சென்னையில் சில்லறை விற்பனை கடகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 60 ரூபாயைக் கடந்துள்ளது.
பொதுவாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 65 லாரிகள் வரை தக்காளி இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் 40 முதல் 45 லாரிகள் வரை மட்டுமே சரக்குகள் வருகின்றன. இதனால் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60 வரை விற்பனையாகிறது. தக்காளியின் இந்த விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்க்கண்ட் அரசு வெற்றி
ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக இருக்கும் ஹேமந்த் சோரன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி சுரங்க குத்தகை பெற்றுக்கொண்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்ய கவர்னருக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த விவகாரத்தில் கவர்னர் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில் மாநில அரசியலில் நீடித்து வரும் குழப்பத்தை போக்குவதற்காக, சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் முடிவு செய்தார்.
அம்மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தை முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கொண்டுவந்தார். இதில் கலந்து கொள்ளாமல் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 48 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். 10-ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம் போல நடைபெறும். மாத பூஜை காலங்களைப் போலவே நெய் அபிஷேகம், கலச பூஜை, களப பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி பூஜை என அனைத்து பூஜைகளும் நடக்கிறது.
கோவிலில் 8-ம் தேதி ஓணம் சிறப்பு வழிபாடு மற்றும் ஓண சத்யா நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து உள்ளது. சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு நடைபெற்று வருகிறது.
ஆசிரியர் தினம் : பிரதமர் மோடி வாழ்த்து
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இளம் மனங்களில் கல்வியின் மகிழ்ச்சியை பரப்பும் கடின உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏசி மூலம் பரவும் புதிய வகை வைரஸ்
அர்ஜென்டினாவில் ஏசி மூலம் பரவும் ‘லெஜியோனேயர்ஸ்’என்ற நோயால் 4 பேர் பலியாகி உள்ளனர்.
அதிக காய்ச்சல, உடல்வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரும் இரட்டை நிமோனியா நோய்க்கான அடிப்படைக் காரணம் லெஜியோனேயர்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார மந்திரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நோயின் பெயர் ‘லெஜியோனேயர்ஸ்.’ இது, ‘லெஜியோனெல்லா’என்ற பாக்டீரியாவால் ஏற்பட்டு, நுரையீரலை பாதிப்பதாக கூறப்படுகிறது. சான்-மிகுவல் டி-டுகுமான் நகரில் உள்ள ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், இதே பகுதியில் மேலும் 7 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.