நேரு குடும்பத்தை விட்டு மீண்டும் வெளிநபரின் கைக்குச் செல்கிறது காங்கிரஸ். தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி விரும்பாத நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள போதிலும் இதில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
யார் இந்த மல்லிகார்ஜுன கார்கே?…
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேயின் வயது 80. மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவர் கர்நாடகத்திலுள்ள, பிடார் என்ற ஊரில் பிறந்தவர். பட்டப்படிப்பை முடித்துவிட்டு சட்டக் கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்றார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பட்லின் ஜூனியராக வழக்காடத் தொடங்கினார். பல தொழிலாளர் சங்கங்களுக்காக வாதாடியுள்ளார்.
படிக்கும்போதே, கார்கே குல்பர்காவில் உள்ள அரசு கல்லூரியில் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர் சங்கத் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். கர்நாடகாவில் மூத்த அரசியல்வாதியான இவர், கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2008 கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலின்போது கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார்.
தனது அரசியல் வாழ்வில், தொடர்ச்சியாக 9 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். மீண்டும் 2014-2019 காலகட்டத்தில் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். தனது பதவி காலத்தில் ரயில்வே அமைச்சராகவும், இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். 2009-2019 காலகட்டத்தில் கர்நாடகாவின் குல்பர்காவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவர் காந்தி குடும்பத்தின் தீவிர விஸ்வாசி, சோனியா காந்தியின் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தலித் சமூகத்தை சார்ந்தவர் என்பதால், அவர் தலைவரானால் நாடாளுமன்றத் தேர்தலில் அது காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் என்று கருதப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்கேயை எதிர்த்து போட்டியிடும் சஷி தரூருக்கு காங்கிரஸ்ஸின் ஜி 23 குழுவின் ஆதரவு இல்லை. ஆனால் மல்லிகார்ஜுன அநேகமாக அனைவரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். இந்த தேர்தலில் இவர் வெற்றி பெறுவார் என்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.