்சல்வீரர் பாதுகாப்புக்காக நியமிக்கப்படுகிறார்கள். மிதக்கும் ஜாக்கெட் அணிந்துக்கொண்டு, உடலை அதிக இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல் லேசாக விட்டுவிட்டாலே, நமது உடல் தாமாக தண்ணீரில் மிதக்கிறது. அதோடு நீச்சல்வீரர் உதவியோடு கடலில் உள்ளிருக்கும் வேறொரு உலகத்திற்கு தங்குதடையின்றி சென்றுவர முடியும். நான் அப்படித்தான் சென்று வந்தேன். பவளப்பாறைகள், கடற்பாசிகள், அரியவகை மீன்கள், கடல் உயிரினங்கள் என கடற்கன்னியாகி உலா வந்தது என் வாழ்க்கை அனுபவத்தில் அற்புத தருணங்களாகும்.

கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு மூன்று பகல், இரண்டு இரவு, அங்கே சென்று வந்ததற்கு செலவிட்ட மொத்த செலவுத்தொகை ஒரு ஆளுக்கு 500 ரிங்கிட்தான் (இந்திய ரூபாயில் 8860). தீவிலிருந்து திரும்பிய பிறகு திரெங்கானு மாநிலத்தின் சிறிய பட்டணத்தையும் ஒரு வட்டமடித்து வந்தால் ஆப்ரேஷன் திரெங்கானு சக்சஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...