நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 100 மீட்டர் உயர இரட்டை கோபுரம், நேற்று வெடிகுண்டுகளை வைத்து 10 வினாடிகளில் தரைமட்டம் ஆக்கப்பட்டது. அப்பகுதி மக்களின் நீண்டநாள் போரட்டத்துக்குப் பிறகு இந்த கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.
கட்டிடத்தை இடித்து ஒருநாள் ஆகியுள்ள நிலையில், அப்பகுதியின் தற்போதைய நிலை என்ன என்று பார்ப்போம்…
நொய்டா இரட்டை கோபுரத்தை தகர்ப்பதற்கு முன்பு, அதற்கு அருகில் இருந்த அடுக்கு மாடி கட்டிடங்கள் பிரம்மாண்டமான துணிகளால் போர்த்தப்பட்டடன. கட்டிடங்களுக்குள் தூசு போகாமல் இருப்பதற்காக அவை துணிகளால் போர்த்தப்பட்டன. . கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று நடைபெற்றாலும் அந்த துணிகள் இன்றுதான் நீக்கப்பட்டன.
இரட்டைக் கோபுரத்தை இடிக்கும்போது அப்பணியில் ஈடுபட்ட 7 பேர் மட்டுமே அதன் 100 மீட்டர் சுற்றளவில் இருந்துள்ளனர். அதில் 3 பேர் இந்தியர்கள். 4 பேர் வெளிநாட்டினர்.
நொய்டா செக்டார் 93 ஏ பகுதியில் இடிக்கப்பட்ட இரட்டைக் கோபுரத்தின் அருகில் இருந்த கட்டிடங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு வெளியேற்றப்பட்டனர். கட்டிடத்தை இடிக்கும் பணி 2.30 மணிக்கு முடிந்தாலும், இரவு 11 மணிக்குப் பிறகே அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு சில வீடுகளின் ஜன்னல்கள் இரட்டை கோபுரத்தை தகர்க்கும்போது இடிந்ததாகவும், மற்றபடி பெரிய அளவில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனவும் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இரவு 11.30 மணிக்கு வீடு திரும்பினோம். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வீடுகளில் தூசி படியவில்லை. ஆனால் டைனமைட்டின் வாசனை மட்டும் இருந்தது. நாங்கள் ஏசியை போட்டுவிட்டு தூங்கிவிட்டோம்” என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நொய்டா செக்டார் 93 ஏ பகுதி குடியிருப்புகளுக்கான பூங்காவை அமைக்கும் இடத்தில்தான் அதன் பில்டர்கள் விதிகளை மீறி இந்த இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளனர். இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் நடத்திய சட்டப் போராட்டங்களின் பயனாக நேற்று அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் இன்று (ஆகஸ்ட் 29) மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிக்கு அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட நிலையில் 80 ஆயிரம் டன் இடிபாடுகள் அப்பகுதியில் தேங்கியுள்ளன. இவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் அந்த இடிபாடுகளை முழுமையாக அகற்ற இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இரட்டை கோபுரத்தை இடித்ததால், தங்களுக்கு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அதைக் கட்டிய சூப்பர்டெக் நிறுவனத்தின் தலைவர் ஆர்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.