No menu items!

இன்று முதல் உங்கள் பர்ஸை பதம் பார்க்கப்போகும் 8 மாற்றங்கள்

இன்று முதல் உங்கள் பர்ஸை பதம் பார்க்கப்போகும் 8 மாற்றங்கள்

மத்திய அரசு அறிவித்துள்ள நிதி தொடர்பான 8 முக்கிய மாற்றங்கள் இன்று (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வருகின்றன. இவை சாமானியர்களை வெகுவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை என்னென்ன என பார்ப்போம்.

இனி இவர்களுக்கு பென்சன் கிடையாது

ஏழை, எளிய மக்களின் நலன்களைக் கருதியும், 60 வயதிற்குப் பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் உருவாக்கப்பட்ட திட்டம் ‘அடல் பென்ஷன் யோஜனா’. தபால் நிலையம் அல்லது வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் 18- 40 வயதுடைய நபர்கள் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் இணையலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. முதலீட்டாளர்களின் பங்களிப்பைப் பொறுத்து 60 வயதை எட்டியதும் அவர்களுக்கு ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை பென்ஷன் வழங்கக்கூடிய நடைமுறை உள்ளது. இந்த தொகைக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும் எனவும் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது’அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி, வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ’அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தில் சேருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.

ஒரு வேளை அக்டோபர் 1 அல்லது அதற்குப் பிறகு யாராவது ‘அடல் பென்ஷன் யோஜனா’ கணக்கைத் திறந்தால் அந்த கணக்கு முடக்கப்படும். இதோடு சந்தாரர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் அவர்களிடமே ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் / டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்த டோக்கன் முறை

இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த டோக்கனைசேஷன் விதி இன்று (அக்டோபர் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆன்லைன், பாயின்ட் ஆஃப் சேல் மற்றும் ஆப்ஸ் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு கிரெடிட் / டெபிட் கார்டு பரிவர்த்தனைகளும் தனிப்பட்ட டோக்கன்களுடன் செய்யப்பட வேண்டும். கார்டு டோக்கன்சேஷன் என்பது வணிகர்களுக்கு கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்டு டோக்கனைசேஷன் என்பது ‘டோக்கன்கள்’ எனப்படும் மாற்று 16-இலக்கக் குறியீட்டைக் கொண்டு உண்மையான கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்களை மாற்றுவதாகும். இது ஒவ்வொரு கார்டுக்கும்  வெவ்வேறாக இருக்கும். இது ஒரு அல்காரிதம் மூலம் உருவாக்கப்படும். இந்த டோக்கன் முறை  கிரெடிட்/டெபிட் கார்டின் முக்கியத் தகவல்களை வெளிப்படுத்தாமல் பரிவர்த்தனைகளை செய்வதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

டோக்கன்கள் வணிகர் சார்ந்ததாகதான் இருக்கும். ஒரு வாடிக்கையாளர் ஒரு கார்டை வைத்திருந்தாலும், வெவ்வேறு வணிகர்களிடம் இருந்து ஆன்லைன் கொள்முதல்களைப் பயன்படுத்தினால், வெவ்வேறு டோக்கன்கள் வழங்கப்படும். ஒரு டோக்கனில் 16 இலக்கங்கள் இருக்கும். டோக்கன்கள் வணிகர் தளத்தில் சேமிக்கப்படும் என்பதால் வாடிக்கையாளர் அவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் கடைசி நான்கு இலக்க கார்டு எண்களை தெரிந்துவைத்துக்கொண்டாலே போதுமானது.

மியூச்சுவல் ஃபண்ட் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு புதிய கட்டுப்பாடுகள்

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருப்பவர்கள் இன்று (அக்டோபர் 1) முதல் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள, முதலீட்டாளரின் போன் நம்பர் செயல்பாட்டில் இருப்பது மிக முக்கியமாகும். அதேபோல், அவரின் இ-மெயில் ஐடியும் செயல்பாட்டில் இருப்பது அவசியமாகும். ஏனெனில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் கணக்கோடு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள், நிதி ஆலோசகர்களின் தொலைபேசி எண்கள் இணைக்கப்பட்டிருந்தால், அது நேற்று (செப்டம்பர் 30) நீக்கப்பட்டு இருக்கும். எனவே, முதலீட்டாளர்கள், அவர்களின் முதலீட்டுக் கணக்குடன் (ஃபோலியோ) தங்களின் செல் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரிதான் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும். அப்படி இணைக்கப்படவில்லை என்றால் காகித படிவங்களை நிரப்பிக் கொடுத்துதான் பணம் எடுக்கவோ புதிய முதலீட்டையோ மேற்கொள்ள முடியும்.

இந்தப் புதிய விதிமுறை டீமேட் கணக்குகளுக்குப் பொருந்தாது.

சிறு சேமிப்புக்கு அதிக வட்டி

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 3 நாணய கொள்கை கூட்டங்களிலும் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. 4ஆவது முறையாக நேற்றும் உயர்த்தியது. பொதுவாக, ரெப்போ வட்டி உயர்ந்ததும் வங்கிகளின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதமும் உயரும். இதன்படி ரெப்போ வட்டி உயர்ந்த முந்தைய மூன்று முறைகளிலும் வங்கிகள் டெபாசிட் வட்டியை உயர்த்தின. இருந்தாலும் கொரோனாவிற்கு பிறகு சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்த்தப்படாமலே ஏமாற்றம் அளித்து வந்தது. இதனால் பல வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதம், அஞ்சல் அலுவலக டெர்ம் டெபாசிட் வட்டி விகிதத்தை விட அதிக லாபம் அளித்து வந்தன. எனவே, அஞ்சல் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிறு சேமிப்பு முதலீட்டாளர்கள் தங்களுக்கு எப்போது இந்த வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் கடந்த 29-09-2022 (வியாழக்கிழமை) வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் சில சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.30 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. அஞ்சல் அலுவலக 3 வருட டெர்ம் டெபாசி திட்டம் மீதான வட்டி விகிதம் 5.5 சதவீதத்திலிருந்து 0.30 சதவீதம் அதிகரித்து 5.8 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டுக்கு மட்டும் பொருந்தும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தை 7.4 சதவீதத்திலிருந்து 0.20 சதவீதம் உயர்த்தி 7.6 சதவீதமாக அறிவித்துள்ளனர். ஆனால், பிற திட்டங்களான பிபிஎப், செல்வ மகள் உள்ளிட்ட பிற சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி குறித்து அறிவிப்பு ஏதும் வரவில்லை.

டிமேட் கணக்கு இரட்டை சரிபார்ப்பு

டிமேட் கணக்கு வைத்திருப்பவர்களைப் பாதுகாக்க இன்று (அக்டோபர் 1) முதல் இரட்டைச் சரிபார்ப்பு விதியை அமல்படுத்தப் போவதாக சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி அறிவித்துள்ளது. இதன் கீழ், டிமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் இருமுறை சரிபார்த்த பின்னரே இனி உள்நுழைய முடியும்.

கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது

இன்று முதல் வர்த்தக பயன்பாடு கேஸ் சிலிண்டருக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது ரூ.25.50 குறைந்துள்ளன. இதனால் சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2,045 இருந்து ரூ.2,009.50ஆக குறைந்தது. டெல்லியில் ரூ.1,8885க்கு விற்பனையான ஒரு சிலிண்டர் தற்போது விலை குறைந்து ரூ. 1,859ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலைக் குறைப்பையும் சேர்த்து, கடந்த 6 மாதங்களில் 6வது முறையாக வர்த்தக சிலிண்டர்களின் விலையானது குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

என்பிஎஸ் இ-நாமினேஷன் கட்டாயம்

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) சமீபத்தில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான இ-நாமினேஷன் செயல்முறையை மாற்றியுள்ளது. இந்த மாற்றம் இன்று (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வருகிறது. புதிய என்பிஎஸ் இ-நாமினேஷன் செயல்முறையின்படி, என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவரின் இ-நாமினேஷன் கோரிக்கையை ஏற்க அல்லது நிராகரிக்க வங்கியின் மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு (நோடல் அலுவலகம்) அதிகாரம் உண்டு. நோடல் அலுவலகம் அதன் ஒதுக்கீட்டிலிருந்து 30 நாட்களுக்குள் கோரிக்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், இ-நாமினேஷன் கோரிக்கை மத்திய பதிவு பராமரிப்பு முகமைகளின் (CRAs) அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும், என்பிஎஸ் அடுக்கு-2 கணக்கு வைத்திருப்பவர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சந்தாக்கள் போன்றவற்றை செலுத்தும் வசதியை நிறுத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. என்பிஎஸ் அடுக்கு-1 கணக்கு வைத்திருப்பவர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்.

மேலும், என்பிஎஸ் முதலீட்டாளர்களுக்கான ஆன்போர்டிங் செயல்முறையை எளிமையாக மாற்றும் வகையில் ஐஆர்டிஏஐ தனியாக சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதரர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜீவன் பிரமன் போன்ற ஆயுள் சான்றிதழ்களை சரிபார்க்க ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை பின்பற்றுமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் உயா்வு

மின்சார உற்பத்தி, வாகனங்களுக்கான சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) மற்றும் வீடுகளுக்கு சமையலுக்காக விநியோகிக்கப்படும் குழாய் மூலமான இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) உற்பத்தி செய்வதற்கு பயன்படும் இயற்கை எரிவாயுவின் விலை இதுவரை இல்லாத அளவில் இன்று (ஆக்டோபர் 1) முதல் 40 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்றாவது முறையாக இதன் விலை உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 70 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...