கிரிக்கெட் பெருங்கடலில் இந்தியக் கப்பல் சில வாரங்களாகவே தத்தளிக்கிறது. ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடனும், அதைத்தொடர்ந்து நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடமும் தோற்ற இந்திய அணி, இன்று 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவின் ஒரே நம்பிக்கை ஜஸ்பிரித் பும்ரா.
இந்திய அணி முழுக்க முழுக்க பும்ராவைச் சார்ந்திருப்பதற்கு காரணம், கடந்த சில போட்டிகளில் பலவீனமாகிக் கிடக்கும் பந்துவீச்சு. இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளிடமும் ஆடிய போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் வலுவாகவே இருந்தது. இத்தனைக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள்கூட ஃபார்முக்கு திரும்பிவிட்டார்கள். ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி 170 ரன்களுக்கு மேல் குவித்திருந்தது. இருந்தும் இந்த 3 போட்டிகளிலும் இந்தியா தோற்றதற்கு முக்கிய காரணம் அதன் பந்துவீச்சு.
சமீபத்தில் இந்தியா தோல்வியடைந்த 3 போட்டிகளிலும், கடைசி 4 ஓவர்களில் 54, 42 மற்றும் 41 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர் நமது பந்துவீச்சாளர்கள். இந்த 3 போட்டிகளிலும் 19-வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் 15, 14 மற்றும் 19 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.
அவர்தான் இப்படியென்றால் காயத்தில் இருந்து மீண்டுவந்து கடந்த போட்டியில் ஆடிய ஹர்ஷல் படேல் தனது 4 ஓவர்களில் 49 ரன்களை வாரி வழங்கியுள்ளார். 18-வது ஓவரில் மட்டும் 22 ரன்களை அவர் கொடுத்திருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களின் இந்த மோசமான செயல்பாட்டால் 207 ரன்களைக் குவித்தும் இந்திய அணி கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுள்ளது.
இந்த சூழலில்தான் இந்திய அணி இன்று பும்ராவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரை டெத் ஓவர்ஸ் என்று அழைக்கப்படும் கடைசி 5 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர் பும்ரா. அவரது யார்க்கர் பந்துகளைத் தொட எதிரணி பேட்ஸ்மேன்கள் யோசிப்பார்கள். கொஞ்சம் அசந்தாலும் பந்து ஸ்டம்புகளைத் தகர்த்துவிடும் என்பதால் ரன் குவிப்பதைவிட விக்கெட்டைக் காப்பதிலேயே அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
கடைசி ஓவர்கலில் மற்ற வீரர்கள் எல்லாம் சராசரியாக 10 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்கும் சூழலில், பும்ரா 7.65 ரன்களைத்தான் கொடுக்கிறார். அத்துடன் கடைசி ஓவர்களில் ரன் வேகத்துக்கு பிரேக் போட விக்கெட்களையும் கொய்கிறார்.
இதனால்தான் இன்றைய போட்டியில் பும்ராவின் வருகையை இந்திய அணி மிகவும் எதிர்பார்த்திருக்கிறது. ஒருபக்கம் பும்ரா ரன்களைக் கட்டுப்படுத்தினால், அது மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் உத்வேகம் கொடுக்கும். அது அவர்களின் ஆற்றலை அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள்.
இந்த சூழலில் இன்றைய போட்டியில் பும்ரா இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள சூர்யகுமார் யாதவ், “பும்ரா காயத்தில் இருந்து மீண்டுவிட்டார். வெள்ளிக்கிழமை நடக்கும் போட்டியில் அவர் நிச்சயம் ஆடும்வார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். உமேஷ் யாதவுக்கு பதிலாக அவரை களம் இறக்க அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.