No menu items!

நியூஸ் அப்டேட்: பீகார் மாநிலத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை

நியூஸ் அப்டேட்: பீகார் மாநிலத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை

பீகார் மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு தரப்பட்டிருந்த பொது அனுமதியை நிதிஷ்குமார் அரசு ரத்து செய்துள்ளது. சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த பொது அனுமதி திரும்பப் பெறப்பட்டதன் மூலம் இனி மாநில அரசின் அனுமதி இல்லாமல் அல்லது நீதிமன்ற உத்தரவு இன்றி நேரடியாக சிபிஐயால் பீகாரில் விசாரணையை முன்னெடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நிதிஷ் குமாரின் இந்த முடிவை விமர்சித்துள்ள பாஜக, “ஊழல்வாதிகளை பாதுகாக்கவே நிதிஷ் குமார் இந்த முடிவை எடுத்துள்ளார். இது கூட்டாட்சிக்கு தத்துவத்திற்கு எதிரானது” என்று சாடியுள்ளது.

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் குடும்பத்தினர் தொடர்புடைய வழக்குகளை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பீகார் அரசு இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி முதல்  5G சேவை: முகேஷ் அம்பானி அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 45ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) இன்று நடைபெற்றது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, இந்த கூட்டத்தில் பேசுகையில், “ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துகிறார்கள். தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும். 2023 டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 5ஜி இணைய சேவை மூலம் தற்போது உள்ள 4ஜி சேவையைவிட 10 மடங்கு வேகத்தில்  தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும்” என்று கூறினார்.

அந்தமான் சிறையிலிருந்து ‘புல் புல்’ பறவையில் பறந்தார் சாவர்க்கர்: கர்நாடக பாடப் புத்தகத்தால் சர்ச்சை

கர்நாடக மாநிலம் 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில், வி.டி. சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது சிறைக்கு வந்த பறவையின் மீதேறி தன் தாய்நாட்டை தரிசிக்க செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையாகி இருக்கிறது.

குறிப்பிட்ட அந்த புத்தகத்தில், ‘சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால், அந்த அறைக்கு அன்றாடம் புல்புல் பறவைகள் வந்து செல்வதுண்டு. சாவர்க்கர் அந்த புல்புல் பறவையில் இறகுகளில் ஏறி ஒவ்வொருநாளும் தன் தாய்நாட்டை தரிசித்து வருவார்” என்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து உண்மைக்குப் புறம்பானதை மாணவர்களுக்குக் கூறி வரலாற்றைத் திரிப்பதா என்று எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.

கனல் கண்ணன் ஜாமின் மனு: காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்து முன்னணி அமைப்பு சார்பில் சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், “ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும்” என்று மூன்றுமுறை ஆக்ரோசமாக பேசியிருந்தார். இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அளித்த புகார் அடிப்படையில், கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து, ஜாமீன் கோரி கனல் கண்ணன் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ‘தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை. சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸார் தரப்பில், “இன்று காலை நகரின் வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் உட்பட மூன்று பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் துப்பாக்கிச் சூடு எந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. துப்பாக்கிச் சுட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 2022 தொடங்கியதிலிருந்து இதுவரை 309 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...