No menu items!

உலகக் கோப்பையுடன் விடைபெறுகிறார் கோலி?

உலகக் கோப்பையுடன் விடைபெறுகிறார் கோலி?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விராட் கோலி கருதப்படுகிறார். இந்நிலையில் டி20 உலகக் கோப்பையுடன் அவருக்கு விடை கொடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

இப்போதுதானே ஆசிய கோப்பைக்கான டி20 போட்டியில் சதம் அடித்தார். அதற்குப் பின்னும் ஏன் அணியில் இருந்து நீக்குகிறார்கள் என்ற கேள்வி பலரது மனதிலும் எழலாம். இதற்கான பதில், கோலி விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதுதான். விராட் கோலி மட்டுமின்றி இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவையும் இனி டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக்கிவைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டு 2007. இந்த ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி மோசமாக தோற்றது. இதன் காரணமாக அடுத்து நடந்த டி20 உலகக் கோப்பையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. அணியின் முக்கிய வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதில் தோனியை கேப்டனாகக் கொண்ட இளம்படை டி20 உலகக் கோப்பை தொடருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த படையும் டி20 உலகக் கோப்பையை வென்றது.

இதன்பிறகு அப்போதைய இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. கும்ப்ளே, திராவிட், லக்‌ஷ்மண் போன்ற மூத்த வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட, டி20 போட்டிகளுக்கு இளம் வீரர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். அதேபோன்று இப்போதும் மூத்த வீரர்களை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடவைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகி ஒருவர் இது தொடர்பாக கூறும்போது, “ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு, அணியில் சில மாற்றங்களைச் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பிறகு முகமது ஷமிக்கான டி20 வாய்ப்புகள் குறைக்கப்பட்டு, அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் ஈடுபடுத்தப்பட்டார். அதுப்போல் இப்போது கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவை டி20 போட்டிகளில் இருந்து விலக்கிவைக்க தீர்மானித்துள்ளோம். இதுதொடர்பாக அவர்களிடம் பேசிவருகிறோம். வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க இது வழிவகுக்கும்” என்றார்.

கடைசிவரை 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவேண்டும் என்பதுதான் விராட் கோலியின் விருப்பமாக உள்ளது. இருப்பினும் அவர் மீதான பணிச்சுமையை குறைக்க, இந்த நடவடிக்கையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை நடைபெற உள்ளது. இந்த தொடருக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மாவின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கவும் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகி ஒருவர், “உ2023 உலகக் கோப்பையின்போது ரோஹித் சர்மா 36 வயதை நெருங்கிவிடுவார். எனவே எதிர்காலத்துக்காக இந்திய கிரிக்கெட்டில் மாற்றங்களைச் செய்வது இன்றியமையாதது” என்கிறார்.

விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஒதுங்கும் நிலையில் கே.எல்.ராகுல் அல்லது ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளாஇ இந்திய அணி இளமையாக இருக்கும். ஆனால் வலிமையாக இருக்குமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...