No menu items!

நியூஸ் அப்டேட்: இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு – ஓபிஎஸ்ஸுக்கு மீண்டும் பின்னடைவு

நியூஸ் அப்டேட்: இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு – ஓபிஎஸ்ஸுக்கு மீண்டும் பின்னடைவு

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளரும் அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான வைரமுத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “பொதுக்குழு செல்லாது, அதிமுகவில் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும்” என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு, எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி இல்லம் முன்பு குவிந்த அவரது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்புகிறார்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் ஆட்சியில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினரை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து, அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபச்சே பதவியை துறந்து விட்டு நாட்டை விட்டே ஓடி விட்டார். முதலில் மாலத்தீவில் தஞ்சம் அடைந்த அவர் அதன் பிறகு சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து வெளியேறிய அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருக்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் ஓட்டல் அறையை விட்டு வெளியே வரக்கூடாது என அந்நாட்டு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் கோத்தபய ராஜபச்சே கடந்த மாதம் இறுதியில் இலங்கை திரும்புவார் என தகவல் வெளியானது. ஆனால், அவர் வந்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் திட்டமிட்டதால் அவர் சொந்தநாடு திரும்ப முடியாமல் தவித்தார். இந்நிலையில், ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனா கட்சி தற்போதைய அதிபரான ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதை ஏற்று அவர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் கோத்தபய ராஜபக்சே நாளை (3-ந்தேதி) இலங்கை திரும்ப உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு: டி.ஆர். பாலுவுக்கு கலைஞர் விருது

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி ஆண்டு தோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படும். இதையொட்டி பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். இதன்படி இந்த ஆண்டு விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டது. அதில், “பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும், கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கும், பாவேந்தர் விருது புதுச்சேரியை சேர்ந்த சி.பி. திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படும். இந்த விருதுகள் 15-ந்தேதி விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும்’ ஏன்று கூறப்பட்டுள்ளது.

பொன்னி நதி’ பாடலைப் பாடிய பம்பா பாக்யா திடீர் மரணம்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தில், ரஹ்மான் இசையில் உருவான ‘சிம்டாங்காரன்’ என்ற பாடலை பாடியிருந்தவர் பம்பா பாக்யா. ரஜினியின் ‘எந்திரன் 2.0’ படத்தில் இடம்பெற்ற ‘புள்ளினங்காள்’, விஜய்யின் ‘பிகில்’ படத்தில் ‘காலமே காலமே’, ‘சர்வம் தாளமயம்’ படத்தில் ‘டிங்கு டாங்கு’, ஆகியனவும் இவரது குறிப்பிடத்தக்க பாடல்கள். ஹிப் ஹாப் ஆதி இசையிலும் பாடி வந்தார். அண்மையில் வெளியான பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்திலும் இவர் பாடியிருக்கிறார். கடைசியாக மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ‘பொன்னி நதி காண்போமா’ என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் பாடகர் பம்பா பாக்யா இன்று காலமானார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பம்பா பாக்யா அகால மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடரும் நீட் மரணம்: 3வது முறையாக தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் தற்கொலை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் – வெண்ணியார் தம்பதியின் மகள் ராஜலெட்சுமி (வயது 21). மாணவி ராஜலட்சுமி நீட் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதி தோல்வி அடைந்துள்ளார். தற்போது 3ஆவது முறையாக எழுதியுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 தேதி வெளியிடப்படும் என அறிவித்ததை தொடர்ந்து தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மாணவி ராஜலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாய் – தந்தையின் மருத்துவ கனவை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் ராஜலட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த சேர்ந்தமரம் காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...