திருச்சிற்றம்பலம் (சன் நெக்ஸ்ட்):
மித்ரன் ஜவஹரின் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். அப்பா பிரகாஷ்ராஜ் செய்த தவறால் அம்மாவையும், தங்கையையும் இழக்கும் தனுஷ், அவர் மீது கோபம் கொண்டு 10 ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார். மறுபக்கம் அவரது 2 காதல்கள் தோல்வியில் முடிகின்றன. அவருக்கு இருக்கும் 2 ஆறுதல்கள் தாத்தா பாரதிராஜாவும், பக்கத்து வீட்டு தோழியான நித்யா மேனனும்தான். அப்பா பிரகாஷ்ராஜுடன் தனுஷ் மீண்டும் பேசினாரா, அவரது காதல் என்ன ஆனது என்பதை மென்மைக சொல்லியிருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவஹர்.
வன்முறையை அடிப்படையாகக் கொண்ட படங்கள் அதிகம் வந்துகொண்டிருக்கும் சூழலில் பாசத்தை மையமாக கொண்டிருக்கும் இப்படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். கடந்த மாதம் தியேட்டரில் ரிலீசான இப்படம் இப்போது சன் நெக்ஸ்ட்ல் வெளியாகி உள்ளது.
கோப்ரா (சோனி லைவ்):
தசாவதாரம் கமலுக்கு இணையாக ‘சீயான்’ விக்ரம் பல கெட்டப்களில் நடித்து அசத்தியுள்ள படம் கோப்ரா. ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துதான் இப்படத்தின் இயக்குநர்.
சர்வதேச அளவில் பல முக்கிய புள்ளிகளைக் கொலை செய்கிறார் விக்ரம். கொலையாளியை கண்டுபிடிக்க இந்தியா வருகிறார் இண்டர்போல் அதிகாரியான இர்பான் பதான். அவரால் விக்ரமை கண்டுபிடிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. ஆக்ஷன் பிரியர்களுக்கு ஏற்ற படமான கோப்ரா, சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகி இருக்கிறது.
நட்சத்திரம் நகர்கிறது (நெட்பிளிக்ஸ்):
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராமன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
சினிமாவில் நடிக்கும் ஆசையில் புதுச்சேரிக்கு வருகிறார் கலையரசன். அங்கு ஒரு நாடக குழுவில் பயிற்சியில் சேரும் அவர், அக்குழுவில் உள்ள பலரின் கருத்துகளோடும் மாறுபடுகிறார். இந்நிலையில் அந்த நாடகக் குழுவில் உள்ள காதலர்களான துஷாராவும், காளிதாஸும் பிரிகிறார்கள். அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா, மற்றவர்களுடன் கலையரசன் எப்படி சமரசமாகிறார் என்பதுதான் படத்தின் கதை.
கேப்டன் (ஜீ5):
ஏலியன்களுக்கும், மனிதர்களுக்குமான போரில் இறுதியில் வென்றது யார் என்பதுதான் ‘கேப்டன்’ படத்தின் ஒருவரிக் கதை. இதில் ஏலியனுடன் மோதும் ராணுவ அதிகாரியாக ஆர்யா நடித்துள்ளார். அவருடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’, ‘டெடி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்த்ரில்லர் படமான இதை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
டைரி (ஆஹா தமிழ்)
காவல்துறை உதவி ஆய்வாளராக பயிற்சியை முடித்த சிலருக்கு முடிக்கப்படாத வழக்குகள் சிலவற்றை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது. இதில் 16 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருக்கும் ஒரு வழக்கை விசாரிக்கும் பொறுப்பு அருள்நிதிக்கு வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கான பயணத்தில் அமானுஷ்யம் நிறைந்த ஒரு பேருந்தில் ஏறுகிறார் அருள்நிதி. அந்த பேருந்தில் இருக்கும் மர்மங்கள் என்ன? அருள்நிதியால் கொலையாளியை அடையாளம் காண முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.
துப்பறியும் கதையையும், பேய்க் காதையையும் இணைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் இன்னாசி பாண்டியன். ஆஹா தமிழ் ஓடிடியில் இப்படத்தைப் பார்க்கலாம்.
\