No menu items!

5ஜி – வேக மந்திரம்

5ஜி – வேக மந்திரம்

இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட திட்டம்.

அது என்ன ஜி என்று கேள்வி கேட்பவர்களுக்கு..ஜி என்பது ஆங்கில G. Generation என்பதன் சுருக்கமே ஜி. மொபைல் சேவைகளின் தொழில்நுட்ப வளர்ச்சிகளை Generation என்ற தலைமுறை வார்த்தையின் மூலம் குறிக்கிறார்கள். மொபைல் தொழில் நுட்பத்தின் ஆரம்பம் 1ஜி அதாவது முதல் தலைமுறை தொழில்நுட்பம். இன்று அது வளர்ந்து 5ஜியில் நிற்கிறது. 6ஜிக்கான ஆராய்ச்சிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

1979ல் ஜப்பானில் முதல் தலைமுறை மொபைல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் 1984ல் ஜப்பானில் முதல் முறையாக செயல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்துதான் மற்ற நாடுகள் பின்பற்றின.

2ஜி 1991ஆம் ஆண்டு ஃபின்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டது. இப்போது நாம் பரவலாக பயன்படுத்தும் ஜிஎஸ்எம் தொழில்நுட்பம் அடிப்படையில் 2ஜி செயல்படுத்தப்பட்டது. இந்த தொழில் நுட்பம் மூலமாக எஸ்ம்எஸ், எம்எம்எஸ் போன்ற வசதிகள் மொபைல் தொலைபேசிக்கு வந்தது.

2001ல் 3ஜி தொழில்நுட்பத்தை டொகொமோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மொபைலில் இண்டர்நெட், சர்வதேச அழைப்புகள் வசதி, வீடியோ அழைப்புகள், வழிகாட்டும் வசதிகள் இந்த தொழில்நுட்பம் மூலம் மொபைலில் செயல்பாட்டுக்கு வந்தது.

2009ல் 4ஜி தொழில்நுட்பம் நார்வே நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம் மூலம் மொபைல் வீடியோக்களின் தரம் உயர்ந்தது. ஸ்மார்ட் ஃபோன் தொழில்நுட்பத்துக்கு இது அடிதளமாக இருந்தது.

2019ல் தென் கொரியாவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. 4ஜி தொழில் நுட்பத்தைவிட 20 மடங்கு வேகம் உடையது. இண்டர்நெட் இணைப்பில் ஏற்படும் தாமதங்கள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.

இப்போது இந்த 5ஜி தொழில் நுட்பம்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இப்போது 2ஜி நெட்வொர்க்தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இந்த தொழில்நுட்பத்திலிருந்து மாறிக் கொண்டு வருகிறார்கள்.

5ஜி தொழில்நுட்பத்துக்கு மாறினால் என்ன நடக்கும்?

மொபைல் நெட்வொர்க் வேகமாக செயல்படும். 5ஜியின் அடிப்படை அம்சம் வேகம். சுமார் 10ஜிபி வேகத்தில் செயல்படும் என்கிறார்கள். நெட்வொர்க் வேகமாக செயல்பட்டால் மொபைலில் எல்லாமே வேகமெடுக்கும். நேரத்தை மிச்சப்படுத்தும். 2ஜிபி ஃபைலை இறக்குவதற்கு பத்து அல்லது இருபது விநாடிகள் போதுமானது. வீடியோக்கள் தங்கு தடையின்றி இயங்கும். கல்வி, மருத்துவம், விளையாட்டு என எல்லாவற்றுக்கும் இந்த வேகம் பெருமளவு உதவும். ஆனால் இந்த வேகத்துக்கு நாம் கொடுக்க வேண்டிய விலை ஒன்றிருக்கிறது. மொபைலில் பேட்டரி சார்ஜ் வேகமாக இறங்கும். அடிக்கடி சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டிய நிலை வரும்.

இப்போது விலை குறைவான இண்டர்நெட்டை வழங்கும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.முதலிடத்தில் இருப்பது இஸ்ரேல். இந்தியாவில் இண்டர்நெட் விலை குறைவாக இருப்பதுபோல் இந்தியாவில்தான் இண்டர்நெட் வேகம் குறைவு. உலக நாடுகள் வரிசையில் 117வது இடத்தில் இருக்கிறது. 5ஜி வந்தால் இந்தக் குறை தீர்ந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...