தெலுங்கு திரையுலகில் இப்போது பரபரப்பாக பேசப்படுவது சமந்தாவின் அடுத்த திருமணம் குறித்துதான்.
நாகர்ஜூன் மகன் நாகசைதன்யாவை 2017ல் திருமணம் செய்தார் சமந்தா. நான்கு வருட திருமணம் வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் 2021ல் விவாகரத்து பெற்றார்கள். விவாகரத்துக்குப் பிறகு சமந்தாவின் திரை வெற்றிகள் அதிகரித்தன. அவர் உடுத்தும் உடைகளின் அளவு குறைந்தன. தெலுங்கு திரையுலகின் கிளாமர் ராணியாக வலம் வரத் துவங்கினார். இப்போது இந்தியிலும் ஜொலிக்கத் துவங்கியிருக்கிறார். இந்த சூழலில் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகிவிட்டார் சமந்தா என்று செய்திகள் வருகின்றன.
மீண்டும் திருமணம் செய்துக் கொண்டு இல்லற வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று அவருக்கு அறிவுரை கொடுத்திருப்பது ஈஷா மையத்தின் குரு ஜக்கி வாசுதேவ் என்று கோலிவுட் கிசுகிசுக்கிறது.
ஜக்கி வாசுதேவின் சிஷ்யை சமந்தா. தனது மன ஆறுதலுக்காக ஈஷா யோகா மையத்துக்கு அடிக்கடி செல்வார் சமந்தா. அங்கு சமந்தாவுக்கு ஜக்கி இப்படி ஆலோசனை கொடுத்ததாக செய்திகள் கூறுகின்றன.
அந்த ஆலோசனையை சமந்தா ஏற்பாரா? மீண்டும் திருமணம் செய்ய துணிவாரா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
இயக்குநர் ராஜூமுருகனை விமர்சிக்கிறாரா ஷான் ரோல்டன்?
ஷான் ரோல்டன் சில நல்ல திரைப்பாடல்களை தமிழ் திரையுலகுக்கு கொடுத்த இசையமைப்பாளர். வாயை மூடி பேசவும், சதுரங்க வேட்டை, முண்டாசுப்பட்டி, ஜோக்கர், மெஹந்தி சர்க்கஸ் போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். அந்தக் கால எழுத்தாளர் சாண்டியல்னின் பேரன். நேற்று ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார்.
’ என் நண்பர் இயக்குனர் ஒருவர் கம்யூனிச சிந்தாந்தத்தை தன் உயிர்மூச்சாய் கொண்டவர். எங்கள் பிணைப்பையும், கலை சாரந்த கெமிஸட்ரியையும் இந்த திரையுலகம் நன்கு அறியும். ஆனால், அவரும் இன்று வியாபார கோட்பாட்டுக்கு விலை போனது வருத்தத்தை அளிக்கிறது. சிந்தாந்தங்களை இங்கு வாய் கிழிய பேசுவார்கள்
ஆனால், நடைமுறையில் இவையெல்லாம் நம் தமிழ்நாட்டில் போணியாவதில்லை என்பதே நிதர்சனம். இனி, சிந்தாந்தம் என்ற பெயரில் வாய் சவடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள்.’ என்று அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
யாரைச் சொல்கிறார் ஷான் ரோல்டன் என்பது கோலிவுட்டில் பேச்சாக இருந்தது. அவர் குறிப்பிடுவது இயக்குநர் ராஜுமுருகனைதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
குக்கூ, ஜோக்கர், ஜிப்சி போன்ற வித்தியாசத் திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்குகிறாராம். அதற்கு இசை யுவன் ஷங்கர் ராஜாவாம். பக்கா கமர்ஷியல் படமாம்.
ராஜூமுருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படத்துக்கு ஷான் ரோல்டன்தான் இசை. ஷான் ரோல்டன் இசையமைப்பில் ராஜு முருகன் பல பாடல்கள் எழுதியிருக்கிறார். இப்போது கார்த்தி படத்துக்கு தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற எரிச்சலில் இந்தப் பதிவை போட்டிருக்கிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்.
வெங்கட்பிரபுவுடன் கீர்த்தி ஷெட்டி
சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்து செய்திகள் பரவிக் கொண்டிருக்க. சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா வெங்கட் பிரபு திரைப்படத்தில் நடிக்கிறார். தமிழ்- தெலுங்கு என இரட்டை மொழிகளில் தயாராகும் இந்தத் திரைப்படத்துக்கு இரட்டை இசையமைப்பாளர்கள். இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள்.
படத்தின் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி. கீர்த்தி சுரேஷுக்கு போட்டியாக உருவெடுத்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் உப்பென்னா படத்தின் மூலம் மிகப் பிரபலமான கீர்த்தி ஷெட்டி இப்போது தன்னுடைய சம்பளத்தை உயர்த்தினார். வரும் படங்களையெல்லாம் ஒப்புக் கொண்டார். காற்றுள்ளபோதே என்று யாரோ அவரிடம் சொல்ல அவர் இந்தக் காரியங்களை செய்தார். இப்போது அதுவே அவருக்கு சிக்கலாக முடிந்திருக்கிறது.
கீர்த்தி ஷெட்டியின் சமீபத்திய மூன்று படங்களும் தோல்வி. ஆனாலும் அவரது மார்க்கெட் குறையவில்லை. இப்போதும் கைவசம் படங்கள் இருக்கின்றன. அவை ஓட வேண்டும். அப்போதுதான் 19 வயதுப் பெண்ணான கீர்த்தி ஷெட்டிக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.