No menu items!

73 வயதில் கிடைத்த வேலை -அரசரான சார்லஸ்

73 வயதில் கிடைத்த வேலை -அரசரான சார்லஸ்

’73 வயதான வேலையில்லா மனிதருக்கு இப்போது வேலை கிடைத்துவிட்டது’ –இங்கிலாந்தின் அரசராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றபோது இங்கிலாந்து நாளிதழ் ஒன்று வெளியிட்ட தலைப்பு இது. இங்கிலாந்து அரசர்களிலேயே மிக அதிக வயதில் பதவியேற்பவர் சார்லஸ் என்பதுதான் இந்த தலைப்புக்கான அர்த்தம்

கூடவே மூன்றாம் சார்லஸ் மீது இங்கிலாந்து மக்கள் வைத்திருக்கும் மரியாதைக்கான எடுத்துக்காட்டாகவும் இதைக் கருதலாம். இங்கிலாந்தை கடந்த 70 ஆண்டுகாலம் ஆண்ட ராணி எலிசபெத்தை, அந்நாட்டு மக்கள் மிகவும் விரும்பினார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக மூன்றாம் சார்லஸ் மீது மக்களுக்கு அத்தனை விருப்பமில்லை. சார்லஸைவிட அவரது முதல் மனைவியான டயானா மீதுதான் இங்கிலாந்து மக்களுக்கு அன்பு அதிகம்.டயானாவை சார்லஸ் விவாகரத்து செய்திருக்க கூடாது என்று இன்னும் அங்குள்ளவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே திருமணமான கமீலாவை சார்லஸ் காதலியாக வைத்திருந்ததும் பிறகு அவரைத் திருமணம் செய்துக் கொண்டதும் கூட இங்கிலாந்து மக்களுக்கு சார்லஸ் மீது வெறுப்பு ஏற்பட காரணம்.

மக்களின் இந்த வெறுப்பை மாற்ற கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சிகளில் மூன்றாம் சார்லஸ் ஈடுபட்டுள்ளார். பல தொண்டு அமைப்புகளை அவர் நடத்தி வருகிறார். தான் இப்போது அரசராகி விட்டாலும், தனது நண்பர்கள் அந்த அமைப்புகளை தொடர்ந்து நடத்துவார்கள் என்று கூறியுள்ளார் சார்லஸ். தன் பொறுப்புகளை உணர்ந்துள்ளதாகவும் அதன்படி நடப்பேன் என்றும் உறுதி கூறியுள்ளார் சார்லஸ். இருப்பினும் பதவியேற்பு விழாவின்போது பணியாளர்களிடம் கடுகடுப்பாக அவர் நடந்த விதம் இங்கிலாந்து மக்களை முகம்சுழிக்க வைத்துள்ளது.

மக்களிடம் மரியாதை கிடைக்கிறதோ இல்லையோ, இங்கிலாந்தின் அரசராக பொறுப்பேற்பதால் ஏராளமான சொத்துகளும், உரிமைகளும் சார்லஸுக்கு கிடைக்கவுள்ளன. அவற்றில் சில…

இங்கிலாந்தின் அரசராக பொறுப்பேற்றதுடன், ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து உள்ளிட்ட 14 நாடுகளுக்கும் அரசர் ஆகியுள்ளார் சார்லஸ். 1703-ம் ஆண்டில் கட்டப்பட்ட பக்கிங்காம் அரண்மனைதான் இனி அவரது வசிப்பிடம். 39 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் 775 அறைகள் உள்ளன. இதில் 52 அறைகள் அரச குடும்பத்தினர் மற்றும் அவர்களின் விருந்தினர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இப்போது உலகிலேயே வாகனங்களை ஓட்டுவதற்கு டிரைவிங் லைசன்ஸ் தேவைப்படாத ஒரே நபர் இங்கிலாந்து அரசர்தான். லைசன்ஸ் மட்டுமின்றி தனது வாகனத்துக்கு நம்பர் பிளேட்டைக்கூட அவர் பொருத்த வேண்டியதில்லை.

இங்கிலாந்தின் அரசராக பொறுப்பேற்றுள்ளதால், உலகில் உள்ள எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் பாஸ்போர்ட் இல்லாமல் சார்லஸால் செல்ல முடியும். இங்கிலாந்து மக்களுக்காக பாஸ்போர்ட்கள் அரசர் அல்லது அரசியின் பெயரால் வழங்கப்படுவதால் அவருக்கு இந்த சலுகை உள்ளது.

எல்லோரும் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் சார்லஸ் மட்டும் 2 பிறந்தநாள்களை கொண்டாடுவார். அவரது உண்மையான பிறந்தநாள் நவம்பர் 14-ம் தேதி வருகிறது. அது பனிக்காலம் என்பதால் மக்களால் அந்த பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடியாது. எனவே கோடைகாலத்தில் ஒரு நாள் குறிக்கப்பட்டு அன்றைய தினம் அவரது பிறந்தநாள் மக்களால் கொண்டாடப்படும்.

இங்கிலாந்தில் அரசர் வசிக்கும் பக்கிங்காம் அரண்மனையின் அடித்தளத்தில், அரசர் பயன்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக ஒரு ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அரசர் மட்டும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.

நம் நாட்டு அரசர்களை பழங்காலத்தில் புலவர்கள் புகழ்ந்து பாடுவது வழக்கம். அந்த வழக்கம் இங்கிலாந்தில் இன்னும் உள்ளது. அரசரைப் புகழ்ந்து பாடுவதற்காகவே ஒரு புலவர் பணியில் அமர்த்தப்பட்டு அவருக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டுமுதல் சைமன் ஆர்மிடேஜ் என்பவர் இங்கிலாந்து அரண்மனையின் புலவராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசருக்காக பாடல்களை இயற்றுவது அவரது கடமை.

இங்கிலாந்து நாட்டின் அரசமைப்பு சட்டப்படி எந்த சூழலிலும் அரசரை யாராலும் கைது செய்ய முடியாது.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கணக்குப்படி எலிசபெத் ராணியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர்கள். இப்போது எலிசபெத் ராணியின் வாரிசாக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்பதால், அவரது அத்தனை சொத்துகளும் மூன்றாம் சார்லஸைச் சென்று சேரும்.

இந்திய ஜனாதிபதியைப் போலவே பொதுத்தேர்தலில் வெல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை நாட்டின் பிரதமராக நியமிப்பது அந்நாட்டு அரசரின் உரிமைகளில் ஒன்றாகும். அதுபோல் ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் கூடும் நாளில் அதன் உறுப்பினர்கள் மத்தியில் அரசர் உரையாற்றுவார்.

மற்ற நேரங்களில் பக்கிங்காம் அரண்மனையை சுற்றிவருவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...