ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் இன்று சசிகலா திடீர் என்று சந்தித்து பேசினார். பின்னர், இந்த சந்திப்பு குறித்து, தஞ்சாவூரில் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்தியலிங்கம், “ஒரத்தநாடு அருகே இன்று நானும் சசிகலாவும் சந்தித்துக் கொண்டது தற்செயலாக நடந்த விஷயமாகும். அதிமுகவில் அனைவரும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம். அதுதான் எனது எண்ணமும் கூட. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் சசிகலாவும் டி.டி.வி. தினகரனும் அடங்குவர்.
சசிகலாவையும், டி.டி.வி தினகரனையும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறுவதை உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர வேண்டும். இதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டர்களின் எண்ணம்’ என்றார்.
ராணி எலிசபெத் மறைவு – அரசராகிறார் இளவரசர் சார்லஸ்
இங்கிலாந்து ராணி எலிசபெத் நேற்று இயற்கை எய்தினார். இதனால், ராணி எலிசபெத்தின் மகனான 73 வயது இளவரசர் சார்லஸ் ஃபிலிப் ஆர்தர் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னராகிறார். இங்கிலாந்தில் மன்னர் பதவிக்காக காத்திருக்கும் வாரிசுக்கு என்று குறிப்பிட்ட பணியோ பொறுப்போ இல்லை. அதனால், இவ்வளவு நாட்களும் சார்லஸின் பணியே காத்திருப்பாக மட்டும் தான் இருந்தது.
சார்லஸ் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1970இல் பட்டம் பெற்று 1971 முதல் 1976 வரை இங்கிலாந்து கடற்படையான ராயல் நேவியில் பணிபுரிந்தார். பைலட் பயிற்சியும் பெற்றார். சார்லஸின் காதலி கமீலியா அவரை கைவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் அமண்டா நாட்ச்புல் என்பவருக்கு காதலைச் சொன்னார். ஆனால், அவரும் சார்லஸை நிராகரித்தார். இந்த சூழலில்தான் 1981 பிப்ரவரியில் சார்லஸ் டயானா ஸ்பென்சரை சந்தித்தார். அப்போது டயானாவுக்கு 19 வயது. 1981 ஜூலை 29இல் சார்லஸ் – டயானா திருமணம் ஒரு ஃபேரி டேல் திருமணம் போல் கோலாகலமாக நடந்தது. 1992 ஜூனில் சார்லஸ் – டயானா தம்பதி பிரிந்தனர். பின்னர் பழைய காதலி கமிலியாவை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.
பாரதிராஜா நடனமாடினார் – மருத்துவர் பேட்டி
இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த உடற்கூறு மருத்துவர் சுவாமி கண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘பாரதிராஜாவுக்கு நுரையீரலில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. பாக்டீரியா கிருமியினால் நிமோனியா தொற்று ஏற்பட்டிருந்தது. சில பேருக்கு லேசான தொற்று ஏற்படும். சிலருக்கு தீவிரமாக இருக்கும். பாரதிராஜாவுக்கு தீவிர தொற்று ஏற்பட்டது. எனவே, ஆக்சிஜன் குறைந்து மயக்கமான நிலைக்கு சென்றுவிட்டார். சரியான நேரத்தில் நோயை கண்டறிந்து மருந்து வழங்கியதால், விரைவில் குணமாகிவிட்டார்.
தற்போது பாரதிராஜா மிக நன்றாக இருக்கிறார். காலையில் கொஞ்சம் நடனம் ஆடி காட்டினார். எப்போதும் படங்கள் பற்றியே பேசி வருகிறார். மீண்டும் திரைப்பட பணிக்கு திரும்ப முனைப்புடன் இருக்கிறார். தங்கர் பச்சானின் அடுத்த படத்துக்காக முடி கலரிங் செய்ய வேண்டும், செய்யலாமா என கேட்டார். செய்யலாம் என கூறிய பிறகு இன்றே சற்று கலரிங் செய்துள்ளார்” என்று கூறினார்.
பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு நிபந்தனை ஜாமின் – உச்ச நீதிமன்றம் உத்தரவு
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு சென்றார். அப்போது அவரை உத்தரபிரதேச மாநிலம் போலீசார் மதுராவில் கைது செய்தனர். கப்பனுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பு உள்ளதாகவும், ஹத்ராஸ் விவகாரத்தை அவர் பிரச்சனைக்குரிய வகையில் கையாள முயற்சித்ததாகவும் அதனாலேயே கப்பனை கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். சித்திக் கப்பன் மீது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) போடப்பட்டு, மதுரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சித்திக் கப்பன் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக சித்திக் கப்பன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது. சித்திக் கப்பன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார். அவரது வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சித்திக் காப்பனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். அடுத்த ஆறு வாரங்களுக்கு டெல்லியில் தங்கி இருக்கவும், அதன் பிறகு கேரளாவிற்கு சென்று உள்ளூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.