கருணாகரன்
நாமே நமக்கான பெயரை வைத்துக்கொள்வதற்கு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கலைஞர்கள், எழுத்தாளர்கள், போராளிகள் என சிலருக்குத்தான் அது வாய்க்கிறது. எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்களுக்கு விருப்பமான பெயரைச் சூட்டிக்கொள்வார்கள். முத்தையா, ஜெயகாந்தன் என்றானதும்; ரங்கராஜன், சுஜாதா ஆனதும்; அன்ரனிதாசன், ஷோபாசக்தியாக அறியப்பட்டதும்; இளங்கோ, கோணங்கி ஆகியதும் இப்படித்தான்.
இப்படிப் புனைபெயர்களால் அறியப்பட்டவர்கள் என நூற்றுக் கணக்கானவர்களைச் சொல்லலாம். பின்னாளில் புனைப் பெயர்களே பிரபலமாகி, சொந்தப் பெயர் மறந்து விடும் அளவுக்கு ஆகியிருக்கிறது. சிலர் இரண்டு புனைப்பெயர்கூட வைத்துக்கொள்வார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட புனைபெயர்களை வைத்துக்கொண்டவர்களில் முக்கியமானவர் கவிஞர் பிரமிள். தருமு சிவராம், பானுசந்திரன், தருமு அரூப் சீவராம், பிருமிள், பிரமிள், தர்மு சிவராம் எனப் பல பெயர்களில் எழுதினார் இவர். இவரைப் பற்றி திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் தற்போது ஆவணப்படம் தயாரிக்கிறார்.
திரைத்துறையில் இது இன்னும் உச்சம். சின்னசாமி என்றால் யாருக்குமே தெரியாது; ஆனால், பாரதிராஜா என்றால் உடனே “ஓ.. அவரா!” என்று கண்கள் விரியும். அப்படித்தான் ராசய்யாவைத் தெரியாத பலருக்கும் இளையராஜா என்றால் தெரிந்துவிடும். சிவாஜி ராவ் என்றால் நெற்றியைச் சுருக்குவோர் ரஜினிகாந்த் என்றவுடன் கண்களை விரிப்பர். பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரனைத் தெரியுமா என்றால் உதட்டைப் பிதுக்கும் உங்களுக்கு பாலு மகேந்திரா என்றால் ஏதோ நெருங்கிய கூட்டாளியைத் தெரிந்ததைப் போலாகி விடுகிறது. ஆசா கேளுண்ணி குட்டியைத் தெரியாதவர்களுக்கெல்லாம் ரேவதியைத் தெரிந்திருக்கும். பழநிச்சாமி என்பது வேறு யாருமே அல்ல, அவர்தான் நடிகர் சிவகுமார்.
சுப்பையாவே சத்யராஜ் ஆகினார். நம்பக்கடினமாக இருக்கலாம், அலமேலு என்ற பெண்ணே ஸ்ரீபிரியா. பஞ்சாட்சரம் என்பவரே நடிகர் விஜயகுமார். முரளி கார்த்திகேயன் என்றால் யாரென்று விழிப்பவர்களுக்கு கார்த்திக் என்றால் சட்டென்று அடையாளம் தெரிந்துவிடும். நடிகை ராதாவின் இயற்பெயர் சந்திரிகா என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கென்னடி ஜான் விக்டர் என்பவரே நடிகர் விக்ரம். டயானா மரியாம் குரியம்தான் இன்றைய அபிமானத் தாரகை நயன்தாரா.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பயின்ற அனுராதிகாவை யாருக்கும் தெரியாது; ஆனால், திரிஷா உலகமறிந்த பெயர். ரிஷிபாமா என்ற பெயரே மறைந்து சிம்ரன் என்றாகியது. சுகாசினி – சினேகா, சரவணன் – சூர்யா, ரவி மோகன் – ஜெயம் ரவி என்று இன்னும் ஏராளம் சொல்ல முடியும்.
இவ்வாறான புனைப்பெயர்கள் ஈர்ப்பு, திருப்தி, கவர்ச்சி, உச்சரிப்புக்கும் பயன்பாட்டுக்கும் இலகு எனப் பல காரணங்களை அவசியமாகக் கொண்டுள்ளது.
ஆனால், இதிலிருந்து முற்றிலும் வேறுவிதமானது போராளிகள் தங்களுக்கு வைத்துக்கொள்ளும் அல்லது அவர்களுக்கு இயக்கம் வைக்கும் புனைப்பெயர்கள். காரணம், தங்களுடைய சொந்தப்பெயரை மறைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எப்போதும் போராளிகளுக்கு உண்டு. எதிரியிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு இது அவசியம். தங்களை மட்டுமல்ல, தங்களுடைய குடும்பத்தையும், ஏன் அமைப்பையும்கூட இந்தப் புனைப்பெயர்கள் பாதுகாக்கும்.
விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ்ஜினுடைய இயற்பெயரைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். பால்ராஜ்ஜின் பெயரை மட்டுமல்ல, பொதுவாக எந்தப் போராளியின் சொந்தப் பெயரும் அவர்களுடைய மரணம் வரையில் வெளியே தெரிவது குறைவு. பெயர் மட்டுமல்ல, அவர்களைப் பற்றிய முழுமையான பிற விவரங்களும் கூடத்தான். அவ்வாறான வாழ்க்கையும் தெரிவும் அவர்களுடையது. பால்ராஜ்ஜின் இயற்பெயர் பாலசேகரம்.
புலிகளின் இன்னொரு தளபதியான கேணல் கிட்டுவின் சொந்தப் பெயர் சதாசிவம் கிருஸ்ணகுமார். பொட்டு அம்மானின் பெயர் சிவசங்கர். ஈரோஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த சங்கர் ராஜி என்றால் இலங்கை, இந்திய அரசுகளுக்கே தெரிந்துவிடும். ஆனால், அவரது சொந்தப் பெயர் நேசதுரை திருநேசன் அந்த இயக்கத்திலிருந்தவர்களுக்கே அறிமுகமில்லை. ஞானபூரணி என்றால் எந்த ஞானபூரணி என்று விழிப்பவர்களுக்கு கேணல் விதுஷா என்றால் உடனே தெரிந்து விடும். திலீபன் உண்ணாவிரதம் இருக்கும் வரையில் அவருடைய பெயர் இராசையா பார்த்திபன் என்று யாருக்குத்தான் தெரிந்திருக்கும்?
1970, 80, 90களில் ஈழ இயக்கப் போராளிகளின் பெயர்கள் தமிழ்ச் சமூகத்தில் மிகவும் பரவலாகியிருந்தது. 2009இல் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் வரையில் இந்தப் பெயர்களால்தான் பல்லாயிரக்கணக்கானோர் அறியப்பட்டார்கள். புளொட்டில் சங்கிலி, சின்ன மெண்டிஸ், பெரிய மெண்டிஸ், எஸ்ஆர், சந்தியார், இடிஅமீன், குரு, வரதன், காண்டீபன், ஆர்ஆர் என ஒரு பெரிய பட்டியலுண்டு. இதைப்போல ஈ.பி.ஆர்.எல்.எவ்வில் டேவிற்சண், றொபேட், சுகு, தம்பா அல்லது சாந்தன், குண்சி, ரமேஸ், டக்ளஸ், ஐயா, கமல், செழியன், அமீன், தாஸ், ஜேம்ஸ், அஞ்சலி, ராஜி, கிருபா, சின்னவன், பெஞ்சமின், சேகர் என இதிலும் ஒரு நீள் பட்டியல்.
ஈரோஸில் ஐ.பி.ரி வரதன், பரா, நேசன், மைக்கல், வீரகுமார், அன்னலிங்கம் ஐயா, கைலாஷ், சுந்தர், அருளர், அழகிரி, சண், கிருபா, ராம், காண்டி, பாண்டி எனப் பல பெயர்கள். ரெலோவில் பறுவா, தாஸ், பொபி, கீரன், காளி, செல்வம், அகிலன், சாள்ஸ் என்ற நீள் வரிசை.
புலிகளுடைய பட்டியல் இன்னும் நீண்டது. அவர்களுடைய காலமும் நீண்டது என்பதால் பெயர்களின் வரிசையும் நீளமானது. மாத்தயா, சந்தோசம், விக்டர், குமரப்பா, புலேந்திரன், சீலன், சங்கர் என்று தொடங்கி சாள்ஸ், பொட்டம்மான், துர்க்கா, மலைமகள், சோதியா, அன்பரசி, கடாபி, ஜெயம், தீபன், அமுதாப், சலீம், ரஹீம், பேபி சுப்பிரமணியம், கே.பி, காக்கா, அப்பய்யா, றெஜி, லிங்கம், கபிலம்மான், மாதவன், நியூட்டன், கருணா, கரிகாலன் சேரலாதன், மணிவண்ணன், சூசை, காஸ்ரோ, கஜானி, மருதம், அமலா, ஜனனி, தவா, லிங்கம் என பல்லாயிரத்தினால் நிறைந்தது.
இந்த இயக்கப் பெயரை வைத்துக்கொள்வதைப் பற்றியே ஒவ்வொருவரிடமும் ஏராளம் கதைகளுண்டு.
ஒரு பெண் போராளி. ஏற்கனவே இயக்கத்தில் அவளுக்கொரு பெயர் வைக்கப்பட்டிருந்தது. தமிழீழத்துக்காகப் போராடுகின்றவர்கள், தமிழ்ப் பெயருக்குப் பதிலாக வேறு பெயரை எப்படி வைத்திருக்க முடியும் என்று யாரோ ஒருவருடைய மூளை வேலை செய்தது. அதற்குப் பிறகு தமிழ்ப் பெயராக எல்லோருடைய பெயரையும் மாற்ற வேணும் என்றொரு முடிவை இயக்கம் எடுத்தது.
அவளுடைய முந்திய பெயருக்குப் பதிலாக கலைஞானி என்றொரு பெயரைச் சொன்னார்கள். அவளுக்கு அது பிடிக்கவேயில்லை. ஆனால், அந்தப் பெயரைப் பதிவேட்டில் வேறு எழுதியும் விட்டார்கள். அதை எப்படித் தடுக்கலாம் என்று யோசித்தாள். இதனால் ஒரு வாரத்துக்கு மேலாகச் சரியாகத் தூக்கமே வரவில்லை. எந்த வேலையிலும் சரியாக மனம் தரிக்கவுமில்லை.
ஆனாலும் இந்த நிலையில் எதுவும் செய்வதற்கில்லை. அப்படிக் கதைக்கப்போனால் அது மேலிடத்து உத்தரவு; அங்கிருந்துதான் பதில் வரவேணும்; அல்லது வேறு ஒரு பெயரை வைத்துக் கொள்ளுங்கள் என்பார்கள். அந்தப் பெயரையும் அவர்கள் தரும் பட்டியலில்தான் தேர்ந்துகொள்ள வேணும். அந்தப் பெயர்களும் இப்படித்தான் கயல், மயல், நிலா, அலை என்ற மாதிரியிருக்கும்.
அவளுடைய பெயரோ காந்தத்தைப் போன்றது. அவளுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்குந்தான். அந்தப் பெயரே அவருடைய முகமாக, குரலாக, அசைவாக, இயக்கமாக அடையாளமாக ஆகியிருந்தது. அதை இனி மாற்றுவதென்றால் அவளே இல்லை என்ற மாதிரிப் பட்டது. இனி இன்னொருவராக – வேற்றாளாகத்தான் இருக்க வேண்டும். அவளைக் கொன்றுவிட்டு இன்னொரு உடலில் புகுத்துவதைப்போல. இன்னொரு மனதை அந்த உடலுக்குப் பொருத்துவதைப்போல…
எதுவும் சொல்லாமல் சில நாட்களுக்கு அமைதியாக இருந்தாள். தனக்கான ஒரு சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியும். அந்தச் சந்தர்ப்பம் அமைந்து வரும்போது அதை எப்படிக் கையாள்வதென்று. அதன்படியே அந்தச் சந்தர்ப்பமும் வந்தது. அவள் இயக்கத்தின் தலைவரைச் சந்திக்கும்போது சொன்னாள், தன்னுடைய அந்தப் பெயரில் வெளியுலகிலும் அறியப்பட்டிருக்கிறேன்; இனிப் பெயரை மாற்றினால் குழப்பங்கள் ஏற்படும் என்று.
‘‘அப்படியா! சரி பார்த்துக் கொள்ளலாம்” என்ற ஒரு வார்த்தையோடு அவளுடைய பெயர்ப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. வேண்டுமானால் விவரப் பதிவேட்டில் வேறு பெயர்கள் என்ற பகுதியில் புதிய பெயரை எழுதிக் கொள்ளுங்கள் என்றார் தலைவர்.
இது ஒரு வகை.
இன்னொரு வகை, இயக்கத்தில் சேரும்போது அல்லது சேர்க்கப்படும்போது சில பெயர்கள் வைக்கப்பட்டு விடும். சிலருக்கு பயிற்சி முகாம்களில் வைத்துச் சூட்டப்படும். சில பயிற்சி முகாம்களில் நமக்கு நாமே பெயரை வைத்துக் கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கும். அது பயிற்சி ஆசிரியரையும் (ட்ரெயினிங் மாஸ்டரையும்) பொறுத்தது. எனக்கும் அப்படியொரு வாய்ப்புக் கிடைத்தது.
“உங்களுக்கு விருப்பமான பெயரை வைச்சுக் கொள்ளுங்கோ” என்றார் மாஸ்ரர். உடனே அவரவர் தங்களுக்கு விருப்பமான பெயர்களை வைத்துக்கொண்டார்கள். சக போராளி ஒருத்தன் மாதவன் என்றான்; அடுத்தவன், கோகுலன் என்றான்; மற்றவன் ஐங்கரன் என்று சொல்ல அருகில் நின்றவன், விக்கி என்றான்; அடுத்தவன் அருள் என்று சொன்னான்; இன்னொருத்தன் வேலவன் என்றான்.
“என்னடா எல்லாரும் கடவுள் பெயரைச் சொல்லுறீங்கள்” என்று கேட்டார் ட்ரெயினிங் மாஸ்டர். இதற்குப் பிறகு பெயர்ப் பட்டியல் சட்டென்று ரேணாகியது. அடுத்ததாக நின்றவன் கஸ்ரோ என்றான்; இன்னொருத்தன் கடாபி என்றான்; மற்றவன், அறபாத் என்றான்; பக்கத்தில் நின்றவன் சலீம் என்றான்; இடையில் நின்றவன், மண்டேலா என்றான்; எனக்கருகில் நின்றவன் ஸ்டாலின் என்று சொன்னான்.
‘ஓ… புரட்சித் தோழர்களே! நிச்சயமாகத் தமிழீழம் கிடைக்கத்தான் போகுது. நாளை நமதே..!’ என்று சொல்ல வேணும் போலிருந்தது எனக்கு. சிரிப்பு வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டேன். பயிற்சி முகாமில் கண்டபாட்டுக்குக் கதைக்கக் கூடாது. அப்படிக் கதை மிஞ்சிப்போனால் அதற்குக் கனக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
இதற்குப் பிறகு இன்னொரு வட்டமடித்தது பெயர்ப்பட்டியல். பெர்னாண்டோ என்றான் இன்னொருத்தன். இவ்வளவுக்கும் அவன் ஒரு சைவப் பழம். தந்தையார் ஒரு கோயில் அர்ச்சகர். அதனாலென்ன, இயக்கம் என்று வந்து விட்டால் முற்றும் துறந்து புத்தம் புதிய வாழ்க்கையில் நுழைதல் அல்லவா. இன்னொருத்தன் அக்பர் என்று சொன்னான். அவனுக்கும் இந்தப் பெயருக்கும் என்ன பொருத்தம் என்று எனக்கு விளங்கவேயில்லை. பரம்பரை பரம்பரையாக கடவுள் மறுப்பு, பெரியார் விசுவாசம். கம்யூனிஸப் பற்று என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்படிப் பல பெயர்கள் ஏன் எதற்கு என்று தெரியாமலே சூடப்பட்டுக் கொண்டிருந்தன. பயிற்சி முகாமுக்கு வந்து நின்று கொண்டு பழைய கதையை எல்லாம் பேச முடியுமா? குறைந்த பட்சம் பெயர்களிலாவது புரட்சியும் புதுமையும் வேண்டாமா?
விருப்பமான மாதிரி பெயர்களைத்தான் வைத்தாயிற்று. அதைப்பற்றி விளக்கம் சொல்ல வேண்டும் என்றார் ட்ரெயினிங் மாஸ்ரர். அப்பொழுதுதான் பலருக்கும் பிரச்சினை வந்தது. சிலர் உண்மையிலேயே ஏன்தான் இப்படியொரு பெயரை வைத்து மாட்டினோம் என்று திக்கு முக்காடினார்கள். நல்லவேளை மார்க்ஸ், மாவோ, லெனின், கோஸிமின், சேகுவேரா, சோக்கிரட்டீஸ், அரிஸ்டோட்டில், திருவள்ளுவர், கம்பன் என்று யாரும் வைத்துக்கொள்ளவில்லை.
மாதவன் என்று வைத்துக் கொண்டவனுடைய காதலிக்குப் பெயர் மாதவி. அவளுடைய ஞாபகமாக அந்தப் பெயரை வைத்துக்கொண்டான். பயிற்சி முடிந்து ஊருக்குத் திரும்பிப் போகும்போது தன்னுடைய இயக்கப்பெயரை அறிந்து சந்தோசப்படுவாள் அவள் என்ற ஆசையின் விளைவது. இப்படித்தான் கலைவாணியின் காதலன் கலைவாணன் ஆனான்.
பயிற்சி முகாம் என்றாலும் அது காதலர்களின் நினைவுப் பூங்காவைப் போலவே இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தங்களுடைய காதற்கதைகளை, அவற்றுக்குள்ளிருக்கும் ஏக்கங்களையெல்லாம் ஆளாளுக்குச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உண்மையில் கண்களை மட்டுமல்ல இதயத்தையே கரைத்து விடும் பெரும் சோகக் கடல் அந்தக் கதைகளில் நிரம்பிக் கிடந்தது.
போராட்டமும் புரட்சியும் என்றாலென்ன சும்மா சாதாரணமான சங்கதியா? அதற்காக எவ்வளவைத் தியாகம் செய்ய வேணும்? முதல் தியாகம் அவரவரின் முதற்காதல்.
என்னுடைய முறை வந்தபோது நான் “றெஜினோல்ட்” என்றேன். எல்லோரும் திரும்பி என்னைப் பார்த்தார்கள். எனக்கும் ஒரு றெஜியோ றெஜினாவோ றெஜிதாவோ இருக்கக்கூடும். அவள் கறுப்பியாகவோ சிவப்பியாகவோ இருப்பாள் என்று அனுமானித்திருப்பார்கள். ஆனால், நான் வைத்துக் கொண்டது என்னுடைய ஆசிரியரின் பெயரை.
பத்தாம் வகுப்பில் எங்களுக்குக் கணிதம் படிப்பித்தவர் றெஜினோல்ட். ஆசிரியர் என்று சொல்லவே முடியாத அளவுக்கு நெருங்கிய நண்பனைப்போல இருப்பார். பழக்கத்தில் மட்டுமல்ல, தோற்றத்திலும் கூடத்தான். ஒரு பெடியனைப்போல. அப்பொழுது அநேகமாக அவருக்கு 23 அல்லது 24 வயதிருக்கலாம். வகுப்பிலுள்ள முத்தல் பெண்களில் சிலர் அவருக்குக் கடிதம் எழுதியதாகவும் ஒரு கதை உலாவியது. ஆனால், அவர் அதையெல்லாம் பொருட்படுத்தியதில்லை. அப்போதெல்லாம் அவர் பெரிய புரட்சிக்காரைப்போலவே வகுப்பில் கதைப்பார்.
அவரிடம் நெருக்கமாகப் பழகும்போது ஒருநாள் அன்றிருந்த அரசியல் நிலவரத்தைப் பற்றிய பேச்சு வந்தபோது சொன்னார், “என்னுடைய அப்பா தமிழாராய்ச்சி மாநாட்டின்போது கொல்லப்பட்டு விட்டார்” என்று. அதிர்ந்து போனோம். கவலையோடு, “ அவருடைய பெயர் என்ன?” என்று கேட்டோம். “சிக்மறிங்கம்” என்றார். அதற்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோது தமிழராய்ச்சி மாநாட்டின்போது பலியானவர்களின் நினைவிடத்துக்குப் போய் சிக்மறிங்கம் என்ற பெயரைத் தேடிப் பார்த்தேன்.
ஆனால், அதற்குள் றெஜினோல்ட் மாஸ்ரர் எங்களை விட்டு, நாட்டை விட்டே போய்விட்டார். அவரையும் படையினர் தேடத் தொடங்கி விட்டார்களாம். அதனால், அங்கிருந்து வெளியேறி விட்டார். முதலில் பிரான்சுக்குப் போனார். பிறகு அமெரிக்காவுக்கோ கனடாவுக்கோ போனதாக அறிந்தேன்.