இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த ‘பெகசாஸ்’ உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் குழு ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையில் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அந்தக் குழுவின் அறிக்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறுகையில், அரசு ஒத்துழைக்கவில்லை என்று நிபுணர் குழு கூறியதை சுட்டிக் காட்டி கண்டனத்தை தெரிவித்தார். “இங்கே எப்படி ஒத்துழைக்கவில்லையோ அதேபோல் அங்கே விசாரணை ஆணையத்திலும் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை போல” என்றார். அதற்கு அரசு தரப்பு சொலிசிட்டர் ஜெனரல், அது பற்றி தனக்குத் தெரியாது என்று கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஓபிஎஸ்ஸுடன் இணைய வாய்ப்பே இல்லை – இபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், “தனி நீதிபதி ஜெயசந்திரன், ஒ.பன்னீர்செல்வம் என்ற தனி நபர் பயனடையும் வகையில் தான் தீர்ப்பு வழங்கி உள்ளார். 1.5 கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் அல்ல.
அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறு. 2,539 பொதுக்குழு உறுப்பினர்களும் எங்கள் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் அளித்துள்ளனர். பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக்கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் தான் வழக்கே தொடரப்பட்டது. பின்னர் எப்படி இருவரும் இணைந்து செயல்பட முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைத்து செயல்படவில்லை என்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுவார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கம் – தமிழ்நாடு ஆளுநர்பேச்சு
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை இன்று திறந்து வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது. ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்புதான் சிறந்த திருக்குறள் மொழிபெயர்ப்பு. ஆனால், ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் இருந்து பக்தி என்ற கண்ணோட்டம் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் யோக கலையின் முக்கியத்துவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்கள் காலனி மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட திருக்குறள் மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையான பொருட்களை வெளிக்கொணர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் குறித்து மீண்டும் மறு ஆய்வு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும், சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் உள்ள அதிகாரங்கள் குறித்து ஆராயுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதி ஏ.எம். கான்வில்சர் தலைமையிலான அமர்வு, அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்க தடையில்லை என்றும், சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு என்றும் கடந்த ஜூலை 27-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இதனையடுத்து, இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘அமலாக்க துறையின் வழக்கு தகவல் அறிக்கையை குற்றம் சாட்டப்படும் நபருக்கு வழங்குவது உள்பட முதன்மையாக இரண்டு சிக்கல்களுக்கு மறு பரிசீலனை தேவை. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறையின் இரண்டு அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும். ஒருவர் குற்றமற்றவராக இருக்கலாம் என்ற அனுமானத்தை நிராகரிக்க அதிகாரம் உள்ளது என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என்றனர். தொடர்ந்து மனு தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க கோரி நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
கழிவுநீர்த் தொட்டிக்குள் மனிதர்கள் மரணிக்கும் அவலம்: இந்திய அளவில் தமிழகம் 2-வது இடம்
கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தவர்கள் குறித்த புள்ளி விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 1993-ம் ஆண்டு முதல் கடந்த 2022 ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது 966 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில், தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 218 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 207 பேருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தில் 136 பேர், உத்தரப் பிரதேசத்தில் 105 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.