உலகின் காஸ்ட்லியான நகரங்கள் எவை என்ற பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது ECA International என்ற சர்வதேச நிறுவனம். நகரங்களில் மக்கள் வாழ்வதற்கு ஆகும் செலவை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் சீனாவில் உள்ள ஹாங்காங் நகரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்நகரம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் காஸ்ட்லியான நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் நகரத்தைத் தொடர்ந்து நியூயார்க், ஜெனீவா, லண்டன், டோக்கியோ, டெல் அவிவ், ஜூரிச், ஷாங்காய், குவான்சோ, சியோல் ஆகிய நகரங்கள் உலகின் காஸ்ட்லியான முதல் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் உள்ள 10 நகரங்களில் 5 நகரங்கள் ஆசியாவில் உள்ளன. இதனால் உலகிலேயே அதிக காஸ்லியான கண்டமாக ஆசியா உருவெடுத்துள்ளது.
இப்பட்டியலில் ஒரு காலத்தில் முதல் இடத்தில் இருந்த பாரிஸ் நகரம் இப்போது முதல் 30 இடங்களில் ஒன்றாகக்கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் குடிநீரால் ஆபத்து!
முன்பெல்லாம் எங்காவது பயணம் செல்லும்போது குடிநீரை ஒரு பாட்டிலில் அடைத்து எடுத்துச் செல்வது மக்களின் வாழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது பெரும்பாலான மக்கள் அப்படி தண்ணீரை சுமந்து செல்வதில்லை. அதற்கு மாறாக பயணத்தின்போது பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கப்படும் தண்ணீரை வாங்கிக் குடிக்கிறார்கள். பயணங்களின்போது மட்டுமின்றி விருந்து நிகழ்ச்சிகளிலும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில்தான் அடைத்து விற்கிறார்கள்.
இப்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் நாம் குடிக்கும் தண்ணீரால் மட்டும் இந்தியாவில் ஆண்டுதோறும் உருவாகும் பிளாஸ்டிக் குப்பையின் எடை எவ்வளவு தெரியுமா? 35 லட்சம் டன். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, “நாம் ஆண்டுதோறும் வீசும் சராசரி பிளாஸ்டிக் குப்பையின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காகி உள்ளது. உலக அளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் பிளாஸ்டிக் குப்பைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் உலகின் சுற்றுச்சூழலை பாதிப்பதுடன் அதை குடிப்பவர்களின் உடல் நலனையும் கெடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலிகார்பனேட்களால் செய்யப்படும் இந்த பாட்டில்களில் தண்ணீரைக் குடிப்பதால் மக்கள், குறிப்பாக பெண்கள் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் நீரிழிவு நோய் முதல் மாரடைப்பு வரை பல்வேறு நோய்கள் வருகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பைக்கு பதில் மஞ்சப்பையை மீண்டும் எடுப்பதுபோல் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றக மீண்டும் வாட்டர்பேகுகளை தேடிப் போகவேண்டிய காலம் வந்துவிட்டது.
இந்தியாவின் புதிய ஆயுதம்
இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட ‘பிரசண்ட்’ ஹெலிகாப்டர் கடந்த திங்கள்கிழமை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்துஸ்தான் ஏரோனோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர், கடல், பாலைவனம் மற்றும் பனிப்பாறைகள் நிறைந்த மலைப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் ஆற்றல் கொண்டது.
5.8 டன் எடைகொண்ட இந்த ஹெலிகாப்டர், இரட்டை இஞ்ஜின்களைக் கொண்டது. லடாக் பகுதியில் சீனாவின் அச்ச்சுறுத்தலையும், சியாச்சின் பகுதியில் பாகிஸ்தானின் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வலிமையை இந்திய ராணுவத்துக்கு இந்த ஹெலிகாப்டர் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “முழுக்க முழுக்க இந்தியாவிலேயே இந்த ஹெலிகாப்டரை தயாரித்ததன் மூலம் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை எட்டும் இந்தியாவின் கனவு மெய்ப்பட்டுள்ளது” என்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.