ஒரு கட்சி ஒரு கொள்கை என்று நம் நாட்டு அரசியல்வாதிகள் இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஒரு நாள் ஒரு கட்சியின் மேடையில் நின்று எதிர்க்கட்சிக்கு சவால்விடும் அரசியல்வாதி, அடுத்த நாளிலேயே அந்த எதிர்க்கட்சியின் முகாமுக்குள் இணைந்து முன்னர் தான் இருந்த கட்சியை தாக்கிப் பேசுவது இப்போது சகஜமாகி விட்டது.
கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த காலம் முதல் இப்படி அரசியல்வாதிகள் கட்சி மாறுவது பெருகி வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னர் காங்கிரஸ் கட்சி, மத்தியில் வலிமையாக இருந்த காலத்தில், மாநில அரசுகளை அடிக்கடி கலைத்து தொல்லை கொடுத்து வந்தது. ஆனால் இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு வேறு வகையில் தொல்லை கொடுத்து வருகிறது. மாநிலங்களில் வலிமையாக உள்ள கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை தங்கள் கட்சியில் சேர்ப்பது அவர்களின் வழக்கமாகி வருவதாக முக்கிய எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துள்ள சூழலில், மணிப்பூர் மாநிலத்தில் அக்கட்சியைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இந்த வகையில் பார்த்தால், கடந்த 2014-ம் ஆண்டுமுதல் இதுவரை சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களுமான 211 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மத்திய பாஜக அரசு, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்து தங்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை தங்கள் கட்சிக்கு இழுப்பதாக எத்கிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதே காலகட்டத்தில், அதாவது 2014-ம் ஆண்டுமுதல் இதுவரை பாஜகவைச் சேர்ந்த 60 மக்கள் பிரதிநிதிகள் அக்கட்சியில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி உள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளில் அதிக அளவிலான மக்கள் பிரதிநிதிகள் பாஜகவில் சேர்ந்துள்ள அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்துதான் அதிக அளவிலான மக்கள் பிரதிநிதிகள் வெளியேறியுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மட்டும் மட்டும் அக்கட்சியைச் சேர்ந்த 177 சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும் வெளியேறியுள்ளனர். இதில் கோவா, மணிப்பூர், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தராகண்ட் மாநில தேர்தல்களுக்கு முன் அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறி உள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக கடந்த 2020-ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இப்படி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய 177 மக்கள் பிரதிநிதிகளில் 84 பேர் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து 21 மக்கள் பிரதிநிதிகளும், திருணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 17 மக்கள் பிரதிநிதிகளும், சமஜ்வாதி கட்சியில் இருந்து 9 சட்டமன்ற உறுப்பினர்களும் கடந்த 8 ஆண்டுகளில் வெளியேறி உள்ளனர்.
இப்படி தங்கள் கட்சியை விட்டு வெளியேறிய மக்கள் பிரதிநிதிகளில் 85 பேர், தாங்கள் முன்பு போட்டியிட்ட தொகுதியில், புதிய கட்சியின் வேட்பாளராக நின்றிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.