No menu items!

ஆ.ராசா மீது திமுக தலைமைக்கு கோபமா? – மிஸ் ரகசியா

ஆ.ராசா மீது திமுக தலைமைக்கு கோபமா? – மிஸ் ரகசியா

நவராத்திரிக்காக பை நிறைய பொம்மைகளை வாங்கி வந்திருந்தாள் ரகசியா.

“நம்ம ஆபீசுக்கு இது முதல் நவராத்திரி இல்லையா… அதான் பார்த்துப் பார்த்து பொம்மைகளை வாங்கிட்டு வந்திருக்கேன். வேற எங்கேயும் இந்த பொம்மைகள் கிடைக்காது. சொல்லிச் செஞ்ச பொம்மைங்க இது.” என்றாள்.

“அப்படி என்ன ஸ்பெஷல் பொம்மைகளை வாங்கி வந்துட்ட?.”

“இதுல இருக்கிறது எல்லாமே அரசியல்வாதி பொம்மைங்க. ரகசியாவுக்கு நியூஸ் தர்றது அரசியல்வாதிகள்தானே… அதான் நவராத்திரிக்கு அவங்க பொம்மைங்க..”

“பொம்மை வைக்கறதெல்லாம் சரி. ஆனா ஒவ்வொரு தலைவர் பொம்மையை நீ வெளியில எடுக்கும்போதும் அந்த தலைவரைப் பத்தி ஒரு நியூஸ் சொல்லணும்…”

“காரியத்துல கண்ணா இருக்கீங்க…” என்று சிரித்தபடி பொம்மைகளை பையில் இருந்து எடுத்து அடுக்க ஆரம்பித்தாள் ரகசியா.

முதலில் ரகசியா எடுத்தது எடப்பாடி பொம்மை.

“எடப்பாடி பொம்மையை எடுத்துட்டே. அவர் பத்தி என்ன நியூஸ் வச்சிருக்கே?.”

“டெல்லியில் அமித்ஷாவை பார்த்துட்டு வெளியில வந்த எடப்பாடி பழனிசாமி, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று உள்துறை அமைச்சரிம் புகார் சொல்ல வந்தேன்’ன்னு சொல்லியிருக்காரு. இதுல கொஞ்சம் உண்மையும் இருக்கு. எடப்பாடிக்கு வேண்டப்பட்ட தமிழக உளவுத் துறை அதிகாரி ஒருத்தர் சில விவரங்களை எடப்பாடிக்கு தந்திருக்கிறார். அதையெல்லாம் தொகுத்து அமித் ஷா கிட்ட ஒரு அறிக்கையா கொடுத்திருக்கார். அதுல சில இடங்கள்ல அமித் ஷா படிக்க ஏதுவா இந்தியிலயும் சில குறிப்புகளையும் எழுதி வச்சிருந்தாங்களாம். ஃபைல்ல இந்தி வார்த்தைகளைப் பார்த்ததும் அமித் ஷா குஷியாயிட்டாராம்.”

“அவர் குஷியானதும் எடப்பாடி அதிமுக விவகாரங்களைப் பத்தி பேச ஆரம்பிச்சிருப்பாரே?”

“பேசாம இருப்பாரா… அமித் ஷா கேக்கறதுக்கு முன்னாடியே, ‘சசிகலா, தினகரன், ஓபிஎஸ்ஸுக்கெல்லாம் கட்சியில செல்வாக்கே கிடையாது. பெரும்பான்மை உறுப்பினர்களோட ஆதரவு எனக்குத்தான் இருக்கு’ என்னு சொல்லியிருக்கார். அப்புறம் பக்கத்துல இருந்த வேலுமணியைக் காட்டி, ‘இவர் வீட்டில் தொடர்ந்து தமிழக அரசு ரெய்ட் நடத்திட்டு வருது. இதைக் கண்டிக்கறதுக்கு பதிலா ஆதரிச்சு கருத்து சொல்றார் ஓபிஎஸ். அவர் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துட்டார். தனிக்கட்சி தொடங்கப் போறதா தகவல் வருது. அதோட நம்ம கூட்டணியை தோற்கடிக்க மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் நிதி தரப் போறதாவும் பேச்சு வருது.”ன்னு பத்த வச்சிருக்கார். முடிக்கும்போது, நாடாளுமன்றத் தேர்தல் என் செல்வாக்கை நிரூபிக்கும்னு சொல்லியிருக்கார். அவர் அப்படி சொன்னதை அமித் ஷா ரசிக்கலயாம். உடனே முகம் மாறி, ‘நாடாளுமன்றத் தேர்தல் உங்கள் செல்வாக்கை நிரூபிக்க நடக்கலை’ன்னு கடுமையா சொன்னாராம்.”

“எப்படியோ கட்சி விவகாரம் பற்றி அமித் ஷா கிட்ட பேச எடப்பாடிக்கு வாய்ப்பு கிடைச்சதே?.”

“ஆனா இதை கட்சிக்காரங்க யாரும் விரும்பல. கட்சி விவகாரத்துக்காக எப்ப பார்த்தாலும் டெல்லிக்கு காவடி எடுக்கறதான்னு தொண்டர்கள் புலம்பறாங்களாம். இது தொடர்பா எடப்பாடிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் நிறைய புகார் கடித்ங்கள் வந்துட்டு இருக்காம்.”

“அதெல்லாம் சரி எடப்பாடியோட டெல்லி பயணத்துக்கு அதிமுக விவகாரம் மட்டும்தான் காரணமா?”

“இன்னொரு காரணத்தையும் சொல்றாங்க. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சிக்கியிருக்கிற ஊழல் விவகாரத்துல சட்டத்தின் கை எடப்பாடியாரோட மகன் வரைக்கும் நீளுதாம். சம்பந்தி பேரும் இதுல இருக்காம். அமித் ஷாவுடனான இந்த சந்திப்பில் இந்த விஷயத்தைப் பத்தியும் எடப்பாடி பேசினதா சொல்றாங்க” என்றபடி ஸ்டாலின் பொம்மையை பையில் இருந்து எடுத்தாள் ரகசியா. “திமுக பத்தி சொல்றேன்” என்று ஆரம்பித்தாள்.

“திமுகவில் மாவட்ட செயலாளர் தேர்தல்தான் இப்போதைக்கு ஹாட் டாபிக். உதயநிதி சொல்ற மாதிரி மாவட்ட செயலாளர் தேர்தல்ல இளைஞர் அணிக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க திட்டமிட்டிருக்காராம் முதல்வர். அனேகமா திருப்பூர், கோவை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்கள் இளைஞர் அணிப் பக்கம் போகலாம்னு பேசிக்கிறாங்க.”

“இளைஞர்கள் முன்னுக்கு வர்றது நல்லதுதானே?”

“மாவட்ட செயலாளர் தேர்தல்ல சபரீசன் இன்னொரு கருத்தை சொல்றாராம். மூத்த மாவட்ட செயலாளர்களை மாற்றி மாநில அளவில் அவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கலாம்கிறது அவரோட எண்ணம். ஆனா இதை துரைமுருகன், டி.ஆர். பாலு போன்ற தலைவர்கள் ரசிக்கலையாம். மாவட்ட செயலாளர் பதவியில மூத்த தலைவர்கள் இருக்கிறதுதான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நல்லது. அவங்க நெளிவு சுளிவு தெரிஞ்சு நடந்துக்குவாங்க. அதோட மாவட்டத்தைப் பத்தியும் அவங்களுக்குதான் நல்லா தெரியும்கிறது அவங்களோட கருத்து. இதுல எதை எடுத்துக்கிறதுங்கிற குழப்பத்தில் இருக்கிறார் முதல்வர்.”

“திமுகவுல சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்துல யார் வரப்போறாங்கன்னு முடிவாயிடுச்சா?.”

“இன்னும் இல்ல. கனிமொழி, பூங்கோதை ஆலடி அருணா, கீதா ஜீவன் ஆகிய 3 பேரோட பேர் இன்னும் சுத்திட்டு இருக்கு. இந்த நேரத்துல பிராமண சமூகத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை விஜயாவுக்கு இந்த பதவியை கொடுத்தா என்னன்னும் தலைமை யோசிக்குதாம். இதனால பிராமணர்களைச் சமாதானப்படுத்தலாம்கிறது முதல்வரோட எண்ணமா இருக்கு. அதே நேரத்துல துணைப் பொதுச் செயலாளர் பதவியில இருந்து ஐ. பெரியசாமி ராஜினாமா செய்தா, அந்தப் பதவியை தங்கம் தென்னரசுக்கு கொடுக்கலாமான்னும் யோசிக்கிறாங்களாம்.”

ரகசியா அடுத்து எடுத்தது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பொம்மை.

“ஆர்.எஸ்.எஸ் செய்தியை சொல்லப் போறியாக்கும்..”

“ஆமாம். ஆர்.எஸ்.எஸ்ஸின் டெல்லி மேலிடம் எடப்பாடி, பன்னீர் பத்தியும் திமுக செல்வாக்கு பத்தியும் ஒரு சர்வே நடத்தியிருக்கு. எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் சமமா எடப்பாடியும் ஓபிஎஸ்ஸுக்கும் செல்வாக்கு இல்லைன்னு இந்த சர்வேல வந்திருக்கு. சொல்லப்போனா 2 பேரோட செல்வாக்கும் சிரிப்புக்கு இடம் தர்றதா இருக்கிறதா தெரிய வந்திருக்கு. இதை பாஜக தலைமைகிட்ட சொல்லியிருக்காங்க.”

“தமிழ்நாட்டுல மனுஸ்மிருதி சர்ச்சை ஓடிக்கிட்டு இருக்கே. அது பத்தி ஆர்.எஸ்.எஸ்.க்கு கருத்து எதுவும் இல்லையா?”

“அத பத்தியும் பேசியிருக்காங்க. இந்த சமயத்துல மனுஸ்மிருதி பத்தி ரொம்ப பேசுறது நல்லதில்லைனு சொல்லியிருக்காங்க. மனுஸ்மிருதி பத்தி ரொம்ப கிளற வேண்டாம்னு பாஜக தலைமைக்கு ஆர்எஸ்எஸ் அறிவுரை கூறியிருக்கிறாங்க.”

ரகசியா அடுத்ததாக எடுத்தது ஆ.ராசா பொம்மை.

“ஆ.ராசாவோட சர்ச்சைப் பேச்சு பாஜக ஸ்ட்ராங்கா இருக்கிற கொங்கு மண்டலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கு. கடையடைப்பு, போஸ்டர் ஒட்டுறதுனு பாஜக இந்த அளவு தீவிரமா இறங்கும்னு திமுக எதிர்பார்க்கல. கொங்கு மண்டலத்தில் ராசாவை கண்டித்து சுவரொட்டிகள், பொதுக்கூட்டம், சாலைமறியல், ஊர்வலம்னு பாஜககாரங்க பெரிய அளவில போராட்டம் பண்றதுல செந்தில் பாலாஜி அப்செட்ல இருக்காராம். நான் பாடுபட்டு கொங்கு மண்டலத்தை திமுக கோட்டையா கிட்டத்தட்ட மாத்திட்டேன். ஆனா ஆ.ராசா ஆட்டத்தைக் கலைக்கப் பார்க்கிறாரேன்னு செந்தில் பாலாஜி கட்சிக்காரங்ககிட்ட புலம்பிட்டு இருக்காராம்.”

“அவர் சொல்றதும் சரிதானே? ஆனா திமுக தலைமையோட ஆதரவு ஆ. ராசாவுக்கு இருக்குனு சொல்றாங்களே.”

“ஆமா. உண்மைதான். அதனாலதான் கோவைல ஆ.ராசாவையும் திமுகவினரையும் அசிங்கமா பேசுன பாஜக தலைவரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. கூட சிலரையும் பிடிச்சுப் போட்டுருக்காங்க. ஒன்பது பேரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. இதெல்லாம் ஆ.ராசாவுக்கு ஆதரவா எடுக்கிற நடவடிக்கையா பாஜக பார்க்குது. இது தொடர்பா இன்னொரு சங்கதியும் உலவுது..”

“என்னது?”

“2ஜி அலைக்கற்றை வழக்கை துரிதப்படுத்தி எப்படியும் தண்டனை உறுதி என்ற அளவில் பாரதிய ஜனதா அரசு முனைப்போடு செயல்படுகிறதாம் இதற்காகத்தான் இப்போதே சர்ச்சைப் பேச்சு பேசி அரசியல் பழிவாங்கல் என்று சமாளிக்கலாம்னு அவர் திட்டமிட்டு இருக்கிறதா சொல்றாங்க.”

“அப்படி நடக்குமா? 2ஜி கேஸ்ல சம்பந்தப்பட்ட நீரா ராடியா மேல எந்த தப்பும் இல்லைனு சிபிஐ சொல்லியிருக்கே. நீரா ராடியா பேசுன டேப்புகள்தாம் அப்போ பெருசா இருந்தது. இப்ப அவங்க மேலயே தப்பில்லைனு சொன்னா வழக்கு எப்படி நடக்கும்?”

“ஆமா. கரெக்ட்தான்” என்று கூறியவாரே சசிகலா பொம்மையை எடுத்தாள் ரகசியா.

“இந்த பொம்மைக்கு நேரம் சரியில்லை. அதிமுகவைக் கைப்பற்றும் சசிகலாவின் முயற்சிகள் புஸ்வாணம் ஆகிட்டதா சொல்றாங்க. சுற்றுப் பயணங்கள் நடத்தி காசை செலவழிச்சதுதான் மிச்சம். அதிமுகவில் யாரும் பெருசா லட்சியம் பண்ணலைன்னு சொல்றாங்க. அதோட பொதுமக்கள் கிட்டயும் தனக்கு சிம்ப்பதி கிடைக்கலியேன்னு ராத்திரியெல்லாம் தூக்கம் வராம டிவி பார்த்துட்டு இருக்காராம் சசிகலா.”

“ஐயோ பாவம்….”

“கடைசியா ஒரு முக்கியமான நியூஸ் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்குங்க. திமுக கூட்டணில எதிர்பாராத கட்சி ஒண்ணு சேரப் போகுது. அது நாடாளுமன்றத் தேர்தல்ல திமுகவுக்கு பலமாகப் போகுது.”

“முழுசா சொல்லு… என்ன நடக்குது?”

“நாடாளுமன்றத் தேர்தல்ல 40 தொகுதிலேயும் வெற்றினு ஸ்டாலின் சொன்னார்ல. அதுக்கான காய்களை திமுக நகர்த்திக்கிட்டு இருக்கு. திமுக கூட்டணியில் சிறு சிறு கட்சிகளை சேர்த்துக்கொள்ள இருக்கிறது. சிறு கட்சிகள் மட்டுமில்லாமல்.. பாமகவும் கூட திமுக பக்கம் போகலாம் என்பதுதான் தமிழக அரசியல்ல ஹாட் நியூஸ்.”

“பாமக அங்க போச்சுனா விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணில இருக்குமா? ரெண்டு பேருக்கும் ஆகாதுல.”

“இப்ப ஆகாது. தேர்தல் நேரத்துல செட்டாகிடும். பாஜகவையும் மோடியையும் வீழ்த்த எல்லோரும் ஒன்றுபட வேண்டியது அவசியம்னு சொல்லி கைகோத்துப்பாங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...