No menu items!

வெற்றிகளைக் குவிக்கும் இந்தியா – காரணம் யார்?

வெற்றிகளைக் குவிக்கும் இந்தியா – காரணம் யார்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்தியா. நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் ஒரே ஆண்டில் 21 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2021-ம் ஆண்டில் பாகிஸ்தான் அணி 20 சர்வதேச டி20 போட்டிகளில் ஜெயித்ததுதான் சாதனையாக இருந்தது.

அதிக வெற்றிகள் குவித்த அணி என்ற சாதனையை இந்தியா படைக்கவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் வெற்றி பெறவும் காரணமாக இருந்த 3 முக்கிய வீரர்கள் யார் என்று பார்போம்.

அக்சர் படேல்:

இந்திய அணிக்கு மிகச் சமீபத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய கவலை ரவீந்திர ஜடேஜாவின் காயம். ஆல்ரவுண்டரான ஜடேஜா காயத்தால் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக, அவரது இடத்தை யார் நிரப்பப் போகிறார்களோ என்ற கவலை ரசிகர்களை சூழ்ந்தது. இந்த தொடரின் மூலம் அந்த கவலையைப் போக்கிவிட்டார் ஆல்ரவுண்டரான அக்‌ஷர் படேல். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 8 விக்கெட்களைக் கொய்துள்ளார் அக்‌ஷர் படேல். அத்துடன் இக்கட்டான நேரங்களில் பேட்டிங்கிலும் கைகொடுத்துள்ளார். ரவீந்திர ஜடேஜா இல்லாத சூழலில் டி20 உலகக் கோப்பையிலும் இதேபோன்ற ஆட்டத்தை இவர் வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

சூர்யகுமார் யாதவ்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட் விக்கெட் இழப்புக்கு 30 ரன்களை எடுத்திருந்தது. வெற்றிக்கு தேவையான ரன்கள் 187-ஆக இருந்த நிலையில் இந்திய அணி தோற்கும் என்றுதான் பலரும் கருதி இருந்தனர். இந்த நேரத்தில் புயலாக மைதானத்துக்குள் நுழைந்த சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்களைக் குவித்தார். அவரது புயல் வேக பேட்டிங், ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இந்திய அணி எளிதில் வெற்றியைப் பெற்றது. தொடரையும் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 தொடர் மட்டுமல்ல, இந்த ஆண்டில் நடந்த மற்ற தொடர்களிலும்கூட இந்திய அணியின் முக்கிய நாயகன் சூர்யகுமார் யாதவ்தான். இந்த ஆண்டில் நடந்த சர்வதேச டி20 தொடர்களில் இதுவரை அதிக ரன்களை அடித்த வீரராகவும் சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். இந்த ஆண்டு நடந்த டி20 போட்டிகளில் இதுவரை இவர் எடுத்துள்ள ரன்கள் 682. ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 37.88 ரன்களைக் குவிக்கும் இவர் 191.67 (அதாவது 100 பந்துகளில் 191 ரன்கள்) என்ற மிரட்டவைக்கும் ஸ்டிரைக் ரேட்டையும் கொண்டிருக்கிறார். டிவில்லியர்ஸுக்கு பிறகு 360 டிகிரியிலும் ஷாட்களை அடிக்கும் ஆற்றல் வாய்ந்த சூர்யகுமார் யாதவை டி20 உலகக் கோப்பை தொடருக்கான துருப்புச் சீட்டாக பார்க்கிறது இந்தியா.

விராட் கோலி:

இத்தொடரின் முதல் 2 போட்டிகளிலும் விராட் கோலியின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை. ஆனால் அதற்கெல்லாம் சேர்த்துவைத்து தொடரின் முடிவை தீர்மானிக்கும் 3-வது டி20 போட்டியில் அதிரடி காட்டினார் விராட் கோலி. ஒரு பேட்ஸ்மேனின் மனோபலத்தை மிக முக்கியமான போட்டிகள்தான் தீர்மானிக்கும். அணி வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் ஒரு பேட்ஸ்மேன் மனதைரியம் இல்லாமல் சுருண்டுவிட்டால் அவர் ஆற்றல் இல்லாதவர் என்று கருதலாம். அதேநேரத்தில் இத்தகைய காலகட்டத்தில் துணிச்சலுடன் நின்று அணியை கரைசேர்க்கும் பேட்ஸ்மேன்தான் ஹீரோவாக பார்க்கப்படுவார். அந்த வகையில் நேற்றைய போட்டியில் 63 ரன்களைச் சேர்த்த விராட் கோலி, ரசிகர்களின் மனதில் நாயகனாய் உயர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...