தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தென்னிந்திய சினிமாவிலும் கூட ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று பெயரெடுத்திருக்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும்தான்.
இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் முன்னணி கமர்ஷியல் ஹீரோக்கள் படங்களில் ஜோடியாக நடிப்பது. அடுத்து கதாநாயகியை மையமாக கொண்ட படங்களை தைரியமாக தேர்ந்தெடுப்பது. மூன்றாவதாக சமீபகாலமாக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ஒடிடி தளங்களில் நயன்தாரா படங்களுக்கு மவுசு அதிகமிருப்பது.
இதனால் நயன்தாராவுக்கு ஒரு முன்னணி கமர்ஷியல் ஹீரோவுக்கு இருக்கும் அத்தனை ப்ளஸ்களும், மார்க்கெட்டும் இருக்கிறது.
இதைவிட வேறென்ன வேண்டும். கமர்ஷியல் ஹீரோக்களை போலவே நயனும் தற்போது சம்பளத்தை உயர்த்திவிட்டார்.
கோவிட் தாக்கத்திற்கு முன்பாக நான்கு முதல் ஐந்து கோடி வரை சம்பளமாக வாங்கி வந்தார் நயன்தாரா. ஆனால் திருமணம் ஆன வேகத்திலேயே ஹிந்திப் படத்தில் கமிட்டான நயன்தாரா சைலண்ட்டாக தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார்.
தற்போது புதுப்படங்களில் நடிப்பதற்கு எட்டு கோடி சம்பளமாக கேட்கிறாராம். ஆனால் அதற்கும் தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
சினிமா தலையெடுக்க வழிக்காட்டும் தெலுங்கு சினிமா
தெலுங்கு ஃப்லிம் சாம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் ஒரு முக்கிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் நடைபெற்ற வேலை நிறுத்தமான ’டோலிவுட் பந்த்’திற்கு பிறகு இம்முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதன்படி, நட்சத்திரங்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இனி தினசரி சம்பளம் கிடையாது.
இனி நட்சத்திரங்களின் சம்பளத்தில் அவர்களது ஊழியர்களின் சம்பளம், ஷூட்டிங்கிற்காக உள்ளூரில் மேற்கொள்ளும் போக்குவரத்து செலவு, உள்ளூரில் தங்கும் செலவு, ஷூட்டிங்கில் ஏதாவது உணவு சாப்பிட்டால் அதற்கான செலவு அனைத்தும் அடங்கும். இதனால் சம்பளத்தை தனது படத்தில் நடிக்கும் நட்சத்திரம் அல்லது கதாபாத்திரங்களின் அடிப்படையில் தயாரிப்பாளரே முடிவு செய்வார். நட்சத்திரங்கள் தொடர்பான சம்பளம் முடிவு செய்யப்பட்ட பிறகு வேறெந்த பணத்தையும் தயாரிப்பாளர் நேரடியாக கொடுக்க கூடாது.
இதே விதி முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பொருந்தும்.
படம் தொடர்பான ஒப்பந்தம் அனைத்து சம்பள விவரங்களுடன், ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே முடிவு செய்யப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் அனைத்தும் சாம்பரினால் உறுதி செய்யப்பட வேண்டும்.
முடிவு செய்யப்பட்ட கால்ஷூட் / ஷூட்டிங் நேரம் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். அதேபோல் தினசரி ஷூட்டிங் குறித்த அறிவிக்கை பராமரிக்கப்படவேண்டும்.
திரைப்படங்களில் ஒடிடி மற்றும் தொலைக்காட்சி பார்னர்கள் பெயர்கள் இனி இடம்பெறாது.
படம் வெளியானது 8 வாரங்களுக்கு பின்பே இனி ஒடிடி-யில் வெளியிடலாம்.
இப்படி பல முக்கிய அம்சங்கள் தெலுங்கு சினிமாவில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியாக கோலிவுட்டிலும் பரபரப்பு தொற்றியிருக்கிறது.
இதனால் செப்டெம்பர் 5-ம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் இடையே ஒரு கூட்டு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.